மன்னிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது எப்படி?
By DIN | Published On : 10th December 2021 06:08 PM | Last Updated : 11th December 2021 10:14 AM | அ+அ அ- |

குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் பலரும் முனைப்பாக உள்ளனர். ஆனால், குழந்தைப் பருவத்தில் அனைத்தையும் புரிந்துகொள்ளும் பக்குவம் அனைத்துக் குழந்தைகளிடமும் இருப்பதில்லை.
எனினும் முடிந்தவரையில் சிறுவயதில் இருந்தே பெரியவர்களை மதிப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது உள்ளிட்ட நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
பெற்றோரின் நடவடிக்கைகள்கூட குழந்தைகளிடம் அதிகம் பிரதிபலிக்கின்றன. சொல்வதைக் கேட்காமல் பார்த்து தெரிந்து நடந்துகொள்ளும் குழந்தைகள் அதிகம். அதனால் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் நல்ல பழக்கவழக்கங்களை முதலில் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும்.
அந்தவகையில் மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தை கற்றுக்கொடுப்பது குழந்தைகளுக்கு எப்படி? என்பது குறித்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் சில முடிவுகள் தெரிய வந்துள்ளன. ஆய்வின் முடிவுகள் 'ஜர்னல் ஆப் எக்ஸ்பெரிமண்டல் சைக்காலஜி' (Journal of Experimental Psychology) இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
மன்னிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்று. உறவுகளை மீட்டெடுக்கவும் உறவுகளுடன் சண்டைகளைத் தவிர்க்கவும் மன்னிப்பு அவசியமாகிறது. மன்னிக்கும் குணமே மனித இனத்தின் பண்பு என்றும் கூறப்படுவதுண்டு.
அதன்படி, குழந்தைகளுக்கு மன்னிக்கக் கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இரு குழந்தைகளுக்கு இடையே சண்டை ஏற்படும் பட்சத்தில், தவறு செய்யும் குழந்தை மன்னிப்பு கேட்டால் அந்த நட்பு நீடிக்கும்.
குழந்தைகளுக்கு மன்னிப்பு வழங்க கற்றுக்கொடுத்தால் அவர்களும் அந்த மன்னிப்பைப் பெறுவார்கள். மற்றவர்களின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதன் மூலம், மற்றவர்களை மன்னிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 185 குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
இதையும் படிக்க | செயற்கை குளிர்பானங்கள் அருந்தக்கூடாது! ஏன்? நுகர்வுக்கான காரணங்கள் என்ன?
அப்போது மூன்று முக்கிய முடிவுகள் தெரிய வந்தன.
முதலாவதாக, குழந்தைகள் யாரிடமாவது மன்னிப்புக் கேட்டிருந்தால் அவர்கள் பிறரை மன்னிக்கும் வாய்ப்பு அதிகம்.
இரண்டாவதாக, தங்களுடன் நெருக்கமாக இருப்பவர்களை குழந்தைகள் மன்னிக்கிறார்கள்.
மூன்றாவதாக, ஒரு குழந்தையின் மனத்திறன் அடிப்படையாகவே மன்னிக்கும் குணத்தை அதிகம் பெற்றுள்ளது.
ஆய்வின் முதன்மை ஆசிரியரும் வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தின் உளவியல் இணை பேராசிரியருமான கெல்லி லின் முல்வி கூறுகையில், 'குழந்தைகளுக்கு மற்றவர்களை மன்னிக்கும் சிறந்த திறன்கள் அடிப்படையாகவே இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். குழந்தைகள் உறவுகளை மீட்டெடுக்கும் திறன் கொண்டவர்கள். அவ்வாறு செய்வதில் அவர்கள் ஆர்வமாகவும் உள்ளனர்.
அர்த்தமுள்ள விதத்தில் மன்னிப்பு கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் உதவ வேண்டும். அதுபோல குழந்தைகள் நேர்மையற்ற மன்னிப்பைக் கண்டறியும் திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவர் உண்மையாக மன்னிப்பு கேட்கிறார்களா என்பதும் அவர்களுக்குத் தெரிகிறது.
எனவே, மன்னிப்பின் அவசியம், முழு மனதுடன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டலும் அதுபோல மன்னிப்பு வழங்குதல் குறித்தும் குழந்தைகளுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
குழந்தைகளுக்கு ஒருவரை மன்னிக்க (மன்னிப்பு வழங்க) கற்றுக்கொடுத்தால் ஏதோ ஒரு சூழ்நிலையில் அவர்களும் மன்னிப்பைப் பெறும்போது மன்னிப்பின் அவசியம் குறித்து புரிந்துகொள்வார்கள்.
இதையும் படிக்க | மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன?