முகப்பு லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல்
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
By எம். முத்துமாரி | Published On : 07th December 2021 05:44 PM | Last Updated : 07th December 2021 06:02 PM | அ+அ அ- |

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி.. 'எப்படி மகிழ்ச்சியாக இருப்பது?' என்பதே. வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டறிய ஏதோதோ வழிகளில் முயற்சிக்கின்றனர்.
துக்கத்தைப் போக்க உற்சாகம் தரும் பேச்சுகளைக் கேட்பது, அடிக்கடி பயணம் மேற்கொள்வது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர். சிலர் பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நினைக்கின்றனர். பணம் இருப்பவர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கேத் தெரியும்.
மாறாக, எதனால் மனம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் அறிய முற்படுவதில்லை.
வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அதேபோல அவ்வளவு கடிமானதும் அல்ல.
அனைவருடைய மகிழ்ச்சி என்பதும் ஒரே அளவாக இருப்பதில்லை. ஒவ்வொருவரைப் பொருத்தும் மகிழ்ச்சியின் அளவு வேறுபடுகிறது.
இதையும் படிக்க | செயற்கை குளிர்பானங்கள் அருந்தக்கூடாது! ஏன்? நுகர்வுக்கான காரணங்கள் என்ன?
நாள் ஒன்றுக்கு ஒருவேளை சாப்பிடும் ஒருவருக்கு மூன்று வேளை நல்ல சாப்பாடு கிடைத்தால் அதுவே அவருக்கு மகிழ்ச்சி. தொழிலதிபர் ஒருவருக்கு 10 கோடி ரூபாய் ப்ராஜெக்ட் ஒப்புதலானால் மகிழ்ச்சி. பிடித்த இடத்தில் ஒரு மணி நேரம் தனிமையில் அமர்ந்திருந்தால் ஒருவருக்கு மகிழ்ச்சி... இவ்வாறாக ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியின் இலக்கு வித்தியாசமானது.
மேலும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது முழுக்கமுழுக்க உங்களை மட்டுமே சார்ந்தது.
மகிழ்ச்சியாக இருக்க சில வழிகள்
'நோ' சொல்லுங்கள்
'நோ' என்ற சொல் எதிர்மறை வார்த்தை என்று கட்டமைக்கப்பட்டுவிட்டது. ஆனால், சில விஷயங்களுக்கு 'நோ' சொல்வது தான் நமக்கு நல்லது. உங்களால் முடியாது என்று கருதும் விஷயங்களுக்கு கொஞ்சமும் யோசிக்காமல் நோ சொல்லிவிடுங்கள். 'இல்லை, முடியாது' என்று சொல்லக் கற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக உணரத் தொடங்குவதற்கான விரைவான வழியாகும். எல்லாவற்றும் 'ஆம்' சொன்னால், அதனாலும் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.
மொபைல் போன்
மனிதனின் ஆகப்பெரும் நேரத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் மிக முக்கிய சாதனங்களில் ஒன்று மொபைல் போன். தகவல் தொடர்புக்காக மட்டும் பயன்படுத்த வந்த மொபைல்போன்கள் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
மேலும், அதிகப்படியான மொபைல் பயன்பாடு உங்களின் மற்ற மகிழ்ச்சியான செயல்பாடுகளைத் தடுப்பதுடன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. எனவே, மொபைல் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.
இயற்கை
வெளியே சென்று இயற்கையை ரசிப்பது பலருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். பசுமையான இடங்கள், பறவைகளின் ஒலி, அல்லது உங்களுக்குப் பிடித்த இடங்கள், உங்கள் மனதுக்கு அமைதி தரக்கூடிய இடங்களுக்குச் செல்லுங்கள். நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது வீட்டைவிட்டு வெளியே செல்லுங்கள். இதற்காக நீங்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளத் தேவையில்லை. மாறாக, தெருவில் சில நிமிடங்கள் நடந்தாலே போதுமானது.
இதையும் படிக்க | தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்தால் மகிழ்ச்சி கிடைக்குமா? என்றால் ஆம் கிடைக்கும் என்பதே உண்மை. உடற்பயிற்சி உடலில் மகிழ்ச்சிக்கான எண்டோர்பின்கள் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களை சுரக்கச் செய்கின்றன .
உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடலுக்கும் மனதிற்கும் இடையே உள்ள இடைவெளி குறைகிறது. நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு நன்றாக உணர்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் மனதளவிலும் நன்றாக உணர முடியும்.
மற்றவர்களுடன் பேசுங்கள்
நவீன காலத்தில் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துப் பேசுவது என்பது குறைந்துவிட்டது. இயந்திர வாழ்க்கை போன்ற நிலையே பெரும்பாலான நகரங்களில் காணப்படுகிறது. இதனால் பலரும் தனிமையை உணரலாம். எனவே, உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க எல்லோரிடமும் அன்பாகப் பேசுங்கள். உங்கள் நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். சாலையில் செல்லும்போது தினமும் ஒருவருடனாவது புதிதாகப் பேசுங்கள். இது சமூக அறிவை உங்களுக்கு பெற உதவும். சமூக அறிவு உங்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கும்.
இறுதியாக, மகிழ்ச்சிக்கு வரையறை இல்லை. கஷ்டத்தை எல்லாம் விலக்கிவிட்டு உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். மனதுக்கு எதிராக செயல்படும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது. யாருக்காகவும் எதற்காகவும் உங்கள் மனதுக்கு எதிரான ஒரு விஷயத்தைச் செய்யாதீர்கள். மகிழ்ச்சிக்கு இதுவே போதுமானது.
இதையும் படிக்க |மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன?