மூன்று வேளையும் மேகி நூடுல்ஸ்: விவாகரத்து கோரும் கணவர்

உணவே மருந்து என்ற வகையில் வாழ்ந்து வந்த நமது மூதாதையர்கள் தற்போது இருந்திருந்தால் நிச்சயம் ரத்தக் கண்ணீர் விட்டிருப்பார்கள்.. நமது வாழ்முறை மற்றும் உணவு முறையைப் பார்த்து.
மூன்று வேளையும் மேகி நூடுல்ஸ்: விவாகரத்து கோரும் கணவர்
மூன்று வேளையும் மேகி நூடுல்ஸ்: விவாகரத்து கோரும் கணவர்


மைசூரு: உணவே மருந்து என்ற வகையில் வாழ்ந்து வந்த நமது மூதாதையர்கள் தற்போது இருந்திருந்தால் நிச்சயம் ரத்தக் கண்ணீர் விட்டிருப்பார்கள்.. நமது வாழ்முறை மற்றும் உணவு முறையைப் பார்த்து.

அந்தக் காலத்தில் வீட்டில் மறைந்த உறவுகளின் புகைப்படங்களை மாட்டும் பழக்கம் இருந்தது. நல்லவேளை அந்தப் பழக்கமும் வழக்கொழிந்துவிட்டது. இதனால், அவர்கள் புகைப்படம் வாயிலாகக் கூட நம்மைப் பார்த்து கண்ணீர் வடிக்க வேண்டியதில்லை.

சரி நேராக விஷயத்துக்கு வருவோம்.. துரித வாழ்க்கை முறையால் ஏற்பட்ட அதிருப்தியால் கணவர் ஒருவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.  பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கும் நீதிமன்றத்துக்கு, அவற்றில் ஒன்றாக இது அமைந்துவிட்டது.

வெறும் மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுக்கும் மனைவியிடமிருந்து ஒருவர் விவாகரத்துக் கேட்டுள்ளதாக முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.எல். ரகுநாத் இந்த வழக்கு குறித்து கூறுகையில், பெல்லாரி மாவட்ட நீதிமன்றத்தில் சிறு சிறு தகராறு காரணமாக ஒரு தம்பதி விவாகரத்து கேட்டு வந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது, விவாகரத்துக் கேட்கும் கணவர் கூறுகையில், தனது மனைவிக்கு நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சமைக்கத் தெரியவில்லை. காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுக்கிறார். கடைக்குச் சென்று மளிகை சாமான் வாங்கினால், வெறும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை மட்டுமே வாங்கிக் கொண்டு வருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கை நாங்கள் மேகி வழக்கு என்று குறிப்பிட்டுள்ளோம். இருவரும் மனம் ஒத்து விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர் என்கிறார் கனத்த இதயத்தோடு.

பொதுவாக திருமண உறவில் ஏற்படும் தகராறுகளை சரி செய்வது கொஞ்சம் கடினமானதுதான். நீதிபதி ரகுநாத் கூறுகையில், பொதுவாக அப்படி தம்பதிகள் விவாகரத்து வரை வந்து சேர்வது என்பது தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி மட்டுமே. நாங்களும் தம்பதியை ஒன்று சேர்க்க, இதுபோன்ற உணர்வுப்பூர்வ விஷயங்களை கையிலெடுப்போம். இது பெரும்பாலும் உடல்ரீதியானது அல்ல மன ரீதியிலானதுதான். 800 - 900 விவாகரத்து வழக்குகளில் வெறும் 20 - 30 வழக்குகளில் மட்டுமே ஒன்று சேர்வார்கள். லோக் அதாளத் போன்றவற்றில் 110 விவாகரத்து வழக்குகளில் 32 வழக்குகளில் ஒன்று சேர்வார்கள் என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன. ஓராண்டு வரையிலாவது தம்பதிகள் ஒன்றாக சேர்ந்து வந்தால் மட்டுமே விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர முடியும். அந்த சட்டம் மட்டும் இல்லையென்றால், திருமண மண்டபத்திலிருந்து நேராக விவாகரத்துக் கேட்டு நீதிமன்றதுக்கு வந்துவிடுவார்கள் என்கிறார்.

திருமணம் முடிந்த அடுத்த நாளே கூட விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தம்பதியை பார்த்திருக்கிறோம். பிரச்னை குறித்து வாழ்க்கைத் துணையுடன் பேசாமல், தேவையில்லாத உப்பையும் காரத்தையும் பிரச்னையில் தூவி நீதிமன்றத்துக்கு வந்துவிடுகிறார்கள். திருமணத்தின் போது அணிந்திருந்த ஆடையின் நிறம் மோசமாக இருந்தது, மனைவியை வெளியே அழைத்துச் செல்லவில்லை போன்ற சின்ன சின்ன காரணங்களுக்காகக் கூட விவாகரத்துக் கேட்கிறார்கள்.

இதில், குடும்பத்தினர் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம் என்றெல்லாம் எந்த வேறுபாடும் இல்லை, ஊரகப் பகுதிகளை விடவும் நகரப் பகுதிகளில் விவாகரத்து அதிகம் பதிவாகிறது. காரணம், ஊரகப் பகுதிகளில் பெண்கள் பெரிய அளவில் வருவாய் ஈட்ட முடியாமல் இருப்பதும், குடும்ப உறுப்பினர்களுக்காக சகித்துக் கொண்டு வாழ்வதும் காரணமாக இருக்கின்றன. ஆனால் நகரப் பகுதிகளில் பெண்கள் நன்கு படித்து வேலைக்குச் செல்வோராக இருப்பதும் காரணமாக உள்ளது என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com