தனிமையிலே இனிமை காண முடியுமா? 5 வழிகள் இருக்கு

தனிமை.. இதை நாமே தேர்வு செய்யும் போது இனிக்கலாம்.. ஆனால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் போது கசக்கும்.
தனிமையிலே இனிமை காண முடியுமா? 5 வழிகள் இருக்கு
தனிமையிலே இனிமை காண முடியுமா? 5 வழிகள் இருக்கு
Published on
Updated on
2 min read


தனிமை.. இதை நாமே தேர்வு செய்யும் போது இனிக்கலாம்.. ஆனால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் போது கசக்கும். தற்போது மாறி வரும் வாழ்முறை காரணமாக சிறியவர்களும் பெரியவர்களும் இந்த தனிமை என்ற புதைக்குழிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

தனிமையிலேயும் இனிமையாக வாழ்வை நகர்த்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிறியவர்களாக இருந்தால் செல்லிடப்பேசிக்கு அடிமையாகிவிடுகிறார்கள். பெரியவர்களாக இருந்தால் தனிமையை கடக்க முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகிவிடும் நிலையும் நேரிடுகிறது.

தனிமைதான் பல நோய்களுக்கும் மன நோய்களுக்கும் அடித்தளமிடுகிறதாம். மனிதர்கள் பலரும் குழுவாக வாழும் வழக்கமுடையவர்கள். பிள்ளைகள் படிப்பு மற்றும் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்கள் இதனால் முதியவர்கள் தனிமைக்குள் சிக்கும் நிலை நீடிக்கிறது. இது சில காலம் என்றில்லாமல் அவர்கள் வாழும் காலம் வரை என்று மாறும்போதுதான் அது கொடுமையாகிறது.

எவ்வாறு இதனை உடைப்பது. இந்த சங்கிலியிலிருந்து எப்படி விடுபடுவது?
ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொள்ளலாம். பணமிருப்பவர்கள் புதிதாகக் கற்றுக் கொள்ளும் வகுப்புகளில் கூட இணையலாம். வயதான எங்களை எந்தக் குழுவில் இணைத்துக் கொள்வார்கள் என்று கருத வேண்டாம். வயதானவர்களின் தேவைகள் அதிகம் இருக்கும் குழுக்கள் பல இருக்கின்றன. தன்னார்வலர் போன்ற சிறு சிறு உதவிகளைச் செய்யும் குழுக்களை நீங்களே உருவாக்கவும் செய்யலாம்.

பழைய நண்பர்களை தேடலாம்
இப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பழைய நண்பர்களை எளிதாகத் தேடலாம். எனவே, நீங்கள் தோழமையுடன் பழங்கிய நண்பர்களைத் தேடிப் பிடித்து அவர்களும் உங்களைப் போல தனிமை வலைக்குள் சிக்கியிருந்தால், உங்களது நேரத்தைப் போக்க மனம் விட்டுப் பேசலாம்.
பழைய நினைவுகளை மீட்டெடுக்கலாம்.

உறவுகளை பலப்படுத்தலாம்
ஏற்கனவே நமக்கு ஏராளமான உறவுகள் இருக்கும். சிலர் நம்மிடம் அதீத பிரியத்துடன் இருந்திருப்பார்கள். அப்போது நமக்கிருந்த வேலையில் அவர்களை மறந்திருப்போம். எனவே, நம் மீது பாச மழை பொழியும் உறவுகளை மீட்டெடுத்து அவர்களுடன் நேரத்தை செலவிட முயலலாம். ஆனால், இதனை பொறுமையுடன் செய்ய வேண்டும். நல்ல உறவுகளாக இருப்பதும், நீங்கள் அவர்களுக்கு இடையூறாக இல்லாமல் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அடடா.. இதுவல்லவா சிறந்த தீர்வு
நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளை வீட்டில் வளர்க்கலாம். நிச்சயம் இவை உங்களுக்கு ஒரு நல்ல துணையாக இருக்கும். மீன் தொட்டி அல்லது பூச்செடிகள் வளர்ப்பதும் கூட நல்ல பலனைக் கொடுக்கும்.

விலங்குகள் அனைத்தும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் மீது அன்பு மழையைப் பொழியும்.

பேசிப் பழகுங்கள்..
இதுவரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூட யாரென்று தெரியாத நிலையில் வாழ்ந்திருப்பீர்கள். இனி அப்படி இருக்க வேண்டாம். காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே சென்று வேடிக்கைப் பார்க்கலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசலாம். உங்களை நீங்களே அறிமுகம் செய்து கொள்ளலாம். கோயில், பூங்கா போன்ற இடங்களுக்குச் சென்று உங்கள் ஊரில் வசிக்கும் உங்களுக்கு அறிமுகமான நபர்களுடன் பேசலாம். நேரத்தை செலவிடலாம்.

இது ரொம்ப முக்கியம்...
உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி, அழகுப்படுத்திக் கொள்ளுதல், சரும பராமரிப்பு போன்றவற்றை நேரம் செலவிட்டு அற்புதமாக செய்யலாம். உங்கள் உடலையும் மனதையும் இது இளமையாக்கும்.

புத்தகம் படிப்பீர்களா, ஆன்மிக ஈடுபாடா என எதில் எல்லாம் உங்களுக்கு ஆர்வமிருக்கிறதோ அதையெல்லாம் முயலலாம். உங்களை நீங்களே மிகவும் பிஸியாக வைத்துக் கொண்டால். உங்களை இந்த தனிமை ஒன்றும் செய்துவிடாது. தனிமையையும் இனிமையாக்கலாம்.

தனிமையை இனிமையாக்க இங்கே ஒரு பறவை செய்யும் மாயாஜாலத்தைப் பாருங்கள்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com