ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல்நலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மனநலமும் முக்கியம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நேர்மறையான வாழ்க்கைமுறை அவசியம்.
அந்தவகையில் இன்று வாழ்க்கைமுறையில் முக்கியமான பிரச்னையாக இருப்பது மனநலம். மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுகுறித்த விழிப்புணர்வும் பல்வேறு வகைகளில் மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் இன்று மனநல மருத்துவரை அணுகுகின்றனர்.
அடுத்து பதற்றம்.... இது இதயத் துடிப்பு, தூங்குவதில் சிரமம், எரிச்சல், சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைக் கடைபிடிப்பது, அடிக்கடி உடற்பயிற்சி செய்வது, இயற்கையுடன் அதிக நேரம் செலவிடுவது கவலையை குறைக்க உதவுவதோடு, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கவும் மனநலப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும்.
நேர்மறையான வார்த்தைகள்
எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் ஆறுதல் அளிக்கும் அல்லது ஊக்கமளிக்கும் வார்த்தைகள் தேவையாக இருக்கின்றன. 'இதுவும் கடந்து போகும்' 'எல்லாம் நன்மைக்கே' என்று அந்த கடினமான சூழ்நிலையையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். தினமும் இந்த வார்த்தைகளை சொல்லும்போது எதிர்மறை சிந்தனைகளும் நேர்மறையாக மாறும்.
இதையும் படிக்க | அடிக்கடி தலைவலியா? இந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்!
தியானம், யோகா
நிகழ்காலம்தான் நிரந்தரம் என்பதை உணர்ந்து கடந்த கால அல்லது எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களைத் தவிர்ப்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். அவ்வாறு, மன அழுத்தத்திற்கு தியானம் ஒரு நல்ல தீர்வு. நினைவாற்றலும் அதிகரிக்கும். கூடுதலாக, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, வயதாவதைத் தாமதப்படுத்துகிறது, இதயத் துடிப்பைக் குறைக்கிறது.
ஆல்கஹால், காஃபி
காஃபி கண்டிப்பாக உங்களை புத்துணர்வு அடைய வைக்க தேவைப்படும். ஆனால், உணர்வுகளை அதிகம் தூண்டக்கூடியது காஃபி. அட்ரினலின் அளவைக் கட்டுப்படுத்தும் மூளையின் நரம்பியக்கடத்திகளைத் தூண்டுகிறது. இதனால் இதயத் துடிப்பு அதிகமாதல் அல்லது நடுக்கம் ஏற்படும் என்பதால் கவலை, மன அழுத்தம் உள்ளவர்கள் காஃபி அருந்துவதைத் தவிர்க்கலாம்.
அதுபோல ஆல்கஹால், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனான கார்டிசோல் அளவை உயர்த்துகிறது. மேலும் பதற்றத்தை அதிகரிக்கிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆல்கஹாலையும் தவிர்க்க வேண்டும்.
டிவி, மொபைல்
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி வயதானவர்களும் டிவி, மொபைலில் அதிக நேரத்தைக் கழிக்கிறார்கள். குறிப்பாக அதிக மொபைல் பயன்பாடு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். நீண்ட நேரம் மொபைல் போன்களை உபயோகிப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
உறக்கம்
மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு மாபெரும் மருந்து தூக்கம். மன அழுத்தம் இருந்தால் தூக்கம் வருவது கடினம்தான். ஆனால், தூங்க முயற்சிக்க வேண்டும். தூக்கம் எந்தவித மன அழுத்தம், பதற்றத்தையும் குறைக்கும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிக்க | பொடுகுத் தொல்லையா? ஒரே சிறந்த வழி இதுதான்!