மாதவிடாயின்போது வயிற்றுப் பிரச்னையா? சாப்பிட வேண்டிய உணவுகள்!
By DIN | Published On : 07th December 2022 05:49 PM | Last Updated : 07th December 2022 05:51 PM | அ+அ அ- |

பெண்களுக்கு மாதவிடாயின்போது வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படுவது சாதாரணம். வயிற்றில் உறுமல் அல்லது உப்புசம், வயிற்று வலி ஏற்படலாம். எனவே, மாதவிடாய் நேரத்தில் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதை உறுதிசெய்ய வேண்டும். பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், நார்ச்சத்து நிறைந்த சில உணவுகளை எடுத்துக்கொள்வது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுப் பிரச்னைகளைக் குறைக்கும். சத்தான உணவுகளை பட்டியலிட்டு அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
இரும்புச்சத்து
♦ இரும்புச்சத்து உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இது மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று உப்புசத்தைக் குறைக்கும்.
♦ புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவு என்பதால் கோழி இறைச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் புரதம் அதிகமுள்ளது.
♦ ரத்தப்போக்கு பொதுவாக உடலில் இரும்புச்சத்து அளவைக் குறைக்கிறது. இதனால் வீக்கம், தலைச்சுற்றல், சோர்வு மற்றும் உடல்வலி ஏற்படலாம். எனவே பெண்கள் கீரையை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க | முகப்பருக்களை விரட்ட... சில எளிய குறிப்புகள்!
நார்ச்சத்து
♦ கீரைகளில் நார்ச்சத்தும் உள்ளது.
♦ இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு அவகேடோ எனும் வெண்ணெய் பழம் சிறந்த மருந்து. இதில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது.
♦ பாதாம் கொட்டைகள், முளைகட்டிய தானியங்கள் புரதம் அதிகம் உள்ளது. இவற்றில் வைட்டமின்கள், மெக்னீசியமும் அதிகம் உள்ளன. இவற்றைச் சாப்பிடுவதன் மூலமாக வயிற்று உப்புசத்தைக் குறைக்கலாம்.
மெக்னீசியம்
♦ மெக்னீசியம் அளவு குறைவாக இருக்கும்போது, மாதவிடாய் காலங்களில் வயிற்று உப்புசம் ஏற்படுவது பொதுவானது. வாழைப்பழங்களை சாப்பிடுவது மெக்னீசியம் அளவை அதிகரிக்க ஒரு எளிய முறையாகும். முந்திரி, கருப்பு சாக்லேட் மற்றும் பூசணி விதைகளிலும் மெக்னீசியம் அதிகம் உள்ளது.
♦ டார்க் சாக்லேட்டில் அதிக இரும்பு மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது செரோடோனின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மாதவிடாய் உப்புசத்தை நீக்குகிறது.
♦ வாழைப்பழம் மாதவிடாய் நேரத்தில் மனநிலையை மேம்படுத்தும். பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த வாழைப்பழங்கள் உங்கள் உடலின் அதிகப்படியான சோடியத்தை சமப்படுத்தவும், வயிற்றுப் பிரச்னைகளை சரிசெய்யவும் உதவும். மேலும், வாழைப்பழம் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
நீர்ச்சத்து
♦ மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று உப்புசத்தைப் போக்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகம் தண்ணீர் குடிப்பது ஒட்டுமொத்தமாகவே உடலுக்கு நன்மையைத் தரும். மேலும் தண்ணீர் குடிப்பது ஒருவரின் மனநிலையை மேம்படுத்துகிறது.
இதையும் படிக்க | மன அழுத்தம், பதற்றம் அதிகம் உள்ளதா? இந்த 5 விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!