எந்நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தவிர்ப்பது எப்படி?

எந்நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு கடந்த கால சம்பவமோ அல்லது எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடலை நினைத்துக் கொண்டே இருக்கிறீர்களா?
எந்நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தவிர்ப்பது எப்படி?

எந்நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு கடந்த கால சம்பவமோ அல்லது எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடலை நினைத்துக் கொண்டே இருக்கிறீர்களா? சுற்றி என்ன நடந்தாலும் நீங்கள் மட்டும் வேறு உலகத்தில் இருப்பது போன்று உணர்கிறீர்களா? அப்படியெனில் இந்த கட்டுரை உங்களுக்கானதுதான். 

நம்முடைய மூளை எப்போதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே தான் இருக்கிறது. சந்தோசம், துக்கம், குற்ற உணர்ச்சி, பாராட்டுகள் என எதோ ஒரு நிகழ்வைப் பற்றியோ அல்லது எதிர்காலம் குறித்த சிந்தனையோ ஓடிக்கொண்டிருக்கும். 

உண்மையில் நிகழ்காலத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு நீங்கள் கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதில் எதிர்காலம் என்றால்கூட பரவாயில்லை. ஆனால், கடந்த காலத்தை பற்றி யோசிப்பவராயின் நீங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

சாதாரணமாக என்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பது உங்களின் மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கத் தொடங்கும். அதிகமான சிந்திக்கும் பழக்கம் மன அமைதியை கெடுத்து உங்களை வருத்தப்படச் செய்யும். 

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் என்ன செய்யலாம்? சில குறிப்புகள். 

உங்களை அறிந்துகொள்ளுங்கள்

முதலில் நாம் யார்? நமக்கு என்ன வேலை? சந்தோசமாக இந்த வாழ்க்கையை வாழ என்ன வழி என்று தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையை பற்றி சிந்திக்கலாம். அதற்காக அதில் மூழ்கிவிடக்கூடாது. உங்கள் எண்ணங்களுடன் உங்கள் நேரத்தைச் செலவிடுவது உங்களை நன்றாக அறிந்துகொள்ள உதவும். நீங்கள் எதை சிந்திக்க வேண்டும்? எதை சிந்திக்க கூடாது என்று பட்டியலிட்டு அதனை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். தேவையில்லாத சிந்தனை வந்தால் உடனே அதைவிட்டு விலக முயற்சியுங்கள். பின்னாளில் இதுவே பழக்கமாகிவிடும். 

கடந்த காலத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

வாழ்க்கையில் எல்லாருக்கும் கசப்பான நிகழ்வுகள் நிகழ்வது இயல்புதான். அதிகப்படியான சிந்தனை மற்றும் அச்சம், கடந்தகால செயல்களில் இருந்துதான் அதிகம் வருகிறது. கடந்த கால நினைவுகளை, வருத்தங்களை, குற்ற உணர்வுகளை சுமந்துகொண்டே செல்ல விழைகிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்துவிட்ட ஒரு விஷயத்தை இப்போது ஏன் நாம் நினைக்க வேண்டும்? எனவே, கடந்த கால வருத்தங்களை ஏற்றுக்கொண்டு விடுங்கள். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாததால்தான் சிந்தனை அதிகமாகிறது. அதுபோல, உங்கள் தவறுகளை, உங்களின் எதிர்மறை நடத்தைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அவ்வாறெனில், நீங்கள் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த முடியும். 

மன அழுத்தம் வேண்டாம் 

நம்மைச் சுற்றி எதிர்மறை விஷயங்கள் அதிகம் இருப்பதாலும் அதனால் மன அழுத்தம் ஏற்படுவதாலும் தேவையில்லாத சிந்தனைகள் அதிகம் வருகிறது. அதில் அதிக நேரத்தை செலவிடுகிறோம். அந்த மன அழுத்தத்தை, பதற்றத்தை விடுவிக்கும் வழிகளை கண்டறிய வேண்டும். நீங்கள் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்களுடைய இன்றைய நாளை யோசித்துப் பாருங்கள், நல்ல விஷயங்களை நீங்கள் பாராட்டிக்கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயங்களை அடுத்தநாளில் தவிர்த்துவிடுங்கள். உங்களை மகிழ்விக்கும் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். 

கண்ணாடி சிகிச்சை

அதிகப்படியாக யோசிப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று சுய சந்தேகம். உங்களின் திறமையைப் பற்றியே உங்களுக்கு சந்தேகம் இருப்பது. என்னால் முடியாது என்ற நம்பிக்கையின்மை. இதுவே புதிதாக ஒரு விஷயத்தை ஆரம்பிப்பதில் கேள்விகளை எழுப்புகின்றன. இதனால் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 

இந்த சுய சந்தேகத்தைக் குறைக்கவும் சுய மதிப்பீட்டை அதிகரிக்கவும் ஒரு வழியே கண்ணாடி சிகிச்சை. ஒரு கண்ணாடி முன்பு நின்று உங்களை பார்த்து 'ஒரு நம்பிக்கையான நபர்' என்று நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். உங்களாலும் முடியும் என உங்களை நீங்களே பாராட்டி தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்த நல்ல திறமையான விஷயங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்? எவ்வளவு திறமையாக சிந்திக்கிறீர்கள் என்று கூறி உங்களை நீங்களே முத்தமிட்டுக்கொள்ளுங்கள். இப்போது முன்பைவிட நீங்கள் தைரியமாகவும் தெளிவாகவும் உணர முடியும். இதைத் தொடர்ந்து செய்துவர, ஒரு சிறந்த தன்னம்பிக்கையாளராக மாறிவிடுவீர்கள். 

எண்ணங்களே வலிமை தரும்! 

எண்ணங்களுக்கு இருக்கும் வலிமை அதிகம். முடிந்தவரை எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனை உள்ளவர்களுடன் பழகுங்கள். அது உங்களை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். உங்களின் நேர்மறை எண்ணங்களையும் மற்றவருக்கு பகிருங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com