மறதிக்கு மருந்தாகும் உணவுகள் என்னென்ன?

வால்நட் சாப்பிட்டால் அறிவாற்றல் பெருகும், ப்ளூபெரி சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும், மீன் எண்ணெய், மறதி நோய் வராமல் பாதுகாக்கும், இதெல்லாம் உண்மையா?
மறதிக்கு மருந்தாகும் உணவுகள் என்னென்ன?

வால்நட் சாப்பிட்டால் அறிவாற்றல் பெருகும், ப்ளூபெரி சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும், மீன் எண்ணெய், மறதி நோய் வராமல் பாதுகாக்கும் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் அதிகம் சொல்லப்படும் ஒன்று. ஆனால், இவை எல்லாம் உண்மையில் மறதிக்கு மருந்தா? பார்க்கலாம். 

'மறதி' மனிதனுக்கு இயற்கையானதுதான். ஆனால், மறதியின் அளவு அதிகரிக்கும்போதுதான் உடல் உறுப்புகளில் குறிப்பாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அறியப்படுகிறது. 

அந்தவகையில் அல்சைமர், டிமென்ஷியா என மறதி வியாதிகள் வகைப்படுத்தப்படுகின்றன. அல்சைமருக்கும் டிமென்ஷியாவுக்கும் வித்தியாசம் என்னவெனில், டிமென்ஷியா, பொதுவாக குறிக்கப்படும் மறதிநோய். அல்சைமர் என்பது டிமென்ஷியாவின் ஒருபகுதி. அல்சைமர் குறிப்பாக மூளையில் ஏற்படும் பாதிப்பைக் குறிக்கிறது. 

நினைவாற்றல், அறிவுத்திறன், பகுத்தறிவு, சமூகத் திறன்கள் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவற்றில் ஏற்படும் இழப்பே டிமென்ஷியா. டிமென்ஷியா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் 65 வயதிற்குப் பிறகு இது மிகவும் பொதுவானது. 

உலகத்தில் தற்போது 5.5 கோடி பேர் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். 

அறிகுறிகள்: 

ஆரம்ப நிலை: 

 • ​மறதி
 • நேரத்தை இழப்பது
 • பழக்கமான இடங்களில் தொலைந்து போவது.

நடுத்தர நிலை: 

 • சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் நபர்களின் பெயர்களை மறந்துவிடுதல்
 • வீட்டில் இருக்கும்போது குழப்பமடைதல்
 • தகவல்தொடர்பில் சிரமம்
 • தனிப்பட்ட கவனிப்பிற்கே உதவி தேவைப்படுவது. 
 • அலைந்து திரிதல் மற்றும் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பது உள்ளிட்ட நடத்தை மாற்றங்கள். 

தீவிர நிலை: 

 • நேரம், இடம் தெரியாமல் இருப்பது
 • உறவினர்கள் மற்றும் நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம்
 • சுய பாதுகாப்பு தேவை அதிகரிப்பது. 
 • நடக்க சிரமப்படுதல்
 • வலிய சண்டைக்குப் போவது உள்ளிட்ட தீவிர நிலை. 

மறதி எதனால்  ஏற்படுகிறது என்பது குறித்து தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், நினைவாற்றல் குறைப்பை சரிசெய்ய, அதாவது நினைவுத்திறனை அதிகரிக்க சில உணவுகளை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்த உணவுகளை சாப்பிடும்போது மூளையின் செயல்திறன் மேம்படுவதாகத் தெரிவிக்கின்றனர். 

என்னென்ன சாப்பிடலாம்? 

கீரைகள் 

கீரைகளில் அதிக சத்துகள் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது என்பதால் தொடர்ந்து உணவில் சேர்க்க வேண்டும். கீரைகள், நினைவுத்திறனை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடப்பு ஆண்டு, இஸ்ரேலில் 18 மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், கீரைகள், வால்நட் சாப்பிட்டவர்களுக்கு நினைவுத்திறன் நன்றாக இருந்ததும் அதுவே இறைச்சி சாப்பிட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. 

நிறமிக்க காய்கறிகள், பழங்கள் 

நல்ல நிறமுடைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது மூளையின் செயல்திறனுக்கு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்கின்றனர். 

2021ல் நடத்தப்பட்ட 77,000 பேர் கலந்துகொண்ட ஓர் ஆய்வில் கடந்த 20 ஆண்டுகளில் நிறம் மிகுந்த காய்கறிகள், பழங்கள், சாக்லேட், ஒயின் உள்ளிட்டவை சாப்பிட்டவர்களுக்கு மறதி ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது தெரியவந்துள்ளது. 

மீன் 

கடல் உணவுகள் அனைத்திலுமே ஒமேகா - 3 அமிலங்கள் அதிகம் இருப்பதால் அவை மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கு உதவுகின்றன. மேலும், மறதி ஏற்படுவதையும் குறைக்கின்றன. 

அதிலும், குறிப்பாக டி.எச்.ஏ. எனும் டோக்கோசாஹெக்ஸாநாயிக் அமிலம்(Docosahexaenoic acid), குளிர்ந்த நீர், சாலமன் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படுகின்றன. 

நட்ஸ், முழு தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகைகள், ஆலிவ் ஆயில் 

பாதாம், பிஸ்தா, வால்நட் ஆகிய உலர் பருப்புகள் நினைவாற்றலுடன் அதிக தொடர்புடையவை. 

நட்ஸ் அதிலும் குறிப்பாக வால்நட் சாப்பிடுபவர்களுக்கு நினைவுத்திறன் இழப்பு படிப்படியாக சரியாவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

அதுபோல பயறு மற்றும் பருப்பு வகைகளும் மூளையின் செயல்பாட்டுக்கு உகந்தவை. கடந்த 2017ல் இத்தாலியில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பங்கேற்ற ஆய்வில், வாரத்திற்கு மூன்று நாள்கள் பயறு சாப்பிட்டவர்களின் நினைவுத்திறன் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. 

மேலும், 2022ல் 92,000 அமெரிக்கர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆலிவ் ஆயில் உணவில் சேர்த்துக்கொள்வது, நரம்பு சிதைவு நோய் ஏற்படும் அபாயம் 29% குறைவதாகவும் மேலும், இறப்பு அபாயம் 8 -34% குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட உணவுகள் அனைத்துமே நினைவுத் திறனுடன் தொடர்புடையவை என பல்வேறு ஆய்வின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை உணவில் சேர்ப்பதன் மூலமாக மறதியை குறைக்க முடியும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 

டிமென்ஷியா அல்லது மறதியால் பாதிக்கப்படாதவர்கள்கூட இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமாக நினைவுத்திறனை அதிகரிக்க முடியும் என்பது கூடுதல் தகவல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com