சமையலில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?

இன்றைய குடும்பப் பெண்கள் பலருக்கும் சமையலும் சமையலறையும் மட்டுமே உலகம். அதனுடனேயே வாழப் பழகி விட்டனர் எனலாம்.
சமையலில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?

சமையலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மனநலமும் சிறந்து காணப்படும் என புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

இன்றைய குடும்பப் பெண்கள் பலருக்கும் சமையலும் சமையலறையும் மட்டுமே உலகம். அதனுடனேயே வாழப் பழகி விட்டனர் எனலாம். குடும்பத்தினருக்கு கொஞ்சம் கூட சலிக்காமல் மிகவும் பொறுமையாக காலை டீ-இல் இருந்து இரவு உணவு வரை சமையல் மட்டுமே செய்யும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

ஆனால், சமையல் ஒரு அலாதியான உணர்வுப்பூர்வமான கலை. சமைப்பதை ஒரு சிலர் மட்டுமே மிகவும் ரசித்து ருசித்து செய்கின்றனர். அதற்கு சமைப்பதில் அவர்களுக்கு அதீத ஆர்வம் இருக்க வேண்டும். சாப்பிடுவதில் ஆர்வம் இருக்கும் 'சிலருக்கு' மட்டுமே சமைப்பதிலும் அதே அளவுக்கு ஆர்வம் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. 

எந்த கடையில் நல்ல சாப்பாடு கிடைக்கிறது என்று தேடித் தேடி சாப்பிடும் உணவுப் பிரியர்களுக்காகவே இன்று ஹோட்டல்களின் எண்ணிக்கை பெருகிக் காணப்படுகிறது. சமையல் கலை நிபுணர்களின் கைவண்ணமே ஒவ்வொரு உணவுப் பிரியரையும் கடையை நோக்கி சுண்டி இழுக்கிறது. 

அந்தவகையில் சமையல் கலை பயில்பவர்களுக்கும் சரி, சமைப்பதில் விருப்பம் உள்ளவர்களுக்கும் சரி மனநலமும் நன்றாக இருக்கும் என்கிறது ஒரு புதிய ஆய்வு. 

எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் (ECU) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் 'பிரன்டியர்ஸ் இன் நியூட்ரிஷியன்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 657 பங்கேற்பாளர்களுக்கு சமையல் கலை கற்றுக்கொடுக்கப்பட்டது. இதில் அவர்களின் சமையல் மீதான நம்பிக்கை, மனநலம், நடத்தைகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டது. 

ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு, பங்கேற்றவர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தது தெரிய வந்தது. 

தரமான உணவுப் பழக்கத்தை எளிதில் மாற்றும் திறன் ஏற்பட்டதுடன் அது அவர்களின் வாழ்க்கை முறையையும் ஆரோக்கியமாக மாற்றியது கண்டறியப்பட்டது. 

மன ஆரோக்கியம் மற்றும் உணவின் முக்கியத்துவத்தை உணர சமையல் கலை உதவும் என இந்த ஆய்வு காட்டுவதாக முன்னணி ஆய்வாளர் டாக்டர் ஜோனா ரீஸ் தெரிவித்தார். 

மேலும் அவர், 'மக்களின் தற்போதைய உணவுப் பழக்கத்தினால் மனநல பாதிப்பு, உடல் பருமன், பிற வளர்சிதை மாற்ற கோளாறுகள் ஆகியவை அதிகரித்துக் காணப்படும் சூழ்நிலையில் அதனைத் தடுக்க சமையலை ஒரு உத்தியாக பயன்படுத்தலாம். 

வருங்காலத்தில் சத்தான உணவுகளை வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மக்களிடையே அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை அதிகம் சாப்பிடுவது உடல் எடை குறைவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை. உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனநலனும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சமைப்பதில் பாலின சமத்துவம் ஏற்பட வேண்டும்' என்றார். 

ஆய்வில் பங்கேற்றவர்களில் ஆண்களைவிட பெண்கள் சமைப்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதில் 23% பேர் ஆண்கள், 77% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com