காளான் சாப்பிடுவது ஆபத்தா? பக்க விளைவுகள் என்னென்ன?

காளான் சாப்பிடுவது பல நன்மைகளைத் தந்தாலும் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே, தரமான காளான் வாங்குவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். 
காளான் சாப்பிடுவது ஆபத்தா? பக்க விளைவுகள் என்னென்ன?

பலருக்கும் பிடித்தமான உணவுகளில் ஒன்று காளான். காளான் பல வடிவங்களில் அளவுகளில் சந்தைக்கு வருகின்றன. பலதரப்பட்ட சூழ்நிலைகளில் வளரும் தன்மை கொண்ட காளான், ஒரு பூஞ்சையாகும். 

காளானில் நாய்க் குடைக் காளான், முட்டைக் காளான், சிப்பிக் காளான், பால் காளான், பூஞ்சைக் காளான் என பல வகைகள் உள்ளன. காளான்களில் நஞ்சுடைய காளான்களும் இருக்கின்றன. எனினும் சாப்பிடக்கூடிய காளான்களே சந்தைக்கு அதிகம் வருகின்றன. 

காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

♦ காளானில் பொட்டாசியம், கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஆகியவை அதிகம் காணப்படுகிறது. 

♦ ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றன. 

♦ ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் அடைப்பை சரி செய்கிறது. இதனால், உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகளைத் தடுக்கிறது. 

♦ மூட்டு வலி, வாதம், மலட்டுத் தன்மை ஆகியவற்றுக்கு சிறந்த வலி நிவாரணி.

♦ பெண்களுக்கு கருப்பை நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

♦ மலச்சிக்கலைத் தவிர்க்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நரம்புகளுக்கு வலு சேர்க்க பயன்படுகிறது. 

♦ உடல் எடையைக் குறைப்பதிலும் காளானுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குறைந்த கலோரி உணவுகளில் குறிப்பிடத்தக்கது.  

எத்தனை நாள் பயன்படுத்தலாம்?

காளான்கள் இன்று அதிகமாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பெரும்பாலாக ஒருநாள் முன்னதாக அறுவடை செய்யப்பட்ட காளான் விற்பனைக்கு வருகிறது. காற்று புகாத அளவுக்கு நன்றாக பேக் செய்யப்பட்ட காளான்களை வாங்கலாம். 

உண்ணக்கூடிய காளான் என்பதை ஒருமுறை உறுதிசெய்துகொள்ளலாம். 

வெந்நீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்த பின்னர் காளான்களை பயன்படுத்த வேண்டும். 

அடுத்ததாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட காளான்களை அன்றைய தினமே பயன்படுத்திவிடுவது நல்லது. எனினும் காற்று புகாத அளவுக்கு நன்றாக பேக் செய்து பிரிட்ஜில் வைத்து இரண்டு முதல் மூன்று நாள்களுக்கு வைத்து பயன்படுத்தலாம். 

காளானின் மேற்புறத்தில் லேசாக பிசுபிசுப்புத் தன்மை ஏற்பட்டாலோ முழுவதுமாக நிறம் மாறிவிட்டாலோ பயன்படுத்தக்கூடாது. 

காளான் சாப்பிடுவது ஆபத்தா? 

சாப்பிடக்கூடிய காளான்களிலே, சில காளான்கள் சிலருக்கு ஒவ்வாமை, செரிமானப் பிரச்னையை ஏற்படுத்தும். சரியாக சுத்தம் செய்யாமல் சமைத்தாலும் பக்க விளைவுகள் ஏற்படும்.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட காளான்களில் 'காலாவதித் தேதி' இருக்கிறதா என்பதைப் வாங்க வேண்டும். 

பக்கவிளைவுகள் 

காளான் சாப்பிடுவதால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. 

1. உடல் சோர்வு

சிலருக்கு காளான் சாப்பிடுவது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மேலும் சோர்வு ஏற்படலாம். 

2. வயிற்றுக்கோளாறுகள்

குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, செரிமானம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகள் ஏற்படலாம்.

3. கவனமின்மை

காளான் சாப்பிட ஒரு சிலருக்கு போதை உட்கொண்டதுபோன்ற நிலை உருவாக்கும். காளான் சாப்பிட்டு அரை மணி நேரத்தில் அவர்கள் இந்த நிலையை அடையலாம், வயிற்றில் ஒருவித சத்தமும் கேட்கலாம். 

மறதியுடன்  தன்னிலை மறந்து கவனமின்றி இருக்கலாம். 

4. தோல் பிரச்னைகள்

சரும ஒவ்வாமை, தோல் பிரச்னைகள் ஏற்படலாம். சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகுதல், மூக்கு, தொண்டை வறண்டு போதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

5. கூச்ச உணர்வு

காளான் சாப்பிட 20 முதல் 30 நிமிடங்களில் சிலர் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்கிறார்கள். பின்னர், உடல் முழுவதும் ஒருவித கூச்ச உணர்வை அனுபவிக்கிறார்கள் சிறிது நேரம் கழித்து மனச்சோர்வு அடைகிறார்கள். 

6. கர்ப்பிணிகள் தவிர்க்கவும் 

கர்ப்பிணிகளும் தாய்மார்களும் காளான் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்வவர்கள் கூறுகின்றனர். இதனால் பாத்தபிக்கு அதிகமில்லை என்றாலும் பக்க விளைவுகளைத் தடுக்க உண்பதைத் தவிர்க்க வேண்டும். 

7. தலைவலி

காளான் சாப்பிட்டபிறகு தலைவலி உணர்வு ஏற்படலாம். சிலருக்கு ஒருநாளுக்கு மேலும் தலைவலி நீடிக்கலாம். 

8. பயம் 

காளான் சாப்பிடுவது, சில நபர்களுக்கு கவலையை ஏற்படுத்துகின்றன, இது லேசானது முதல் தீவிர நிலைகள் வரை இருக்கும். காளான்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது இந்த பக்க விளைவுகள் மோசமடைகின்றன.

9.மனநோய்

இது ஒரு தீவிரமான பக்கவிளைவு. காளான் சாப்பிட பிறகு பயம், பீதி போன்ற மனநல கோளாறுகள் ஏற்படலாம். 

10. மயக்கம்

சிலர் காளான் உட்கொண்ட சில மணிநேரத்தில் கடுமையான தலைச்சுற்றல் ஏற்படுவதாக புகாரளித்துள்ளனர். காளான்கள் அதிக அளவு உட்கொள்ளும்போது குழப்பத்தை ஏற்படுத்தும். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காளான் உண்பதைத் தவிர்த்துவிட வேண்டும். 

காளானில் மெர்குரி அளவு அதிகமாக இருந்தால்...

காளானில் மெர்குரி(பாதரசம்) அளவு அதிகமாக இருந்தால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படும். மெர்குரி நச்சுத்தன்மை கொண்டது. 

மெர்குரி அதிகமுள்ள காளானை சாப்பிடும்போது, 

  • கவலை
  • மனச்சோர்வு
  • எரிச்சல்
  • நினைவுத் திறன் குறைவு
  • உணர்வின்மை
  • கூச்சம்
  • நடுக்கம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. 

காளானில் பாதரசம் இருப்பதாக சந்தேகித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

வயது வந்தவர்களில் ஏற்படும் அறிகுறிகள்

மெர்குரி அதிகமுள்ள காளானை சாப்பிடும்போது வயது வந்தவர்களில்,

  • கேட்பதில், பேசுவதில் சிரமங்கள்
  • ஒத்துழைப்பு இல்லாமை
  • தசை சுருக்கம்
  • கைகள் மற்றும் முகத்தில் நரம்பு இழப்பு காரணமாக நடக்கும்போது பார்வை குறைபாடு ஏற்படலாம். 

குழந்தைகள் இதைச் சாப்பிடும்போது, 

பேசுவது, அறிவாற்றல், மொழி வளர்ச்சி, இதர திறன்களில் குறைபாடு ஏற்படலாம். வளரும் இளம் குழந்தைகளுக்கு இவை மிகவும் ஆபத்தானவை.

மெர்குரி மூளை வளர்ச்சியிலும் பிரச்னைகளை ஏற்படுத்தும். பாதரச நுகர்வினால் இளம் வயதிலேயே பாதிக்கப்படும் குழந்தைகளிடையே கற்றல் குறைபாடுகள் ஏற்படலாம். பெரியவர்களுக்கு மூளை மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.

எனவே, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட காளானில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை பார்த்து வாங்க வேண்டும். சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது எந்த அளவுக்கு முக்கியமோ அவை தரமான உணவுகள் என்பதை உறுதி செய்வதும் அவசியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com