'டயட்'டில் இருப்பவரா நீங்கள்? இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!

நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க பின்பற்ற வேண்டிய மூன்று விஷயங்கள்... சீரான உணவை உண்ணுதல், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மது, புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல்.
'டயட்'டில் இருப்பவரா நீங்கள்? இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!

நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க பின்பற்ற வேண்டிய மூன்று விஷயங்கள்... சீரான உணவை உண்ணுதல், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மது, புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே போதுமானது. 

அதிலும் ஊட்டச்சத்துமிக்க உணவை அளவோடு எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். உடல் எடையை சரியாக நிர்வகிக்க உடற்பயிற்சி செய்தாலும் உண்ணும் உணவு அதிகமாகவோ ஊட்டச்சத்து இல்லாததாகவோ இருந்தால் எந்த பயனும் இல்லை. 

உணவைப் பொருத்தவரை இன்று உடல் எடையைக் குறைக்க உடல் பருமன் கொண்டவர்கள் டயட்டில் இருக்க பலரும் முயற்சி செய்கிறார்கள். அந்தவகையில், வெவ்வேறு நிறங்கள் கொண்ட உணவை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் மெக்கன்சி பர்கெஸ்.

ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தெரிந்துகொண்டு சாப்பிட வேண்டும் என்கிறார். இந்த உணவு முறை உணவின் நீண்ட ஆயுளுக்கும் பங்களிக்கிறது. 

டயட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டிய உணவுகள் சில...

கீரைகள்

அனைத்து வகையான கீரைகள், முட்டைக்கோஸ் சத்துக்கள் நிறைந்த உணவாகும். அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும். வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளன.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கீரையையாவது உட்கொள்வது நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும். 

பெர்ரி

செர்ரி, ஸ்ட்ராபெரி, பிளாக் பெரி என உணவில் தினமும் ஏதேனும் ஒரு வகை பெரியை சேர்த்துக்கொள்ள வேண்டும். பெர்ரியைக் கொண்டு ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம் அல்லது ஓட்ஸில் சேர்த்து சாப்பிடலாம். 

நெல்லி, ராஸ்பெர்ரிகள் மற்றும் ப்ளாக்பெர்ரிகள் போன்ற பெர்ரிகளில் சிவப்பு, நீலம் மற்றும் ஊதா நிறங்களுக்கு காரணமான 'ஆந்தோசயனின்கள்' உள்ளன. இவை வயதாகும் தோற்றத்தைத் தடுக்கும் திறன் கொண்டவை. 

மீன் 

மத்தி, நெத்திலி மற்றும் சால்மன் ஆகிய மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கின்றன. அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. கீல்வாதம் மற்றும் இதய நோய் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும் உணவுகள். 

காலிஃபிளவர்

வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்கும் காலிஃபிளவர் குறைந்த கலோரி கொண்டது. மேலும், காலிஃபிளவரில் 'அந்தோக்சாந்தின்கள்' எனப்படும் ஒரு வகை தாவர நிறமி உள்ளது. இது உடலில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது.

தக்காளி

ஆன்டிஆக்ஸிடன்ட் லைகோபீன் அதிகம் கொண்ட உணவுப்பொருள். சில வகையான புற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் கரோட்டினாய்டை கொண்டிருக்கிறது. மேலும், தக்காளியில் பொட்டாசியம் அதிகமுள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

காபி

கிரேக்க பாணியில் தயாரிக்கப்படும் காபி உடலில் அழற்சியை எதிர்ப்பதுடன் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிரேக்க பாணியிலான காபி என்பது பால் கலக்காத காபி. தண்ணீரில் காபி பொடி, சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து குடிக்க வேண்டும். 

மூலிகை டீ

நீங்கள் டீ பிரியர் என்றால் டீ குடிப்பதை விட முடியவில்லை என்றால் அவசியம் மூலிகை டீயை எடுத்துக்கொள்ளுங்கள். துளசி, இஞ்சி, லெமன் டீயும் எடுத்துக்கொள்ளலாம். 

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் காணப்படும் பாலிபினால்கள் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து வகை. வயதாகும்போது ரத்த நாளங்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதில் உதவியாக இருக்கும் என்று கூறப்டுகிறது. 

அதிக அழற்சி எதிர்ப்புப் பலன்களைப் பெற, குறைந்தது 70 சதவிகிதம் 'கோகோ' கொண்ட டார்க் சாக்லேட் உட்கொள்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். 

பருப்பு, பயறு வகைகள்

பீன்ஸ், பருப்பு, பயறு வகைகள் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியவை.  ஏனெனில் இவற்றில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளன.

உதாரணமாக, ஒரு கப் வேகவைத்த பருப்பில் 18 கிராம் புரதம் மற்றும் 15 கிராம் நார்ச்சத்து உள்ளது. இவற்றில் உள்ள ஃபிளாவனாய்டுகள் எனும் ஊட்டச்சத்து மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com