கோடையில் சருமத்தைப் பராமரிப்பது எப்படி? 8 முக்கியக் குறிப்புகள்!

வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உங்களுடைய பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு குறைந்தபட்ச சன்ஸ்கிரீன் கிரீமுடன் தொடங்கலாம். 
கோடையில் சருமத்தைப் பராமரிப்பது எப்படி? 8 முக்கியக் குறிப்புகள்!

கோடைக் காலம் வந்துவிட்டது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரிக்கிறது. வெயில் காலம் என்றாலே சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது இயல்புதான். 

எந்தவகை சருமமாக இருந்தாலும் இந்த நேரத்தில் பிரச்னைகள் அதிகமாகவே இருக்கும். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகத்தில் அதிக எண்ணெயும், வறண்ட சருமம் கொண்டவர்களுக்கும் அதிகம் வறட்சியும் ஏற்படும். 

வெயிலினால் உடலில் நீர்ச்சத்து குறைவதனால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. சருமத்தின் நீரேற்ற அளவு சரியாக இருந்தால் மட்டுமே விளைவுகளைத் தவிர்க்க முடியும். 

வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உங்களுடைய பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு குறைந்தபட்ச சன்ஸ்கிரீன் கிரீமுடன் தொடங்கலாம். 

சிறு சிறு பராமரிப்புகளை மேற்கொண்டாலே சருமத்தைப் பாதுகாக்கலாம். 

கோடைக் கால சருமப் பராமரிப்புகள் 

1. உடலுக்கு ஈரப்பதம் 

சிலர் குளிர்காலத்தில் முகத்தை மட்டும் அடிக்கடி கழுவுவார்கள். ஆனால் உடலுக்கு குளிர்ச்சி தர உடல் முழுவதும் நீர்ச்சத்து அவசியம். கோடைக் காலத்தில் இருமுறை குளிக்கலாம். 

அதுமட்டுமின்றி உடலுக்கு ஈரப்பதம் அளிக்க, 'பாடி லோஷன்'(Body Lotion) பயன்படுத்தலாம். கோடையில் தோல் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளைத் தவிர்க்க இதனைப் பயன்படுத்தலாம். 

2. சன்ஸ்கிரீன்

கோடைக் கால தோல் பராமரிப்பில் 'சன்ஸ்கிரீன்' முக்கியப் பங்கு வகிக்கிறது. சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அதன் எஸ்.பி.எப். அளவு(SPF) 20-50க்குள் இருக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். 

நீங்கள் எப்போது வெளியே செல்கிறீர்களோ அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது. வெயில் அதிகமான நேரத்தில் சற்று அதிகமாக இரண்டு முறை அப்ளை செய்யலாம். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க இது உதவும். 

3. ஆர்கானிக் சோப்புகள்

கோடையில் ரசாயனம் நிறைந்த சோப்புகளைத் தவிர்க்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இயற்கையான அல்லது ரசாயனம் குறைந்த சோப்புகளை பயன்படுத்துங்கள். மேலும், தளர்வான பருத்தி ஆடைகள் அணிவதை உறுதி செய்துகொள்ளுங்கள். 

4. உணவு

உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதில் உணவுமுறை சரியாக இருக்க வேண்டும். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள் சாப்பிட்டால் சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்கும். குறிப்பாக பழங்கள், நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம். காரமான மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கலாம். 

5. குறைந்த 'மேக்அப்' 

ரசாயனம் அதிகமுள்ள க்ரீம்களை பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஃபவுண்டேஷன் உள்ளிட்ட மேக்கப் பொருள்களை தினமும் பயன்படுத்துவதைத் தவிர்த்து தேவைப்படும் நாள்களில் மட்டும் பயன்படுத்தலாம். தினமும் பயன்படுத்தினால் முகப்பருக்கள் உண்டாகலாம். 

அதிலும் கோடை காலத்தில் குறைந்தபட்ச மேக்அப் தான் நல்லது என்கின்றனர் தோல் மருத்துவர்கள். அதுபோல இரவு தூங்கும் முன் மேக்அப்பை சரியாக அகற்ற வேண்டும். இதுவும் சருமப் பராமரிப்புக்கு மிகவும் முக்கியமானது. 

6. வைட்டமின் சி

கோடையில் சாப்பிடும் பொருள்களும் சரி, வெளிப்புற சருமப் பராமரிப்புக்களும் சரி வைட்டமின் சி மிகவும் அவசியமானது. எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு உள்ளிட்ட வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

அடுத்ததாக இரவு நேரங்களில் தூங்கும்முன் மென்மையான க்ளென்சர் கொண்டு  முகத்தைக் கழுவிய பின்னர் சருமத்திற்கு வைட்டமின் சி சீரம் அப்ளை செய்யலாம். குறைந்த சதவிகிதம் வைட்டமின் சி உள்ள சீரத்தை பயன்படுத்தலாம். ஏனெனில் அதிக வைட்டமின் சி சீரம் முகத்தில் வறட்சியை ஏற்படுத்தலாம். 

7. கால்களுக்கு..

முகத்தை எந்த அளவுக்கு கவனித்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு பாதங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வெளியில் சென்றுவந்த பின்னர் கண்டிப்பாக கால்களை நன்றாகக் கழுவ வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்னதாக கால்களுக்கு ஈரப்பதம் அளிக்க எண்ணெய் அல்லது க்ரீம்களை பயன்படுத்தலாம். பாதம் குளிர்ச்சியாகும்போது உடல் முழுவதும் குளிர்ச்சி அடைவதை உணரலாம். 

8. மேலும் சில குறிப்புகள் 

ஒட்டுமொத்தமாக சருமத்தைப் பராமரிக்க முதலில் சருமம் சுத்தமாக இருக்க வேண்டும். தூங்குவதற்கு முன் மேக்அப்பை சரியாக அகற்ற வேண்டும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆர்கானிக் ஸ்க்ரப்பைப் பயன்படுத்துங்கள். இயற்கையான வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தி பேஷியல் செய்யலாம். இந்த காலத்தில் பழங்களைக் கொண்டு பேஷியல் செய்வது சரும அழகுக்கும் குளிர்ச்சிக்கும் உதவும். உங்கள் பெட்ஷீட், தலையணை கவர்கள் மற்றும் போர்வைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

இவற்றையெல்லாம் சரியாக கடைப்பிடிக்கும்பட்சத்தில் உங்கள் சரும அழகு கெடாது கோடை வெயிலில் பளபளக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com