மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? வாழ்க்கைமுறையை மாற்றுங்கள்!

மன அழுத்தத்தினால் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால், மன அழுத்தம் ஏற்படக் காரணமே நம் வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றங்கள்தான். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மன அழுத்தம் இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு மனநலப் பிரச்னை. மாறிவரும் சூழல்களால் இதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், உடல்நோய்கள் சார்ந்த மருத்துவர்களுக்கு நிகராக இன்று மனநல மருத்துவர்களும் பெருகிக் காணப்படுகின்றனர். 

மன அழுத்தத்தினால் வாழ்க்கைமுறை பாதிக்கப்படுவது உண்மைதான். ஆனால், மன அழுத்தம் ஏற்படக் காரணமும் நம் வாழ்க்கைமுறையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்தான். ஒன்றோடொன்று தொடர்புடையவை. 

சில விஷயங்களில் கவனத்தில்கொள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். அதற்காக உங்கள் வாழ்க்கைமுறையை அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டும். 

வாழ்க்கைமுறையில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள் உங்களை உற்சாகப்படுத்தும். மேலும், உங்களின் வளர்ச்சிக்கு அடுத்தடுத்து உங்களை சிந்திக்க வைக்கும். 

► அன்றாட வேலைகளில் அவ்வப்போது மாற்றம் செய்யுங்கள். பல ஆண்டுகளாக தினமும் ஒரே வேலையைச் செய்யும்போது அது சலிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்களது அன்றாட பழக்கவழக்களில் சற்று மாற்றத்தை ஏற்படுத்துங்கள். உங்களுடைய வேலை நேரத்தை மாற்றலாம், அன்றாடப் பழக்கங்களில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை சேர்த்துக்கொள்ளலாம். இது வாழ்க்கையின் மீதான ஆர்வத்தைத் தூண்டும். 

► அடுத்ததாக நீங்கள் செய்த நல்ல செயல்களை நீங்களே ஒருமுறை நினைத்துப் பாருங்கள், எதிர்மறையான செயல்களை மறந்து வாழ்க்கையில் இருந்து விட்டொழித்துவிடுங்கள். 

► உங்கள் வாழ்க்கையின் கதையை மாற்றி எழுதுங்கள். உங்களுக்கு கஷ்டம் அல்லது தோல்வி வரும்போது அது மாறினால் எவ்வாறு இருக்கும் என்று எழுதுங்கள். தானாகவே உங்கள் வாழ்க்கையிலும் அந்த மாற்றம் ஏற்படும். நேர்மறை சிந்தனையை ஏற்படுத்துவதற்காகவே இந்த பழக்கம். 

► மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இருப்பிடத்தை முடிந்தவரை உங்களுக்கு பிடித்தவாறு அமைத்துக்கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் நல்ல தூக்கத்தை உறுதிசெய்து கொள்ளுங்கள். 

► நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ளத் தொடங்குங்கள். ஒரே உணவாக இல்லாமல் மாற்றி மாற்றி சாப்பிடுங்கள். 

► அடுத்து உடற்பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் அவசியமான ஒன்று. மன அழுத்தத்தைக் குறைக்கும் முக்கிய காரணி என்பதால் தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். 

► வாழ்க்கை முழுவதும் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்கு சிறிது ஓய்வு தேவை. எனவே, அவ்வப்போது வீடு, வேலை எல்லாவற்றையும் விட்டு பிடித்த இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். இது புத்துணர்ச்சியைத் தரும். 

மன அழுத்தம் என்பது சில தனிப்பட்ட காரணங்களாலும் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், காரணமின்றி வாழ்க்கையில் சலிப்பு ஏற்படாது. அது என்னவென்பதைக் கண்டறிந்து வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம். ஏனெனில், இந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com