திருமண பந்தம் விவாகரத்தை நோக்கிச் செல்வதற்கான 8 அறிகுறிகள்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழமொழியாக இருக்கலாம். பலருக்கும் அது உண்மையாகக்கூட இருக்கலாம். சிலருக்கும், வெகு சிலருக்கும் அது பொய்த்தும் போகலாம்.
திருமண பந்தம் விவாகரத்தை நோக்கிச் செல்வதற்கான 8 அறிகுறிகள்
திருமண பந்தம் விவாகரத்தை நோக்கிச் செல்வதற்கான 8 அறிகுறிகள்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழமொழியாக இருக்கலாம். பலருக்கும் அது உண்மையாகக்கூட இருக்கலாம். சிலருக்கும், வெகு சிலருக்கும் அது பொய்த்தும் போகலாம்.

ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்து, ஒரு குடும்பத்தை உருவாக்கி, பல குடும்பங்களாக மாறி உறவுகளை ஏற்படுத்துவது என்ற முறையை உருவாக்கிய நம் மூதாதையர்கள் நிச்சயம் வணங்கத்தக்கவர்கள்தான்.

ஒரு வீட்டை இல்லமாக்குவதும், ஒரு ஆணையும் பெண்ணையும் குடும்பம் ஆக்குவதும் அவர்கள் எப்படி இணைந்து வாழ்கிறார்கள் என்பதே தீர்மானிக்கிறது. இருவரும் இணைந்து சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு, இரட்டை மாட்டு வண்டிகளைப் போல அனைத்தையும் சமமாக பகிர்ந்து ஓடும் வண்டிகள்தான் வாழ்க்கை எனும் பந்தயத்தில் ஜெயிக்கின்றன.

சில திருமண உறவுகள், வெளியேற வாய்ப்பும் இல்லாமல், பந்தயத்திலும் ஜெயிக்க முடியாமல் ஓடும் வரை ஓடலாம் என்று சாலையோரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், தொட்டதுக்கு எல்லாம் விவாகரத்துக் கேட்கும் இளைய தலைமுறையும் ஒருபக்கம் திருமண பந்தத்தை உடைத்து சுக்குநூறாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு திருமண பந்தம் என்பது விவாகரத்தை நோக்கி நகர்கிறது என்பதை ஒரு சில அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். 
மரியாதை.. மரியாதை..
என்னதான் திருமணம் செய்து கொண்டு தம்பதியாக வாழ்ந்தாலும் ஒருவர் மீது ஒருவர் நிச்சயம் மரியாதை கொண்டிருக்க வேண்டும். இங்கே மரியாதை என்பது வெளிப்படுத்துவது அல்ல.. உணர்வுப்பூர்வமானது. அந்த உணர்வு இல்லாமல், ஒருவர் மீது ஒருவர் கசப்புணர்வு மேலோங்கும் போது இங்கே உறவு நீடிக்கும் வாய்ப்புகள் குறைகிறது.

இடைவெளி 
தம்பதிக்குள் இருக்கும் நெருக்கம் மெல்ல குறைந்து இடைவெளி அதிகரிப்பது. தம்பதியருக்குள் காற்று கூட புகாத வகையில் ஒரு நெருக்கம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், மற்றவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி அக்கறை இல்லாமல், என்ன செய்தாலும் எனக்குக் கவலை இல்லை என்பது போன்ற அலட்சியங்களும் நெருக்கமின்மையையே காட்டுகின்றன. இது தம்பதியருக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தலாம்.

பொருளாதார புரிதல்
இருவரும் சம்பாதித்தாலும், குடும்பத்துக்கான செலவுகளை ஒற்றுமையாக செய்யாமல், அவர்கள் போக்குக்கு செலவிடுவது, குடும்பத்துக்கு செலவு செய்வதை தவிர்ப்பது, குடும்பச் செலவுகளை பகிர்ந்து கொள்ள முன் வராதது போன்றவையும் குடும்ப வாழ்க்கையின் சீரற்ற நிலையையே காட்டுகின்றன.

தவறான பழக்கங்கள்
தம்பதியரில் ஒருவர் குடும்பத்தை விட்டு வெளியே இருக்கும் நேரத்தை அதிகரிப்பது, குடிப்பது, நண்பர்களுடன் வெளியே சுற்றுவது, தகாத உறவு போன்றவை, தம்பதியரின் பிரிவை அதிகரிக்கும் காரணியாகவே இருக்கலாம்.

ஒரே பிரச்னைதான்
பொதுவாக தம்பதியர் என்றாலே வாக்குவாதங்கள் ஏற்படும். ஆனால், எப்போதுமே ஒரே பிரச்னை தொடர்பாகத்தான் வாக்குவாதங்கள் ஏற்படுகிறது என்றால் நிச்சயம் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிதல் ஏற்படவில்லை என்பதும், பிரச்னைகள் பேசி தீர்க்கப்படுவதேயில்லை என்பதும் தெரிய வருகிறது. இருவரும் மனம் ஒத்து பேச விரும்பவில்லை, பேசி பிரச்னையைத் தீர்க்க விரும்பவில்லை என்பதும் உறுதியாகிறது.

ஓயாத சண்டை
தம்பதிகள் சண்டைப் போட்டுக் கொள்வது இயல்பு. ஆனால், எந்தப் பேச்சை எடுத்தாலும் அது சண்டையில்தான் முடியும் என்றால்.. எதைப் பற்றி கலந்தாலோசித்தாலும் அது சண்டைதான் என்றால்.. பேச முனைந்தாலே சண்டை தொடங்கிவிடும் என்றால்..

பேச்சே இல்லை
இது எல்லாவற்றுக்கும் ஒரு படி மேல்.. தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் எதைப்பற்றியும் பேசுவதே இல்லை. எதைப் பற்றியும் விவாதிப்பதே இல்லை. ஒருவரோ அல்லது இரண்டு பேருமோ எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை என்றாலும், விவாதிக்க விரும்பவில்லை என்றாலும் எதையும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றாலும் கூட கிட்டத்தட்ட அதுதான்.

தனிமையை உணர்ந்தால்
திருமணமாகிவிட்டது. ஆனால், நீங்கள் தனிமையை உணர்கிறீர்கள்.. தனித்துவிடப்பட்டதாக உணர்கிறீர்கள்.. கவலையும் தனிமையும் உங்களை துரத்தினால் அதுவும் இதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

இவை அனைத்துமே விவகாரத்தில்தான் முடிய வேண்டும் என்பதில்லை. ஏதேனும் ஒரு விஷயத்தில், ஒருவர் தான் செய்யும் தவறை திருத்திக் கொண்டாலோ, அவர் அப்படித்தான், அவள் அப்படித்தான் என்று புரிந்து கொண்டாலோ கூட போதுமானது.. திருமண பந்தம் நீடிக்க.. 

பல ஆண்டுகள் ஒற்றுமையாக வாழும் தம்பதியர் பலரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறார்கள் என்பது அர்த்தமல்ல. சில ஆண்டுகளில், இருவருமே அவர் அப்படித்தான், அவள் அப்படித்தான் என்று புரிந்துகொண்டு வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com