மீண்டும் முகக்கவசம் அணியத் தொடங்கலாமா? 

இந்தியாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. வரப்போவது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான காலம்.
மீண்டும் முகக்கவசம் அணியத் தொடங்கலாமா? 


இந்தியாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. வரப்போவதாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான காலம். தற்போது முகக்கவசம் அணியலாமா? இல்லை அவசியமில்லையா என்ற கேள்விகள் பலரின் மனதிலும் எழுந்துவிட்டது.

ஒரு புதிய கரோனா வைரஸின் திரிபான  ஜெஎன்.1, தற்போதைய கரோனா பரவல் அதிகரிப்புக்கு காரணமாக  இருந்தாலும், ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அச்சம் அடைய வேண்டாம் என்றும், முகக்கவசம் அணிவது குறித்து எந்த அறிவுரையும் வழங்கவில்லை என்றும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

அதேவேளையில் மருத்துவ நிபுணர்கள், முகக்கவசம் எப்போதும் சிறந்தது, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு என்று அறிவுறுத்துகிறார்கள்.

அதுபோல, கதவுகள் மூடிய, போதிய காற்றோட்டம் இல்லாத, அதிகக் கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் கூறுகிறார்கள்.

இருப்பினும், பலருக்கு, முகக்கவசம்  அணிவது கடந்த கால விஷயம் என்கிறார்கள். ஒரு ஆய்வில், கணக்கெடுக்கப்பட்ட 4 இந்தியர்களில் கிட்டத்தட்ட 3 பேர் முகக்கவசம் அணியும் காலம் முடிந்துவிட்டது என்றும், நாட்டில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் போதும், ஒரு சிலர் மட்டுமே முகக்கவசம் அணிவதாகக் கூறுகிறார்கள். இது தொடர்பான ஆய்வு, சமூக ஊடகம் வாயிலாக லோகர் சர்க்கிள்ஸ் எடுக்கப்பட்டது.

ஆய்வில், 29 சதவீதம் பேர் புத்தாண்டை மக்களுடன் சேர்ந்து கொண்டாட திட்டமிட்டிருப்பதாகவும் 58 சதவீதம் பேர் வீட்டிலேயே குடும்பத்துடன் கழிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கரோனா காரணமாக கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டதாக வெறும் 7 சதவீதம் பேர்தான் சொல்லியிருக்கிறார்களாம். இந்தியாவில் 317 மாவட்டங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், இப்போதைய நிலையில் அனைவரும் முகக்கவசம் அணிவது நன்று. இளைஞர்களுக்கு கரோனா ஆபத்தில்லை என்று கருதினால், அவர்கள் மூலம் வீட்டிலிருக்கும் வயதானவர்களை பாதிக்குமே என்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நலம் என்கிறார்கள்.

எனவே, மத்திய அரசு அறிவுறுத்தவில்லை என்றாலும், மக்கள் தாங்களே முன்வந்து முகக்கவசம் அணியலாம். இதனால், தற்போதே கரோனா பரவல் வெகுவாகத் தடுக்கப்படும் என்கிறார்கள்.

கர்நாடகத்தில் மட்டும்தான் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அல்லது கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது மட்டுமாவது முகக்கவசம் அணியலாம். இப்போதிலுக்கும் நிலைமை கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒத்திருக்கிறது. ஒமைக்ரான் பரவத் தொடங்கியது டிசம்பரின் கடைசி இரண்டு வாரங்களில்தான், அது ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் அதிகரித்து பிறகு நிலைமை மோசமானது.

எனவே, ஜெஎன்.1  திரிபு நம்மை முடக்குவதற்குள், முகக்கவசம் அணிந்து, அதனை முடக்கிவிடுவது சாலச்சிறந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com