ஃபெயில் மார்க் வாங்கும் அம்மாக்கள்: குற்ற உணர்ச்சியிலேயே இருப்பது அம்பலம்

இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அளவுகோலை நிர்ணயித்து பல ஆண்டுகாலமாக அதனை மிகத் துல்லியமாக அளந்து, காலங்காலமாக மதிப்பீடுகளை செய்துகொண்டேதான் இருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அளவுகோலை நிர்ணயித்து பல ஆண்டுகாலமாக அதனை மிகத் துல்லியமாக அளந்து, காலங்காலமாக  பெண்களின் செயல் குறித்த மதிப்பீடுகளை செய்துகொண்டேதான் இருக்கிறது.

சில குடும்ப உறுப்பினர்கள் மூலம் நேரடியாகவும், சில அதே குடும்ப உறுப்பினர்கள் மூலம் மறைமுகமாவும். அதில் பெரும்பாலான பெண்களுக்கும் அம்மாக்களுக்கும் கிடைப்பது ஃபெயில் மார்க்தான். இந்த அளவுகோல்களை அடிப்படையாக வைத்துப் பெண்களும் அம்மாக்களும் தங்களைத் தாங்களே மதிப்பிட்டு, அதனால் குற்ற உணர்ச்சியிலேயே காலம் முழுக்க வாழ்வதும் தெரிய வந்துள்ளது.

உலகிலேயே, தாய்மையை அதிகம் போற்றும் இந்தியாவில் வாழும் அம்மாக்களில்தான் அதிகமானோர் குற்ற உணர்ச்சியால் உழல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.

தனது மகன் சரியாக சாப்பிடுவதில்லை, தனது குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கிறது, அடிக்கடி வெளியே வாங்கும் உணவை சாப்பிடும் நிலை, வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களை பராமரிக்க முடியாமல் அல்லல்படும் நிலை இப்படி இந்த பட்டியல் பல வகைப்படுகிறது. எனவே, இத்தனைக்கும் ஒரே பதில்.. ஒரு பெண் சரியில்லை.. அல்லது தான் சிறந்த தாய் இல்லை என்று ஒரு பெண் நினைப்பது.. இதனால் தொடர்வது குற்ற உணர்ச்சி எனும் பெரும் துயரம்.

ஒரு அம்மா என்பவர் எப்படியெல்லாம் மதிப்பிடப்படுகிறார் என்பதும் சோகம். அம்மாவின் வீடு, அம்மாவின் வேலை, அம்மாவின் குழந்தை, அந்தக் குழந்தையின் பழக்க வழக்கம், குழந்தையின் ஆரோக்கியம் என பல விஷயங்களும் அதற்குள் அடக்கம்.

ஒரு சிறந்த தாயால்தான் சிறந்த குழந்தையை உருவாக்க முடியும் என்ற வழக்குமொழியால், தனது குழந்தையின் சிறு நடத்தைப் பிறழ்வுகள் கூட, தாய்க்கு ஃபெயில் மார்க் போட்டுவிடுகிறது. அவர்களே தங்களுக்கும் போட்டுக் கொள்கிறார்கள். 

இந்த குற்ற உணர்ச்சி தொடங்குவது, அழுதுகொண்டிருக்கும் குழந்தையை, குழந்தை பராமரிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பிப் பாராமல் வேலைக்குச் செல்லத் தொடங்கும்போது. இப்படி ஒரு குற்ற உணர்ச்சியை அடையாமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு பெண் தான் பெரும் எத்தனை இலக்க வருவாயையும் இழந்துவிட்டு, கணவரோ அல்லது கணவரின் வீட்டாரோ சொல்வது போல வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வீட்டில் இருக்கும் பெண்களாவது நிம்மதியாக இருக்கிறார்களா? இல்லை. அவர்களுக்கும் அது கிடைப்பதில்லை என்கிறது ஆய்வுகள்.

பெரும்பாலான பெண்களும் தற்போது அதிக பாதிப்புக்குள்ளாகுவது சரியான உணவு சமைக்க முடியவில்லையே என்றுதான் என்கிறார்கள். இதற்கு விதிவிலக்குகள் உள்ளன. அதை இங்கே கொண்டு வர முடியாது. வீட்டில் இருக்கும் குழந்தையோ அல்லது வேறு யாருமோ சரியாக சாப்பிடுவதில்லை என்றால் அதற்கும் காரணம், வீட்டில் சமையல் சரியில்லை என்பதுவாகவே இருக்கிறது. இருக்கும். இருக்கலாம். வீட்டில் சமையல் செய்து யாரும் சாப்பிடாத போதெல்லாம், தன் மீதே கோபம் வருவதும், தனது சமையலில் என்ன குறை என்பதை ஆராயும் ஆராய்ச்சியிலும் அந்த ஃபெயிலான அம்மா இறங்கிவிடுகிறார். தீவிரமாக.

சிலர், கடைசியாக உப்பு சரியாக இல்லை என்று தங்களை சமாதானப்படுத்திக் கொண்டு தேறிவிடுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம்.. ஒரு பெண்ணின் தாய். தனது குழந்தைப் பருவம் முதலே அவரது முழுமையான மிகச் சரியாக பணிகளை செய்யும் அம்மாவைப் பார்த்தும், அவரது சுவையான உணவை உண்டும், அவரது கவனிப்பால் வாழ்ந்தும் வந்த தன்னால், அப்படி ஒரு அம்மாவாக இருக்க முடியவில்லையே என்ற கவலையும் தொற்றிக் கொள்கிறது. 

எல்லாவற்றுக்கும் நாம் நமது அம்மாவையே அண்டியிருந்தோம். அவரது கைருசி பற்றி மணக்க மணக்கப் பேசியிருப்போம். ஆனால், நமது பிள்ளைகளோ, கணவரோ எல்லாவற்றுக்கும் நாம் ஒருவரையே அண்டியிருப்பதில்லை. கல்வி கற்பிக்க டியூஷன், சந்தேகம் என்றால் யூடியூப், பாசத்தைக் காட்ட நண்பர்கள் என பல திசைகளில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும், ஒது பெண் தன்னை ஃபெயில் மார்க் வாங்கும் அம்மாவாக நினைக்கக் காரணிகளாக மாறிவிடுகின்றன.

இந்தக் காரணங்களால் இந்தியாவில் வாழும் பல பெண்கள், குற்ற உணர்ச்சிகளோடே வாழ்ந்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com