நண்பர்களுக்காக இருப்பிடத்தை மாற்றலாமா?

கரோனா பொதுமுடக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், வாழ்க்கையை புரிந்துகொண்டவர்கள் பலர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கடந்த கரோனா பேரிடரின் போது பல விஷயங்களை பலரும் உணர்ந்துகொண்டிருப்பார்கள். கரோனா பொதுமுடக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், வாழ்க்கையை புரிந்துகொண்டவர்கள் பலர்.

எப்போதும் பூட்டிய வீடுகளுக்குள் வாழ்ந்து வந்தவர்கள், இந்த கரோனா பேரிடரின் போது சின்ன சின்ன உதவிகள் கிடைக்காமல் அல்லாடியிருக்கலாம். ஒட்டுமொத்த குடியிருப்புமே நண்பர்கள்தான் என்று வாழ்ந்தவர்களுக்கு சில பல நன்மைகள் நடந்திருக்கலாம்.

இதிலிருந்து தொடங்கியதுதான் இந்த சிந்தனை. அதாவது, மிகவும் நெருங்கிய நண்பர்களை நமது அண்டை வீட்டாராக்கிக் கொள்வது அல்லது நெருங்கிய நண்பர்களின் அருகில் சென்று ஒரே தெருவில் வசிப்பது. இது அனைவருக்கும் சாத்தியமில்லை என்றாலும், ஒரே நகரத்துக்குள் ஒரே ஊருக்குள் வசிப்பவர்கள், வாடகைக் குடியிருப்பில் இருப்பவர்களுக்கு சாத்தியமானால் செய்து பார்க்கலாம் என்கிறார்கள் நண்பர்களாக வாழும் ஒரே குடியிருப்பு வாழ் மக்கள்.

அருகில் வாழ்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள முடியாத நிலையில், இதனை சோதித்துப்பார்க்கலாம்.

நமது அக்கம் பக்கத்தினர் நமது நண்பர்களாக இருக்கும் போது பல விஷயங்கள் மிகவும் நன்றாக அமையும். ஒருவர் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், அவருடன் இணைந்து மற்றவரும் உடற்பயிற்சி செய்யலாம். அவசர உதவிகளுக்கு நமது நண்பர்களும் உடன் இருப்பார்கள். வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

எதையும் சேர்ந்து கொண்டாடலாம். ஒரு பிறந்தநாள் என்றால் நமது வீட்டுக்குள் ஒரு கொண்டாட்ட மனநிலை உருவாகும். நாமும் ஒரு நாள் அவர்களுடன் சென்று கொண்டாட்டங்களை பகிர்ந்துகொள்ளலாம். மனம் உடைந்திருக்கும் போது, குடும்பத்தில் சில பிரச்னைகள் இருக்கும் போது அதிலிருந்து விடுபட வெளியிலிருந்து ஒரு கை வரும்.

ஒரு வேளை உணவு செய்து கொடுத்து அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். அதையே உங்களுக்குத் தேவைப்படும்போது திரும்பப்பெறலாம்.

வார இறுதி நாள்களை வெட்டியாக செலவிடாமல் ஏதேனும் ஒரு சிறு பொழுதுபோக்கு அம்சத்துடன் நிறைவு செய்ய உதவலாம்.  அது மட்டுமல்ல, ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் வசிக்கும் போது உங்கள் வீட்டுக்கும் நண்பர்கள் வந்து செல்வது அதிகரிக்கும். இதனால் தனிமை அல்லது வேறு ஏதேனும் மனக்கவலைகளுடன் அல்லது பொழுதுபோகாமல் வாழ்பவர்களுக்கு நிச்சயம் உதவும்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால், நமக்கு மிகவும் பிடித்தவர்கள் அருகில் நாம் வசிக்கும் போது, அவர்களை அடிக்கடி சென்று சந்திக்க திட்டமிடுதல், நேரம் ஒதுக்குதல் போன்ற சிக்கல்கள் இருக்காது.

நண்பர்களை எல்லாம் பக்கத்திலேயே வைத்துக் கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பினால் அதற்கும் பதில் உள்ளது.. எங்கெங்கோ ஏதேதோ வசதிக்காக உற்றார் உறவினர்கள் இல்லாமல் ஓரிடத்தில் வசிக்கும் நாம், நம்மை நன்கு புரிந்த நண்பர்கள் அருகில் வசிக்கும் போது நிச்சயம் சில நன்மைகளை அடைவோம். வழி இருப்பவர்கள் முயற்சிக்கலாம்.

இதற்கு, ஒரே இடத்தில் வசித்து நண்பர்களானவர்களையும், எதிர்பாராதவிதமாக ஒரே இடத்தில் வசிக்கும் நண்பர்களையும் பார்த்தால் நிச்சயம் உணர முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com