இதெல்லாம் உங்கள் சமையலறையில் இருக்கிறதா? உஷார்!
By DIN | Published On : 06th June 2023 02:59 PM | Last Updated : 06th June 2023 02:59 PM | அ+அ அ- |

சமையலறை
பல நோய்களின் பிறப்பிடமாக சமையலறைதான் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்குமா? சமையலறையில் என்ன அபாயம் இருக்கப்போகிறது என்று நினைக்க வேண்டாம். அப்படி இருந்தாலும் ஏதோ சளி, காய்ச்சல் போன்றவை உருவாக்கும் என்று மட்டும் நினைத்துக்கொண்டிருந்தால் அது அதைவிட அதிக அபாயம்.
புற்றுநோயை உருவாக்கும் பல பொருள்கள் நமது சமையலறைகளில் முக்கிய இடங்களைப்பிடித்திருக்கிறது. ஆனால் சிலருக்கு அது தெரியும், பலருக்கும் அது தெரியாது. தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அவற்றை தவிர்க்க முடியாத இடத்தில்தான் நாம் இருக்கிறோம்.
பாத்திரங்கள் முதல், பாத்திரம் கழுவும் திரவம் வரை இதில் அடக்கம். நம்மை அடக்கம் செய்யாமல் போக மாட்டோம் என அடம்பிடிக்கும் இவற்றை நாம் ஒரேயடியாக அடக்கிவிட முடியாது. ஓரளவுக்கு நமது பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம். அவ்வளவே.
பிளாஸ்டிக் டப்பாக்கள்
பிபீஏ என்ற பிஸ்பெனோல் ஏ எனப்படும் வகையறா பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களில் கலந்திருக்கிறது. இதில் வைத்து உணவுப் பொருள்களை நாம் சாப்பிடும் போது நமது உடலின் ஹார்மோன்கள் பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பாற்றல் குறையும் என்கிறார்கள்.
நான்-ஸ்டிக் பாத்திரங்கள்
நான்-ஸ்டிக் பாத்திரங்களை அதிகம் சூடுபடுத்தும்போது பிஎஃப்ஓஏ எனப்படும் பெர்ஃளோரூக்டானோய்க் ஆசிட் வெளியேறுகிறதாம். இதில் சமைத்த உணவுகளை சாப்பிடும் போது கருப்பை புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறதாம்.
டின் உணவுகள்
பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தடுக்க வேண்டும். இதில் இருக்கும் பிஸ்பெனோல் உடலில் கலந்து கொண்டே இருக்கும் போது அது புற்றுநோய் செல்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறதாம்.
ரீஃபைன்டு எண்ணெய்
எந்த ரீஃபைன்டு எண்ணெய்-ஆக இருந்தாலும் அதில் இருக்கும் கெட்டக் கொழுப்பு, மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிறதாம்.
காய்கறி நறுக்கும் பிளாஸ்டிக் போர்டு
மரக்கட்டை அல்லது எவர்-சில்வர் முறம் போன்றவற்றில் காய்கறிகளை நறுக்குவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தவிர்த்து பிளாஸ்டிக் போர்டுகளில் காய்கறி நறுக்கும் போது சிறு சிறு துகள்கள் அதிலிருந்து வெளியேறி உணவில் கலந்து உடலுக்குள் செல்லும் அபாயம் ஏற்படும்.
பதப்படுத்தப்பட்ட பால் பொருள்கள்
பதப்படுத்தப்பட்ட பால் பொருள்களை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். பால் பொருள்களை அதிகம் சாப்பிடுவது பிரச்னையில்லை. பதப்படுத்தப்பட்ட பால் பொருள்களை சாப்பிடுவதை கவனித்தால் நல்லது.
செயற்கை நிறமூட்டி, மணமூட்டி, சுவையூட்டிகளை அறவே தவிர்த்துவிடுங்கள். தொடர்ந்து சோடா குடிப்பவர்களுக்குக் கூட புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சமையல் பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தும் சோப்பு திரவம் மற்றும் செயற்கை நார்களில் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் கலந்திருப்பதால், அவற்றின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம். சாமான்களை நன்கு கழுவிப் பயன்படுத்தலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...