கவிதா பஜலி தத்
தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது.
இயல்பான உடலுறவில் 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல் கரு உருவாகாமல் இருப்பதே கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்று கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் கருமுட்டை மட்டும் காரணமல்ல, ஆணின் விந்தணுவிலும் பிரச்னை இருக்கும்பட்சத்தில் பெண்ணின் கருவுறுதல் விகிதம் குறைகிறது.
ஆனால் இந்த நவீன காலத்திலும் பெண் கருவுறாவிட்டால் அதனால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகளை பெண்ணே எதிர்கொள்ளும் சூழல் இருக்கிறது. ஆணின் மலட்டுத்தன்மை குறித்து பேசுவது மிகவும் குறைவே.
கருவுறாமை என்பது ஆண், பெண் இருவரும் சார்ந்தது. ஆணின் இனப்பெருக்க அமைப்பில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் கருவுறுதல் சாத்தியம் இல்லை.
இவ்வாறு கருவுறுதலில் ஆண்களுக்கு இருக்கும் உடலியல் சார்ந்த பிரச்னைகள் பேசுகிறார் இந்திரா ஐ.வி.எப். மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் கிஷிடிஷ் முர்டியா.
நம் நாட்டில் ஆண் மலட்டுத்தன்மை விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்திய இனப்பெருக்க உதவி சங்கத்தின் கூற்றுப்படி, நம் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 2.75 கோடி பேர்(ஆண், பெண் இருபாலரும்) மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 40-50% கருவுறாமைக்கு ஆண் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலட்டுத்தன்மைக்கு வாழ்க்கை முறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் தாக்கங்கள், உடல்நிலை பிரச்னைகள் காரணமாக இருக்கின்றன.
வாழ்க்கை முறை மாற்றங்கள்: இந்தியாவில் 6ல் ஒரு தம்பதியர் கருவுறாமை பிரச்னையால் பாதிக்கப்படுகிறார். தாமதமான திருமணமும் இதற்கு ஒரு காரணம். அதுபோல பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வயது கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
புகைபிடிப்பது, மது அருந்துவது விந்தணு உற்பத்தியை வெகுவாக பாதிக்கிறது. அதுபோல, உடல் பருமன் மற்றும் இதர வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் கருவுறுதலை பாதிக்கிறது.
அடுத்து மன அழுத்தம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதுவும் ஹார்மோன் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி விந்தணு உற்பத்தியைப் பாதிக்கிறது.
சுற்றுச்சூழல் மாற்றங்கள்:
இதுகுறித்து தில்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை மூத்த மருத்துவர் மிரினால் பக்வா கூறுகையில், 'சுற்றுச்சூழல் மாசு, குறிப்பாக காற்றில் உள்ள நச்சுப் பொருள்கள், தாதுக்கள் விந்தணுவின் தரத்தைக் குறைக்கும்.
மின்னணு சாதனங்களில் இருந்து வரும் அதிக வெப்பம் மற்றும் கதிர்வீச்சு விந்தணு உற்பத்தி குறைவதற்குக் காரணங்களாகும்' என்றார்.
மருத்துவக் காரணங்கள்: வெரிகோசல் பிரச்னை (ஆணின் விதைப்பையில் இருந்து குறைந்த ஆக்சிஜன் உள்ள ரத்தத்தை வெளியேற்றும்போது விதைப்பை விரிவடைவது அல்லது வீங்குவது) விந்தணுவின் தரத்தையும் அளவையும் பாதிக்கும்.
டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் அளவு குறைவது, மரபியல் குறைபாடுகள், உடலுறவின்போது ஏற்படும் தொற்றுகளும் காரணமாகும்.
உணவு முறை: ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வது, உடலில் போதிய ஊட்டச்சத்து இல்லாதது விந்தணுவை பாதிக்கும். குறிப்பாக துரித மற்றும் பொருந்தா உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார் முர்டியா.
இயல்பாக கருவுறுதல் நிகழாதபோது தம்பதியர் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஆனால், இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருப்பதாக நோவா ஐவிஎப் மருத்துவமனையின் மருத்துவர் லாவண்யா கூறுகிறார்.
ஆண்கள், இதுவரை பெற்றுள்ள சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் தெரிவித்து உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
விந்தணு எண்ணிக்கை, அதன் நகர்வு, வடிவம் குறித்த விந்தணு பரிசோதனை.
ரத்த பரிசோதனைகளின் மூலமாக ஹார்மோன் அளவைக் கண்டறிதல்.
மரபணு கோளாறு ஏதும் இருக்கிறதா என கண்டறிதல்.
வெரிகோசெல் அல்லது விதைப்பையில் வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலமாக கண்டறிதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என்றார்.
சென்னையைச் சேர்ந்த குழந்தைப் பேறு மருத்துவர் ருக்கயால் பாத்திமா சிகிச்சை முறை குறித்து கூறுகிறார்.
வெரிகோசெல் அல்லது விந்தணு இருக்கும் பாதையில் வேறு ஏதேனும் அடைப்பு இருப்பின் அறுவை சிகிச்சை செய்யலாம்.
விந்தணுவை நேரடியாக பெண்ணின் கருமுட்டையுடன் இணைக்கும் ஏஆர்டி சிகிச்சை முறை. விந்தணு குறைவாக இருக்கும்பட்சத்தில் இது உதவும்.
ஆணின் விந்தணுவையும் பெண்ணின் கருமுட்டையையும் இணைத்து பின்னர் உருவான கருவை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தும் ஐ.வி.எப். சிகிச்சை முறை. இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
விந்தணுவை பெண்ணின் கருப்பைக்குள் நேரடியாகச் செலுத்தும் ஐயுஐ சிகிச்சை முறை.
இந்த தொழில்நுட்ப சிகிச்சைகள் கருவுறுதலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்தந்த தம்பதியரைப் பொறுத்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்து அளிக்கப்படுவதாக டாக்டர் முர்டியா கூறினார்.
வாழ்க்கைமுறை: உணவில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலைத் தவிர்ப்பது, மன அழுத்தம் வராமல் பாதுகாக்க யோகா, தியானம் பயிற்சிகளை மேற்கொள்வது என வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
குழந்தையின்மையால் இந்த சமூகத்தில் பெண்களே அதிகம் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலையில் ஆண் மலட்டுத் தன்மை குறித்த விழிப்புணர்வு தேவை.
இதுகுறித்த கல்வியை பள்ளி, கல்லூரிகளிலேயே கற்றுத்தர வேண்டும். இது கருவுறுதல் பிரச்சினைகளை முன்கூட்டியே புரிந்து கொள்ளவும், தீர்க்கவும் அவர்களுக்கு உதவும் என்று டாக்டர் பாத்திமா கூறினார்.
ஆண்களும் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
தமிழில் - எம். முத்துமாரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.