பகலில் தூக்கம் வருகிறதா? மறதியின் அறிகுறியாக இருக்கலாம்! - ஆய்வில் தகவல்!

பகலில் தூக்கம் வருவது டிமென்ஷியா எனும் மறதி நோயின் அறிகுறியாக இருக்கலாம் என ஆய்வில் தகவல்.
sleepiness
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

வயதானவர்களுக்கு பகலில் தூக்கம் வந்தாலோ அல்லது உற்சாகம் இழந்து காணப்பட்டாலோ டிமென்ஷியா எனும் மறதி நோய் ஏற்படும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

தூக்கம் தொடர்பான பிரச்னைகளால் இன்று பலரும் அவதிப்படுகின்றனர். தூக்கமின்மை அல்லது சரியான நேரத்தில் தூங்காததால் உடல் ரீதியாக பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் வயதானவர்களுக்கு ஏற்படும் முதுமை மறதி தொடர்பாக தொடர்பாக நியூயார்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் நியூராலஜி' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் கூறப்பட்டுள்ளதாவது:

வயதானவர்களில் பகலில் அதிகமாக தூக்கம் வருவது போன்று உணர்ந்தாலோ அல்லது பகலில் வேலை செய்ய ஆர்வமில்லாமல் உற்சாகமின்றி இருப்பவர்களுக்கு டிமென்ஷியா எனும் மறதி நோய்க்கு முந்தைய நிலை அறிகுறிகள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு நினைவாற்றல், அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் சராசரியாக 76 வயதுடைய 445 பேரிடம் சுமார் 3 ஆண்டுகள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் தூக்கம், நடக்கும் வேகம், நினைவுத் திறன் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன . இதில் அதிக பகல்நேர தூக்கம், உற்சாகமின்மை உள்ளவர்களில் 35.5% பேருக்கு டிமென்ஷியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6.7% பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவர்களில் 268 பேர் நன்றாகத் தூங்குவதாகவும் 177 பேருக்கு தூக்கத்தில் பிரச்னை இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆய்வின் தொடக்கத்தில், 42 பேருக்கு நினைவுத் திறனில் பிரச்னை உள்ளதும் ஆய்வின்போது மேலும் 36 பேருக்கு நினைவுத்திறனில் பிரச்னை ஏற்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் பிராங்க்ஸில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் ஆய்வாளர் விக்டோயர் லெராய் கூறுகையில், 'தூக்கம் தொடர்பான பிரச்னைகளை வெளிக்கொண்டுவருவதுதான் எங்கள் ஆய்வின் நோக்கம். தூக்கம் வரவில்லை என்றால் மக்கள் தேவையான உதவியைப் பெற வேண்டும். இதன் மூலமாக அறிவுத் திறனில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்' என்றார்.

இறுதியாகவே, அதிக பகல்நேர தூக்கம், உற்சாகமில்லாமால் இருப்பவர்களுக்கு டிமென்ஷியா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் கூறியுள்ள தகவலில், உலகளவில் 5.5 கோடிக்கும் அதிகமான மக்கள் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60% க்கும் அதிகமானோர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் வாழ்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 1 கோடி பேர் புதிதாக டிமென்ஷியாவால் பாதிக்கப்படுகின்றனர்.

மூளையில் ஏற்படும் பாதிப்பால் டிமென்ஷியா ஏற்படுகிறது. அல்சைமர் நோய் என்பது பொதுவான மறதி நோயாகும். 60-70% பேர் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது இறப்புக்கான ஏழாவது முக்கிய காரணமாக டிமென்ஷியா நோய் உள்ளது. பெண்கள் டிமென்ஷியாவால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர். டிமென்ஷியா காரணமாக பெண்களின் ஆயுள்காலம் குறைகிறது, இறப்பும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.