மன அழுத்தம், விந்தணுவுக்கு நல்லது! - ஆய்வில் தகவல்

மன அழுத்தம், விந்தணுக்களின் இயக்கத்தை மேம்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
mental health
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மன அழுத்தம், விந்தணுக்களின் இயக்கத்தை மேம்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை மன அழுத்தம். மன அழுத்தத்தினால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் மன அழுத்தம், விந்தணு இயக்கத்தை அதிகரிக்கிறது என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

மன அழுத்தம், கருவுறுதலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த ஆய்வின் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.

மன அழுத்தம், கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் கருவின் வளர்ச்சி குறித்து கொலராடோ பல்கலைக்கழகத்தின் அன்சுட்ஸ் மருத்துவமனை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுவாக கடந்த 50 ஆண்டுகளில், விந்தணுக்களின் தரம் குறைந்துள்ளது. இதனால் பெண்கள் கருவுறுதலும் வெகுவாகக் குறைந்து வருகிறது. சுற்றுச்சூழலும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

எனினும் கருவுறாமை பிரச்னைக்கான காரணங்கள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

விந்தணுவின் இயக்கம் மற்றும் கருமுட்டையை மன அழுத்தம் பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வும் உறுதி செய்கிறது. ஆனால், மன அழுத்தத்திற்குப் பின்னர் விந்தணுவின் இயக்கம் கவனிக்கப்பட்டது.

அதில், விந்தணு வளர்ச்சிக்கு உதவும் எக்ஸ்ட்ராசெல்லுலர் வெசிகிள்ஸ் (EV) எனப்படும் சிறிய துகள்களில் மாற்றம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

மன அழுத்தத்திற்குப் பின்னர் விந்தணுவின் இயக்கம் மேம்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இது மன அழுத்தத்தின்போது அல்ல, மன அழுத்தத்தில் இருந்து கடந்துவந்த பின்னரே நிகழ்ந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

கரோனா தொற்றுநோய் கால மன அழுத்தத்திற்குப் பிறகு, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க உதவும் என்று ஆய்வின் முதன்மை எழுத்தாளர் டிரேசி பேல் தெரிவித்தார்.

மன அழுத்தம் ஏற்பட்டு சரியாகும்போது அது விந்தணுக்களை தூண்டுவதாகவும் விந்தணு உற்பத்தி மற்றும் இயக்கத்தை மேம்படுத்த அது உதவுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வு ஆண்களை மையமாகக் கொண்டிருந்தாலும், பெண்களையும், கரு வளர்ச்சியையும் மன அழுத்தம் எவ்வாறு பாதிக்கிறது, குறிப்பாக மூளையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் ஆரோக்கியமான கருவுறுதலுக்கு உதவும் என்றும் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com