

உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வுக்கு தீர்வு தரும் ஒரு தாதுப்பொருள் பற்றி பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மன அழுத்தத்தால் இன்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏன், உடலில் பெரும்பாலான தொந்தரவுகளுக்கு மன அழுத்தமே காரணமாக இருக்கிறது. அதேபோல உயர் ரத்த அழுத்தத்தாலும் இதய பாதிப்புகள்கூட ஏற்படுகின்றன. பெரும்பாலாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டவை.
உயர் ரத்த அழுத்தத்தால்தான் பக்கவாதம், இதய கோளாறுகள், சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுக்கும் ஒரு தாதுப் பொருள் இருக்கிறது. அந்த தாது, பொட்டாசியம்.
பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்டவை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சாதாரணமாக உணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று கூறுகிறார்கள். அது பாதி தீர்வுதான், அத்துடன் கண்டிப்பாக உணவில் பொட்டாசியம் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது, சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் நிலையில் இந்த பொட்டாசியம், உடலில் சோடியத்தின் அளவை நிர்வகிக்கிறது. இது இதய நோய்களால் ஏற்படும் இறப்பு அபாயத்தையும் குறைக்கிறது.
ரத்த நாளங்களின் சுவர்களைத் தளர்த்துவதன் மூலம் உடலில் அதிக சோடியம் இருந்தால் அவை சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகிறது. இதற்கு பொட்டாசியம் பெரிதும் உதவுகிறது.
அதனால், ரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால் உப்பைக் குறைப்பதுடன் பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பொட்டாசியம் நிறைந்த உணவுகள்
அவோகேடோ அல்லது வெண்ணெய் பழம் பொட்டாசியம் அதிகம் நிறைந்தது. இதய ஆரோக்கியத்திற்கு உதவும் அவோகேடோவில் நல்ல கொழுப்புகளும் உள்ளன.
அடுத்து கீரைகள். இதில் பொட்டாசியம் மட்டுமின்றி மெக்னீசியமும் அதிகம் உள்ளது.
வாழைப்பழம்: இதிலும் பொட்டாசியத்துடன் நார்ச்சத்தும் அதிகமுள்ளது. ஆனால் இனிப்புச் சுவை அதிகம் என்பதால் நீரிழிவு நோயாளிகள் அளவாக எடுத்துக்கொள்வது அல்லது.
மேலும் பொட்டாசியம் அதிகமுள்ள உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு பீட்ரூட்டும் அதிகம் சாப்பிடுவது ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மாதுளை, தக்காளி, தர்பூசணி, இளநீர், திராட்சை, பீன்ஸ், சில வகை மீன்களில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.