
வாழ்க்கை - வேலையை சமநிலைப்படுத்த திணறி வரும் மனிதர்களுக்கு இடையே, வலசை செல்லாமல் தன்னைக் காப்பாற்றிய மீனவரைக் காண ஆண்டுதோறும் வந்துகொண்டிருந்த டின்டிம் என்ற பென்குயின் உலகளவில் புகழ்பெற்றது.
உலகிலேயே விலங்குகளைப் போலவே, மனிதனும் தனது வாழ்வுக்காக நாள்தோறும் வேலை வேலை என்று அலைந்து திரிந்துகொண்டிருக்கிறான்.
ஆனால், எல்லா விதிகளையும் உடைத்தெறிந்துவிட்டு, தனது அன்பை வெளிப்படுத்த வலசை செல்வதைத் தவிர்த்து கொடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 5,000 கிலோ மீட்டர் பயணித்து, பிரேசில் கடற்கரையில் தன்னைக் காப்பாற்றிய மீனவரைச் சந்திக்க ஆண்டுதோறும் வந்துகொண்டிருந்த டின்டிம் உலகளவில் பெயர் பெற்றது. சிறந்த அன்புக்கு அடையாளமாகிப்போனது.
கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு அது மீனவரைக் காண வருவதை நிறுத்திவிட்டது. ஆனால், அது இளமைப் பருவத்தை அடைந்து, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அதனால்தான், டின்டிம், மீனவரைக் காண வராமல் போயிருக்கலாம் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
சம்பவம் நடந்தது பிரேசிலில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஜோவோ என்ற மீனவர், கடலில் எண்ணெய் கழிவுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு பென்குயினை மீட்டு அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடல் நலம் தேறிய பிறகு அதனைக் கடலில் விடுவித்தார்.
டின்டிம் என்று பென்குயினை அன்போடு அழைத்து வந்த மீனவர், அதற்கு கனத்த மனதுடன் பிரியாவிடை அளித்தார். அதுவும் தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாவும் இருந்த மீனவரை விட்டுப் பிரிய மனமில்லாமல்தான் பிரிந்து சென்றது.
பிறகு அவர் எதிர்பாராத ஒரு திருப்பம் நேரிட்டது. அதுதான், 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சரியாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மற்ற பென்குயின்கள் எல்லாம் வலசை செல்லும் நேரத்தில், இந்த டின்டிம் மட்டும் சுமார் 5,000 கிலோ மீட்டர் ஓடோடி வந்து மீனவரைச் சந்தித்து வந்துள்ளது.
பிரேசில் கடற்கரைக்கு டின்டிம் வரும்போது அங்கு திருவிழாப் போல காணப்படும். டின்டிம் அன்பாலும் மீனவரின் மகிழ்ச்சியாலும்
பறவையோ விலங்கோ தங்களது வாழ்க்கைச் சுழற்சியை பெரும்பாலும் விட்டுக் கொடுப்பதில்லை. மாறாக, இந்த டின்டிம் மட்டும், குளிரிலிருந்து தப்பிக்க வலசை செல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதத்தில், தன் உயிரைக் காப்பாற்றிய மீனவர் ஜோவோ பெரைய்ரா டி சௌஸாவைக் காண வந்துவிடும்.
அவரைக் கொஞ்சி மகிழ்ந்து விளையாடி அவர் கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, தனது தன்றியை உச்சி முகர்ந்து சொல்லிவிட்டு மீண்டும் தன் இருப்பிடத்துக்குச் சென்றுவிடுமாம். கடைசியாக 2016ஆம் ஆண்டு ஜோவோவைக் காண வந்த டின்டிம், மிக விரைவாகவே அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றிருக்கிறது.
பிறகு, 2017ஆம் ஆண்டு முதல் ஜோவோ கடற்கரையில் வழக்கம் போல ஒவ்வொரு ஜூன் மாதமும், தன்னுடைய அன்பு டின்டிம் வரும் என்று தவறாமல் காத்திருக்கிறார். ஆனால், அது வரவில்லை. அது தனது இனப்பெருக்கக் காலத்தில் இருக்கலாம், ஒரு நாள் நிச்சயம் ஜோவோவைக் காண வரலாம் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
DinDim, a penguin who came every year to visit the fisherman who saved him, became world famous.
இதையும் படிக்க... சென்னையில் இன்றும் நாளையும் கனமழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.