கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரிப்பது ஏன்? லிப்போபுரோட்டீன் சோதனை ஏன் அவசியம்?

இளைஞர்கள் அதிகமாக மாரடைப்பால் பாதிக்கப்படுவதும் கொழுப்பு பரிசோதனையின் அவசியத்தை வலியுறுத்துவது பற்றியும்...

News image

கோப்புப் படம் - IANS

Updated On :18 ஆகஸ்ட் 2026, 4:03 pm IST

- உண்ணிகிருஷ்ணன் எஸ்

திருவனந்தபுரத்தில் 34 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது திடீரென 'திரெட் மில்' மீது சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருக்கு 'ஆஞ்சியோகிராபி' செய்யப்பட்டது. அவரது இதயத்தில் ஒரு ரத்தக்குழாயில் 95% அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. 6 மாதங்களுக்கு முன்பு அவருக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது உடலில் கொழுப்பு சரியான அளவில் இருந்துள்ளது.

உடல் ஆரோக்கியம் குறித்து அதிக அக்கறை கொண்டிருக்கும், நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் அவருக்கு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என்பது குறித்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அவர் ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர், சைவ குறிப்பாக தாவர உணவுகளை மட்டும் சாப்பிடுபவர். புகைபிடிக்காதவர், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோய் என எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை.

எனினும், ஒரு சிறப்பு லிப்பிட் பரிசோதனையில் அவரது பிரச்னைக்கான விடை கிடைத்தது. அதில் எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பு அளவு 140 nmol/L ஆக இருப்பது கண்டறியப்பட்டது. இது இதய நோய் அபாயத்திற்கான வரம்பைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும்.

6 மாதத்தில் அவருடைய உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துள்ளதே இதய நோய் பிரச்னைக்கு காரணம்.

இளைஞர்களுக்கு மாரடைப்பு

பெங்களூரில் உள்ள ஆஸ்டர் வைட்ஃபீல்ட் மருத்துவமனையின் 'குறுக்கீட்டு இதயவியல்' (interventional cardiology) நிபுணரான டாக்டர் சிராக் இதுபற்றி கூறுகையில்,

"இதய நோய் என்பது முதியவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருத்து இனி செல்லுபடியாகாது. இளம் வயதினரிடையே 'ஆத்ரோஸ்கிளிரோசிஸ்' (atherosclerosis) தொடர்பான இதய நோய் அல்லது ரத்த நாள பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது கணிசமாக உயர்ந்துள்ளது. உடலில் அதிக கொழுப்பு அளவுடன் எங்களிடம் வரும் இளைஞர்களை நாங்கள் பார்க்கிறோம். குறிப்பிட்ட மாதங்களில் இந்த கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. ஏனெனில் முந்தைய சோதனையில் சரியாக இருக்கும் கொழுப்பின் அளவு, மீண்டும் பரிசோதிக்கும்போது அதிகமாக இருக்கிறது" என்றார்.

இதற்கான ஒரு முக்கிய காரணம், நோய் அபாயத்தைக் கணக்கிடும் முறை, தெற்காசியர்களின் உடல் அமைப்புக்குச் சரியாகப் பொருந்துவதில்லை. இதய நோய் பாதிப்பு அதிகரிப்பு குறித்து ஆய்வுகள் குறைவாகவே மதிப்பிடுகின்றன.

அமெரிக்க இதய சங்கம் மற்றும் அமெரிக்க இதயவியல் கல்லூரி ஆகியவற்றின் சமீபத்திய கூட்டு வழிகாட்டுதல்கள் இந்த இடைவெளியை ஒப்புக்கொண்டுள்ளன. தெற்காசியாவில் உள்ளவர்களுக்கு 'இதய நோய் ஆபத்து அதிகம்' என்று கூறுகின்றன. அதாவது ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இடைவெளியில் கொழுப்பு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வாழ்நாளில் ஒரு முறையாவது லிப்போபுரோட்டீன் (Lipoprotein) பரிசோதனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன.

சாதாரண கொழுப்புப் பரிசோதனைகளில் முற்றிலும் கண்டறிய முடியாத ஒரு மரபணு ஆபத்தை இந்த லிப்போபுரோட்டீன் சோதனை கண்டறிகிறது. இந்தியாவில் வழக்கமான அடிப்படை கொழுப்பு பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. இதன் விளைவாக ஒரு தவறான பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது.

லிப்போ புரோட்டின்(ஏ) ஏன் ஆபத்தானது?

லிப்போ புரோட்டின்(ஏ) என்பது ரத்தத்தில் கொழுப்பைக் கடத்தும் ஒரு துகள். ரத்த ஓட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு துகள் என்று சொல்லலாம். இது ரத்த நாளங்களில் படிவுகளை (plaques) உருவாக்கலாம்.

எனவே, வழக்கமான பரிசோதனையுடன் லிப்போபுரோட்டீன் அளவு முக்கியமானது. இதன் மூலமாக ரத்த நாளங்களின் சுவர்களில் இருக்கும் அந்த படிவுகளைக் கண்டறிய முடியும், இவை நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து ரத்த குழாய் அடைப்பை உருவாக்குகிறது. இதனை அப்படியே விட்டுவிட்டால் ரத்த குழாய் அடைப்புகளை உருவாக்கும், அது திடீரென வெடித்தும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் இதயவியல் துறை பேராசிரியர் டாக்டர் சிபு மேத்யூ,

"உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் இந்த பரிசோதனை செய்வது அல்லது மருத்துவ ரீதியாக அவசியமானதோ அல்ல. மேற்கத்திய மக்களைவிட தெற்காசியர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே இதய நோய் ஏற்படுகிறது. எனவே, கொழுப்பு அளவு அதிகமாக உணர்ந்தால் உடனடியாக சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.

இதை முன்கூட்டியே கண்டறிவதற்கு பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக செய்யப்படும் கொழுப்பு பரிசோதனையைவிட லிப்போபுரோட்டீன் பரிசோதனைக்கு அதிகம் செலவாகும்.

தொடர்ச்சியான மருந்துச் செலவுகள், ஸ்டன்ட், பைபாஸ் அறுவைச் சிகிச்சை என மிக அதிக செலவைவிட இது வாழ்வில் ஒரு முறை செய்யும் முதலீடு ஆகும். வாழ்நாள் முழுவதும் இதய நோயால் பாதிக்கப்படுவதைவிட முன்கூட்டியே மரபணு மூலமாக கண்டறிவது பிரச்னை வராமல் தடுக்கவும் வந்தாலும் சரிசெய்யவும் உதவுகிறது.

மொத்த கொலஸ்ட்ரால்

இது உங்கள் ரத்தத்தில் உள்ள எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பு, ஹெச்டிஎல் எனும் நல்ல கொழுப்பு, டிரைகிளிசரைடுகள் என அனைத்து கொழுப்புகளையும் குறிக்கும். 200 mg/dL-க்குக் கீழ் இருப்பது நலம்.

எல்டிஎல் (கெட்ட கொழுப்பு)

எல்டிஎல் என்பது ரத்த நாளங்களில் படிந்து அது பின்னாளில் அடைப்புகளாக மாறக்கூடும். இதய நோய் மற்றும் அதற்கான சிகிச்சைகளுக்கு இந்த அளவே முக்கியமானதாகும். இதனை முதலில் கட்டுப்படுத்தவே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் அளவு 100 mg/dL-க்குக் கீழ் இருக்க வேண்டும்.

ஹெச்டிஎல் (நல்ல கொழுப்பு)

ஹெச்டிஎல் அதிகப்படியான கொழுப்பை ரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேற்றி மீண்டும் கல்லீரலுக்கு அனுப்ப உதவுகிறது. எனவே நல்ல கொழுப்பு அதிகம் இருந்தாலும் எந்த பிரச்னையும் இல்லை.

டிரைகிளிசரைடுகள்

இவை ரத்தத்தில் உள்ள ஒரு வித்தியாசமான வகைக் கொழுப்புகள், பெரும்பாலும் உணவில் இருந்து வருபவை. ஆற்றலை வழங்கினாலும் நீண்ட காலமாக அதிகமாக இருந்தால் பிரச்னையை ஏற்படுத்தும். இது ஒருவகை லிப்பிட் கொழுப்பு ஆகும்.

இந்தியர்களுக்கு பொதுவாகவே குறைந்த ஹெச்டிஎல் மற்றும் அதிக டிரைகிளிசரைடுகள் இருக்கும்.

லிப்போபுரோட்டீன் வரம்பு 50 nmol/L-க்குக் கீழ் அல்லது ஆய்வக அலகுகளைப் பொருத்து <30 mg/dL இருக்க வேண்டும். 50 nmol/L க்கு மேல் இருந்தால் ஆபத்தாகும்.

ஆரோக்கியமானவர்களுக்கும்....

உடற்பயிற்சி செய்வதும், உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதும் லிப்போ புரோட்டீன் அளவைக் குறைக்காது. ஏனெனில் இந்த அளவு மரபணு ரீதியாக ஏற்படுவது. எனவே, பரிசோதனைகளின் மூலமாகவே இதனைக் கண்டறிய முடியும்.

லிப்போ புரோட்டீன் அளவு அதிகமாக இருக்கும்போது ரத்த நாளங்களில் உருவாகும் படிவுகள் (plaque) திடீரென உடையக்கூடும். நெஞ்சு வலியோ அல்லது அதற்கான எந்த அறிகுறிகளுமோ இருக்காது.

உடலின் ஒட்டுமொத்த கொழுப்பு அளவு சரியாக இருந்தாலும் லிப்போபுரோட்டின் அளவு அதிகரிக்கும்போது அது ரத்த நாளங்களில் படிவுகளை உருவாக்குவதை விரைவுபடுத்தும்.

எனவே முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் கொழுப்பு பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

தமிழில்: எம். முத்துமாரி

Summary

Hidden cholesterol factor triggering heart attacks in young indians

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.