மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு! தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்!அக். 23 முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே குளிர்சாதன மின்சார ரயில்!வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது: எஸ்பிஐ விளக்கம்வங்கி, நிதிப் பங்குகள் சரிவு எதிரொலி: வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!6 வார உச்சத்தில் இந்திய ரூபாய்!

பணியிடங்களில் பரவும் கிசுகிசுக்கள்! ஊழியர்களைப் பாதிக்கிறதா? பாதுகாக்கிறதா?

பணியிடங்களில் ஊழியர்களுக்கு இடையே பேசப்படும் கிசுகிசு / புறம் பேசுததால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றி....

Gossip at work place

அலுவலகங்களில் புறம் பேசுவது.... - AP

Updated On :

அலுவலகங்களில் தங்களது நண்பரிடம், சக ஊழியரைப் பற்றி புறம் பேசுவதால் / கிசுகிசுப்பதால் சில நன்மைகளும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் தனது நண்பரையோ அல்லது வாழ்க்கைத் துணையையோ 'காஸிப் பார்ட்னர்' என்று சொல்லக் கேட்டிருப்போம். அலுவலகங்களிலும் பெரும்பாலானோருக்கு 'காஸிப் பார்ட்னர்' உண்டு. இருவரும் மற்றவரைப் பற்றி பேசுவதே இந்த 'காஸிப்' என்று சொல்லக்கூடிய கிசுகிசு, வதந்தி, புறம் பேசுதல் என இதற்கு பல பெயர்கள் சொல்லலாம். இது தீவிரமாகவும் இருக்கலாம், பொழுதுபோக்குக்காகவும் இருக்கலாம்.

ஏனெனில், குறிப்பாக பணியிடங்களில் வேலை அழுத்தத்தைக் குறைக்க கிசுகிசு பேசுவது பலருக்கும் ஆகப்பெரும் பொழுதுபோக்காகவும் மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் இருக்கிறது. இதனால் அந்த இருவருக்குள்ளும் ஒரு பிணைப்பு, நம்பிக்கை ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

புறம் பேசுவதால் என்னென்ன பாதிப்புகள்?

பணியிடங்களில் தீவிரமாகப் பேசப்படும் கிசுகிசு, சம்மந்தப்பட்ட கிசுகிசுக்கப்படும் நபரின் நற்பெயரை கெடுத்துவிடும். உண்மை என்னவென்று தெரியாமல் ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுவது, மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்வது அலுவலங்களில் சாதாரணம்தான் என்றாலும் அது அந்த நபரின் வேலையைக்கூட பாதித்துவிடும்.

அதாவது அந்த கிசுகிசு மற்றவருக்கு பரவும்போது சம்மந்தப்பட்ட அந்த நபருக்கு பாதிப்பு வரலாம். ஏன், தகவலை வெளியில் சொன்னவருக்குக்கூட பாதிப்பு வரலாம். அவர் யாரைப் பற்றி பேசினார் என்பதைப் பொறுத்தது அது. சிலர் மற்றவரின் வளர்ச்சி பிடிக்காமலும் தவறான தகவல்களைப் பரப்பலாம், இதனால் அவருக்கு நீங்க முடியாத அவப்பெயர்கூட ஏற்பட்டுவிடும்.

புறம் பேசுவதில் நன்மையா?

ஆனால், இந்த கிசுகிசு பேசுவதில், புறம் பேசுவதில் சில நன்மைகளும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அலுவலகங்களில் தவறான, மோசமான உயர் அதிகாரிகள் குறித்து ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்தைப் பேசும்போது, மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளும்போது சக ஊழியர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டு அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவும்.

மேலும், அலுவலகத்தில் நடக்கும் விஷயங்களைப் பேசுவது ஊழியர்களிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கவும் 'ஒரே குழு' என்ற உணர்வை ஏற்படுத்தவும் உதவும் என்று ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேலாண்மைப் பேராசிரியரான ரெபெக்கா கூறுகிறார்.

"இதன் மூலமாக ஒருவர் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதேநேரத்தில் தனிப்பட்ட அனுபவங்கள் சிலருக்கு பலவீனமாகவும் வாய்ப்புள்ளது" என்கிறார்.

பொதுவாக புறம் பேசுவது என்பது அந்த நிறுவனத்தின் புறக்கணிக்கப்பட்ட ஒரு பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

ஜாலியாக பேசலாம்!

ஒரு நிறுவனத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதேநேரத்தில் ஒருவரைப் பாதுகாக்கும்பொருட்டு புறம் பேசலாம். 'இந்த நபரிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்' என்று கூறுவது உண்மையில் நல்ல விஷயம் அது உண்மையாக இருந்தால்.

அதேபோல 'சக ஊழியர் ஒருவர் இந்த பிரச்னையில் இருக்கிறார்' என்று ஒருவர் மற்றொருவரிடம் கூறும்போது அந்த பாதிக்கப்பட்ட சக ஊழியரிடம் அன்பாக, ஆதரவாக மற்றவர்கள் நடந்துகொள்ள உதவும் என்று கூறுகிறார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை, தகவல் மற்றும் தொழில்முனைவுத் துறை உதவிப் பேராசிரியர் ஸ்டீபன் லீ.

இது ஊழியர்களுக்கிடையே இடையே ஒரு நட்புறவை, நம்பிக்கையை வளர்க்கும் என்றும் தெரிவிக்கிறார்.

எனவே, புறம் பேசுவது என்பது கெட்ட செய்தியையோ அல்லது எதிர்மறையான கருத்துகளை தெரிவிப்பதோ அல்ல. சக ஊழியர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் அவர்களின் பாராட்டைப் பெறும் வகையிலும் இருக்கலாம்.

அதேபோல ஒருவர் மீது புகார்கள் இருந்தால் அந்த நிறுவன மனிதவள மேலாண்மை அதிகாரியிடம் தெரிவிக்கலாம். மிகவும் தீவிரமான விஷயம் என்றால் அதனை ஊழியர்களிடையே சொல்லும்போது பிரச்னைகள் உருவாகலாம்.

எச்சரிக்கையும் தேவை!

உங்களுக்கு நம்பத் தகுந்த நபரிடம் மட்டும் தனிப்பட்ட விஷயங்களையோ அனுபவங்களையோ பகிர்ந்துகொள்ளுங்கள். யாரிடம் எந்த விஷயத்தைப் பேசுகிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது முழுக்க முழுக்க நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் சார்ந்தது.

அதேநேரத்தில் முழு நேரம் புறம் பேசுவதையோ சக ஊழியருடன் அரட்டை அடிப்பதோ ஆபத்தை விளைவிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

புறம் பேச விரும்பவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

பெரும்பாலும் அலுவலக இடங்களில் புறம் பேசும்போது ஒருவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவர்களை அதில் ஈடுபடுத்த மற்றவர்கள் முயற்சிக்கலாம்.

உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் மற்றவர்கள் பேசுவதை மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள், வேறு பதிலுக்கு எதுவும் பேச வேண்டாம். சில சூழ்நிலைகளில் அவர்கள் சொல்வதை ஆமோதித்து விட்டுச் செல்லுங்கள். உரையாடல் மிகவும் தீவிரமாக செல்லும்பட்சத்தில் அதில் இருந்து விலகி இருப்பது நல்லது.

மேலும் புறம் பேசுவது தீவிரமானால், விளையாட்டு, பயணம், அரசியல் அல்லது வேறு விஷயங்கள் குறித்து பேச்சைத் திருப்பலாம்.

ஏனெனில், அலுவலகங்களில் யாரையும் எளிதாக பகைத்துக்கொள்ள முடியாது. அவர்கள் வழியில் சென்று முடிந்தவரை அவர்களை நம் அலுவலக நட்புறவில் தக்கவைத்துக்கொள்வது உங்கள் வேலைக்கு ஏதாவது ஒரு சூழ்நிலையில் உதவும்.

பணியிடத்தில் புறம் பேசுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் வேலை என்று மட்டுமே இருக்க முடியாது. வேலை அழுத்தத்தைக் குறைக்க மற்றவரிடம் பேச வேண்டியது அவசியம்தான். மற்றவர்களைப் பற்றி பேசும்போது ஓர் ஆர்வம் தொற்றிக்கொள்ளும்.

ஆனால், அப்படி பேசுவது முடிந்தவரை யாருக்கும் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் ஒருநாள் அதில் பாதிக்கப்படுவது நீங்களாகக்கூட இருக்கலாம். உங்களைப் பற்றி யாரேனும் பேசிக்கொண்டிருக்கலாம். பாதிக்கப்படுபவர்களில் நம்மில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

அதனால் ஜாலியாக பொழுதுபோக்குக்காக மட்டும் புறம் பேசுங்கள். உங்கள் உணர்வுகளைக் கொந்தளிக்கச் செய்யும் அளவுக்கோ உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கோ எந்த வீண் பேச்சுகளும் இருக்க வேண்டாம். சக ஊழியர்களைப் பாதுகாக்கும் அளவுக்கு அவர்களின் அழுத்தத்தைக் குறைக்கும் அளவுக்கு உங்களது கிசுகிசுக்கள் இருக்கட்டும்.

ஏபி செய்தி தகவல்களுடன்: எம். முத்துமாரி

Summary

The rumor at work places: Is it okay to gossip about colleagues in offices

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER