
கண்ணுக்குத் தெரியாமல் உடலில் நுழையும் மைக்ரோபிளாஸ்டிக்! மாரடைப்பு ஏற்படும் அபாயம்?
உடலில் நுழையும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி....
கோப்புப் படம் - ENS
- உண்ணிகிருஷ்ணன் எஸ்
உணவு, நீர், காற்று மூலமாக நம் உடலில் நுழையும் பிளாஸ்டிக் துகள்களால் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
தொழில் துறையில் நவீன பிளாஸ்டிக், முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாகப் பார்க்கப்பட்டது. அதேநேரத்தில் அதன் மற்றொரு இருண்ட பக்கத்தை ரத்த நாள நிபுணர்கள் தற்போது அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றனர்.
மனித உடலில் ரத்த நாளங்களுக்குள் நுண்ணிய பிளாஸ்டிக் கழிவுகள், மிகப்பெரும் உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
கடல், நீர்நிலைகளில் பிளாஸ்க் கழிவுகள் சேர்வது சுற்றுச்சூழலுக்கு எதிரானதாக கருதப்படும் நிலையில், அதைவிட பிளாஸ்டிக் கழிவுகள் மனித உடலில் கலப்பது தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதாக இருக்கிறது.
உடலில் பிளாஸ்டிக் ஊடுருவல்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் இருந்து மிக நுண்ணிய துகள்கள், நம் கண்ணுக்குத் தெரியாமலேயே உடலுக்குள் நுழைகின்றன.
உட்கொள்ளுதல், உள்ளிழுத்தல் அல்லது உடலால் உறிஞ்சப்படுதல் மூலம் பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் நுழைகின்றன. இது உடலில் தேங்கும்போது உடல்ரீதியான பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதய பாதிப்பு
பெங்களூர் ஆஸ்டர் ஆர்.வி. மருத்துவமனையின் இதயவியல் ஆலோசகரான டாக்டர் ஜி. டிம்பு எட்வின் ஜோனதன் இதுபற்றி கூறுகையில்,
"இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள், ரத்த ஓட்டத்தில் நுழைந்தவுடன் ரத்த நாள அமைப்புகளைச் சீர்குலைக்கின்றன. மைக்ரோபிளாஸ்டிக்குகள் என்பவை பிளாஸ்டிக்கின் மிகச்சிறிய துண்டுகள் /துகள்கள். மக்கள் தாங்கள் உண்ணும் உணவு, அருந்தும் நீராகரங்கள் மூலமாகவோ அல்லது சுவாசிப்பதன் மூலமாகவோ (காற்று) அவை உள்நுழையலாம். உடலுக்குள் சென்றவுடன், அதன் ஒரு பகுதி உடல் எதிர்ப்புகளைத் தாண்டி ரத்த ஓட்டத்தில் நுழைந்து, ரத்த நாளங்கள் வழியாக மற்ற உறுப்புகளுக்குச் செல்லலாம்.
உடலில் எண்டோதீலிய செல்கள் ரத்த நாளங்களின் இறுக்கத்தைப் பராமரிப்பது, ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது, முறையற்ற ரத்த உறைதலைத் தடுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்கின்றன. ஆனால், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களால் எண்டோதீலியம் எனப்படும் ரத்த நாளங்களின் மென்மையான உள் அடுக்கு கடுமையாகச் சேதமடைய வாய்ப்புள்ளது. இந்த உள் அடுக்கு பாதிப்புக்கு உள்ளாகும்போது, விரிவடைந்து சுருங்கும் திறன் குறைகிறது. இது இதய நோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும். இதன் தாக்கம் இதயத் தசைத் திசுக்களிலும் பரவுகிறது.
மைக்ரோ பிளாஸ்டிக் இதயத் திசுக்களையும் இதய செல்கள் சமிக்ஞைகளை அனுப்பும் விதத்தையும் பாதிக்கலாம் . அதாவது இந்த துகள்கள் ரத்தத்தில் நுழைந்து இதய செல்களை அடைந்த பிறகு, அந்த செல்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. சில நேரங்களில் மைட்டோகாண்ட்ரியாவையும் பாதிக்கின்றன. இதனால் செல்கள், ஆற்றலைக் குறைவாக உற்பத்தி செய்கின்றன, எனவே, அவற்றால் முழுமையாக சுருங்க முடிவதில்லை" என்றார்.
மாரடைப்பு ஏற்படுமா?
செல்களின் ஆற்றல் குறைவது மட்டுமின்றி, இதய தமனிகளில் கொழுப்பு மற்றும் கழிவுகள் படிந்து திடீர் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை உண்டுபண்ணுகிறது. இதுபற்றி ஆய்வாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ரத்த நாள அறுவை சிகிச்சையின்போது அகற்றப்பட்ட கரோடிட் தமனி பதிவுகளில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இதயவியல் துறைப் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் ஹரிகிருஷ்ணன்,
"மைக்ரோபிளாஸ்டிக் உடல் முழுவதும் உள்ள ரத்த ஓட்டத்தில் நுழைந்தவுடன், அவை ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அடைகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இதனை நாங்கள் நேரடியாகக் கண்டறிந்துள்ளோம்.
கரோடிட் தமனி அடைப்புகளை ஆய்வு செய்ததில், பரிசோதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 50% பேருக்கு மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டது. எண்டோதீலியல் செயலிழப்பைத் தூண்டி, ரத்த நாள அழற்சியை அதிகரித்து இறுதியில் மாரடைப்புக்கான அபாயத்தை அதிகரிப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் வகையைப் பொறுத்து இந்த வழிமுறைகள் மாறுகின்றன. மைக்ரோபிளாஸ்டிக், உடலில் குறிப்பாக தமனிச் சுவரில் தங்கிவிடும்போது என்ன நடக்கிறது என்பது இன்னும் மருத்துவ ஆய்வின் ஒரு பகுதியாகவே இருக்கிறது" என்று கூறினார்.
இந்திய ரத்த நாளவியல் சங்கத்தின் தலைவரும், திருவனந்தபுரத்தில் உள்ள பிரான் மருத்துவமனையின் ரத்த நாள மற்றும் எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சைத் துறையின் தலைவருமான டாக்டர் ஆர்.சி. ஸ்ரீகுமார், உடலில் நுழையும் பிளாஸ்டிக் துகள்கள், தமனிகளை அடைத்து, மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தக் கூடும். அதுபோல கரோடிட் தமனி ஆய்வில் பிளாஸ்டிக்கில் பாலிஎத்திலீன் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்த தொடர்ச்சியான நீண்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் கூறினார்.
மைக்ரோ பிளாஸ்டிக், இதய நோயை ஏற்படுத்தும் என்பது முழுமையாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை, இது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எந்த வகை பிளாஸ்டிக் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என இதுபற்றிய ஆய்வுகள் தேவை என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்கள் தங்களுடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பிளாஸ்டிக் பொருள்களை முடிந்தவரை தவிர்ப்பது இதுபோன்ற அபாயத்தைக் குறைக்க உதவும்.
தமிழில்: எம். முத்துமாரி
Summary
Microplastics entering the body unseen; Risk of heart attack?
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







