ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே! 8 

இப்படி எல்லா சரணங்களிலும் "கை' "கை' என்றுதான் வரும். நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது.
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே! 8 

"இன்று போல் என்றும் வாழ்க' என்ற படத்தில்  "அன்புக்கு நானடிமை' - என்ற பாடலுடன் இன்னொரு பாடலையும் எழுதினேன்.
இது - நாட்டைக் காக்கும்கை
உன் - வீட்டைக் காக்கும்கை
இந்தக்கை நாட்டின் நம்பிக்கை
இது - எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை...
இதுதான் அந்தப் பாடல். இது - எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை என்றுதான் எழுதினேன். பாரதத்தின் என்ற வார்த்தையை நீக்கிவிட்டுத் தாயகத்தின் என்று மாற்றியவர் எம்.ஜி.ஆர்.தான்.

அன்புக்கை இது ஆக்கும்கை - இது
அழிக்கும் கையல்ல
சின்னக்கை ஏர் தூக்கும்கை - இது
திருடும் கையல்ல
நேர்மை காக்கும்கை - நல்ல
நெஞ்சை வாழ்த்தும்கை - இது
ஊழல் நீக்கித் தாழ்வைப் போக்கிப்
பேரெடுக்கும்கை'
இப்படி எல்லா சரணங்களிலும் "கை' "கை' என்றுதான் வரும். நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது.

என்றாலும், அன்புக்கு நானடிமை, இது நாட்டைக் காக்கும் கை என்ற இரண்டு பாடலையும் தான் எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.

இப்போது போல அப்போது சி.டி.யோ, கேஸட்டோ இல்லாத காலம். எந்தப் பாடலாக இருந்தாலும் அது சினிமாப் பாடலாக இருந்தாலும், கட்சிப் பாடலாக இருந்தாலும், பக்திப் பாடலாக இருந்தாலும் எல்லாம் கல்கத்தாவுக்கு அனுப்பி இசைத்தட்டாக வெளிவரச் செய்த பிறகுதான் பயன்படுத்துவார்கள். அதற்கான வசதி அப்போது சென்னையில் கிடையாது.

அதனால் கல்கத்தாவுக்கு அனுப்பி ஒரே வாரத்தில் இசைத்தட்டாக வெளிவரச் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார்.

அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்த "வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை நான் எழுதிய இந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு என்பெயரையும் குறிப்பிட்டு இதைப் போன்ற கவிஞர்கள் எழுதிய கருத்துள்ள பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தது. டைரக்டர் கே.சங்கர்தான் அந்தப் பத்திரிகையை என்னிடம் காட்டினார்.

படிப்பதற்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள், மக்களிடம் அவருக்கிருந்த அணுகுமுறை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை இதெல்லாம் சேர்ந்துதான் அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தவிர இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அல்ல.

ஏன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் இதைப்போல் நல்ல பாடல்கள் இல்லையா? எத்தனையோ கவிஞர்கள் இதைவிடச் சிறந்த கருத்துள்ள பாடல்களை சிவாஜி படங்களில் எழுதியிருக்கிறார்களே. நான்கூட சிவாஜி படங்களுக்கு எழுதியிருக்கிறேனே. சிவாஜி ஒரு கட்சி கூட ஆரம்பித்தாரே. ஒரு தொகுதியில் கூட அவராலே ஜெயிக்க முடியவில்லையே. அதற்கு என்ன காரணம்?
சினிமா பிரபலம் என்பது வேறு. அரசியலில் வெற்றி பெறுவது என்பது வேறு. எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எல்லா நடிகையரும் ஜெயலலிதா ஆகிவிடமுடியாது. கதர்ச்சட்டை அணிந்தவர்கள் எல்லாம் காமராஜர் ஆகிவிட முடியுமா?
சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது.

நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து அவை நூறு நாட்கள் ஓடிவிட்டால் எல்லா நடிகர்களும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்தக் கனவு மாயக் கனவு என்பதை  அவர்கள் உணர வேண்டும்.

கனவு காண்பதற்கும் ஆசைப்படுவதற்கும் ஓர் அளவுண்டு. சேரன் இயக்கிய மாயக் கண்ணாடி படத்தில் நான் ஒரு பாடல் எழுதினேன். அதில் ஒரு சரணத்தில்,
கனவு காணவே பலரும் சொல்கிறார்
கனவு மட்டுமே இளைஞர் காண்கிறார்
திறமை இன்றியே கனவு காண்பவன்
கானல் நீரிலே மீனுக் கலைபவன்'
என்று வரும். அதுபோல் வினைவலியும் தன்வலியும், மாற்றான் வலியும், துணைவலியும் தூக்கிச் செயல்" என்ற வள்ளுவர் கருத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வரக் கனவு காண்பவர்கள் செயல்பட வேண்டும்.

சாதாரண நாடக நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தபோது பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் தர்மத்திற்கு இரண்டு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கிவிடுவாராம். "மந்திரி குமாரி" படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயாம். அந்த ஆயிரம் ரூபாயில் தர்மத்திற்காக நூறு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். அந்தப் படத்திற்கு அவருக்குப் பேசிய மொத்தச் சம்பளம் பத்தாயிரம் ரூபாய்தான்.

அவர் படங்களுக்குப் பாடல் எழுதும்போது எங்களிடம் இதைச் சொல்லி நீங்களும் இப்படி உதவுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்கின்ற தான தர்மங்கள்தான் கடைசிக் காலத்தில் உங்களுடன் நிழல்போல் தொடர்ந்து வரும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

நான் பொருளாதாரத்தில் பின்தங்கியவன்தான் என்றாலும் அவர் சொன்னதற்கேற்ப என்னாலான முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

எம்.ஜி.ஆரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார்.

அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும் பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் 

எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர்.

எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை. எல்லாருக்கும் உள்ளங்கையில் இருப்பது ரேகை என்றால் அவர் கையில் இருந்தது ஈகை.

பண்டித ஜவகர்லால் நேருபோல் குடும்பப் பாரம்பரியம் மிக்க தலைவர்கள் இருக்கலாம். காமராஜரைப் போலே உழைப்பால் உயர்ந்த உத்தமத் தலைவர்கள் இருக்கலாம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப்போல அஞ்சா நெஞ்சம் பெற்ற வீரத் தலைவர்கள் இருக்கலாம். 

அண்ணாவைப் போல, ராஜாஜி போல அறிவாற்றல் மிகுந்த தலைவர்கள் இருக்கலாம். கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தம் போல, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போல நேர்மையான, எளிமையான தலைவர்கள் இருக்கலாம். கலைஞரைப் போல எதையும் தாங்கும் இதயம் பெற்ற தலைவர்கள் இருக்கலாம்.

ஜெயலலிதாவைப் போல ஆளுமைத் தன்மைமிக்க தலைவர்கள் இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆரைப் போல மனித நேயமுள்ள தலைவர்களை மண்ணுலகில் காண்பது அரிது.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com