நவீன உலகை வடிவமைத்த பொருள்களில் கண்ணாடி ஒளியிழை பிரதானமானது. அதிவேக தகவல் தொடர்புக்கு வித்திட்ட கண்ணாடி ஒளியிழை (Fibre Optics) கண்டுபிடிக்கப்பட்டு சரியாக 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதைக் கண்டறிந்தவர், இந்தியாவைச் சேர்ந்த நாரிந்தர் சிங் கப்பானி. அவரை உலக விஞ்ஞானிகள் "கண்ணாடி ஒளியிழையின் தந்தை' என்று அழைக்கின்றனர்.
இயற்பியல் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், கல்வியாளர், எழுத்தாளர், தொழில் முனைவோர் எனப் பல பரிமாணங்களை உடையவர் நாரிந்தர் சிங் கப்பானி. எண்டோஸ்கோபி போன்ற மருத்துவ உபகரணங்களுக்கான அடிப்படையைக் கண்டுபிடித்தது, லேஸர் அறுவைச் சிகிச்சைக்கான கருவிகளை வடிவமைத்தது, சூரிய ஆற்றல் கருவிகளை உருவாக்கியது உள்ளிட்ட 120 கண்டுபிடிப்புகளுக்கான அறிவுசார் சொத்துரிமைகளைப் பெற்றுள்ளவர் சிங்.
பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் 1926 அக். 12-இல் பிறந்தார் நாரிந்தர். அவரது பள்ளிக்கல்வி டேராடூனில் கழிந்தது. பள்ளியில் படிக்கும்போது தனது அறிவியல் ஆசிரியர் ""ஒளி நேர்கோட்டில் மட்டுமே பயணிக்கும்' என்று கற்பித்தபோது, அதை நம்ப நாரிந்தர் மறுத்தார். அப்போதே அவரது பிற்கால கண்டுபிடிப்புகளுக்கான விதை ஊன்றப்பட்டு விட்டது.
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், இந்திய ஆயுத தளவாட சேவைப் பணியில் (IOFS) டேராடூனில் சிறிதுகாலம் பணிபுரிந்தார். அங்கு பணியாற்றுகையில், செங்கோணப் பட்டகங்களைக் கொண்டு ஒளியின் போக்கை மாற்றுவது குறித்து ஆராய்ச்சி செய்தார்.
இந்நிலையில், மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்ற நாரிந்தர், லண்டனிலுள்ள இம்பீரியல் பொறியியல் கல்லூரியில் கண்ணாடி குறித்த மேம்பட்ட படிப்புகளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரது ஆய்வு வழிகாட்டியான டாக்டர் ஹெரால்டு ஹாப்கின்ஸ், பட்டகங்களுக்குப் பதிலாக கண்ணாடி உருளைகளைக் கொண்டு ஒளியைக் கடத்துதல் குறித்து ஆய்வு நடத்துமாறு ஆலோசனை வழங்கினார்.
அதன்படி நாரிந்தர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அப்போதுதான் வளைந்த கண்ணாடியிலும் ஒளி பயணிக்கும் என்பதை அவர் கண்டறிந்தார். அது ஒளியியலில் முக்கியமான திருப்புமுனை. தவிர பிற்காலத்தில் தகவல் தொடர்பு சாதனமாக கண்ணாடியிழை மாறுவதற்கான முதல் படி அது. தனது கண்டுபிடிப்பு குறித்து 1954, ஜன. 2-இல் "நேச்சர்' அறிவியல் சஞ்சிகையில் ஆராய்ச்சிக் கட்டுரையை நாரிந்தர் எழுதினார். “A flexible fibrescope using static scanning” என்ற அக்கட்டுரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.
பிறகு, ஆராய்ச்சிப் பணிகளுக்காக அமெரிக்காவுக்கு நாரிந்தர் குடிபெயர்ந்தார். ரோச்சஸ்டர் பல்கலைக்கழகம், இலினாய்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் அவர் தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அப்போதுதான் 1956-இல் "கண்ணாடி ஒளியிழை' என்ற சொல்லை அவர் உருவாக்கினார்.
கண்ணாடி ஒளியிழை: மயிரிழையை விட மெல்லிய கண்ணாடியிழை வளையக்கூடியது; இதில் ஒளியைக் கடத்த முடியும். இதில் ஒளிவேகத்தில் தகவல் தரவுகளைக் கடத்த முடியும் என்பது 1966-இல் கண்டறியப்பட்டது.
உலோகக் கம்பிகளில் கடத்தப்படும்போது நேரிடும் இழப்பைவிடக் குறைவான இழப்புடனும், அதிக வேகத்துடனும், மின்காந்தக் கதிர்வீச்சில் பாதிக்கப்படாமலும் இதில் தரவுகளைக் கடத்த முடியும் என்பதும் கண்டறியப்பட்டது. இப்போதைய தகவல் தொழில்நுட்ப யுகத்தின் அடிப்படை ஆதாரமாக கண்ணாடி ஒளியிழை வடம் (Optical Fibre Cable) விளங்குகிறது எனில் மிகையில்லை.
அமெரிக்காவில் தொடர் ஆய்வுகளில் நாரிந்தர் ஈடுபட்டபோது, கண்ணாடி ஒளியிழைகளைக் கொண்டு செயல்படும் மருத்துவக் கருவிகளை வடிவமைத்தார். குடலுக்குள் செலுத்தி நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் எண்டோஸ்கோபி (Endoscope) அதில் குறிப்பிடத்தக்கது. மாசு கண்காணிப்பு, சூரிய ஆற்றல் கிரகிப்பு, லேசர் ஒளிக்கற்றைப் பயன்பாடு தொடர்பான கருவிகளையும் பல உயிரி மருத்துவ உபகரணங்களையும் நாரிந்தர் உருவாக்கினார்.
இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகளையும் 4 நூல்களையும் இத்துறையில் எழுதியுள்ள நாரிந்தர் சிங் கப்பானி, அமெரிக்கக் குடியுரிமை பெற்று 45 ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருகிறார்.
தொழில் நிறுவனர்: தனது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்கி சாதனை படைத்தவர் நாரிந்தர் சிங். 1960-இல் ஆப்டிக்ஸ் டெக்னாலஜி.இன்க் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராக 12 ஆண்டுகள் இருந்தார். 1967-இல் அந்நிறுவனம் பல நிறுவனங்களுடன் இணைந்து பெரும் நிறுவனமாக வளர்ந்தது.
1973-இல் கப்ட்ரான்.இன்க் நிறுவனத்தைத் தொடங்கிய நாரிந்தர் சிங், அமெரிக்காவின் ஏஎம்பி.இன்க் நிறுவனத்துக்கு அதை விற்பனை செய்தார். இருப்பினும் 1990 வரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
அண்மையில் கே2 ஆப்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். தவிர அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினராக அவர் உள்ளார்.
தொழில் முனைவோராக மட்டுமல்லாது, சிறந்த கல்வியாளராகவும் நாரிந்தர் சிங் விளங்குகிறார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லே, சாண்டாகுரூஸ் மையங்களில் அவர் பேராசிரியராக உள்ளார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் வருகை தரு பேராசிரியராகவும், அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் வளர்ச்சி மையத்தின் (CIED) இயக்குநராகவும் அவர் உள்ளார்.
தற்போது சான்பிரான்சிஸ்கோ பே ஏரியாவில் குடும்பத்துடன் வசிக்கும் சிங், அமெரிக்காவிலுள்ள சீக்கிய அறக்கட்டளையை நிறுவியதுடன் சீக்கிய சமயம், இந்தியப் பண்பாடு சார்ந்த பல நிகழ்ச்சிகளை நடத்த பெருமளவில் நிதியுதவி புரிந்து வருகிறார்.
1998-இல் பான் அமெரிக்க வர்த்தக கழகம் சிங்கிற்கு "எக்ஸலன்ஸ் 2000' விருது வழங்கியது. சிங்கின் பணிகளால் இந்தியா கெüரவமடைந்திருப்பதைப் பாராட்டி, 2004-இல் இந்திய அரசு அவருக்கு "பாரதிய பிரவாஸி சம்மான்' விருது வழங்கியது.
பிரிட்டிஷ் ராயல் சொஸைட்டி ஆஃப் என்ஜினீயரிங், அமெரிக்க ஆப்டிகல் சொஸைட்டி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அறிவியல் சங்கங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் கெüரவ உறுப்பினராக உள்ள சிங், தனது ஆராய்ச்சிப் பணிகளை 90 வயதிலும் தொடர்கிறார்.
நோபல் பரிசு சர்ச்சை
கண்ணாடி இழைகளில் ஒளியை அனுப்ப முடியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தகவல் தொடர்புக்கான வடமாக இதைப் பயன்படுத்த முடியும் என்று 1966-இல் கண்டறிந்ததற்காக சீனாவைச் சேர்ந்த சார்லஸ் காவுக்கு 2009-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
அப்போது, கண்ணாடி இழை என்ற அடிப்படைத் தத்துவத்தை 1956-இல் கண்டறிந்த, "கண்ணாடி ஒளியியலின் தந்தை'யான இந்தியர் நாரிந்தர் சிங் கப்பானிக்கும் நோபல் பரிசு இணைந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான விவாதம் உலக விஞ்ஞானிகளிடையே பரவலாக நடைபெற்றது.
அப்போது, ""விருதாளரைத் தேர்வு செய்வதில் ஸ்வீடன் நோபல் குழுவுக்கு என தனிப்பட்ட கொள்கை இருக்கலாம்'' என்று நாகரிகமாகக் கூறி விவாதத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார் சிங். எனினும், சிங்கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்படாததன் மூலமாக நோபல் குழு தவறிழைத்து விட்டதாகவே கருத்து நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


