கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான குறும்படப் போட்டி!

ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  குறும்படப் போட்டிகளை நடத்தி வெல்லும் குழுவினர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார்கள்.

News image
Updated On :14 டிசம்பர் 2016, 9:12 am

ந. ஜீவா

நமது மாணவர்களுக்கு போதிய வழிகாட்டல்களும், ஊக்குவிப்பும் கிடைத்தால் எங்கேயோ போய்விடுவார்கள் என நம்பிக்கையுடன் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
"எங்கேயும் போக வேண்டாம். இதோ ஆஸ்திரேலியாவுக்கு படிப்பு தொடர்பான பயணம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது'' என்கிறார்  கேம்ப்ரிட்ஜ் ஆங்கில மொழி அசஸ்மென்ட்டின் தெற்காசிய மண்டல இயக்குநர் டிகே அருணாசலம். ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  குறும்படப் போட்டிகளை நடத்தி வெல்லும் குழுவினர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார்கள்.
அது பற்றி டிகே அருணாசலம் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"தமிழ்நாட்டின்  மாணவர்களுக்கு ஏரோ ஸ்பேஸ், நானோ டெக்னாலஜி, புவி அறிவியல், கட்டுமான நிர்வாகவியல், நடனம் மூலமாக கதை சொல்லல் ஆகிய கருப்பொருள்களைக் கொண்டு மூன்று நிமிடங்கள் குறும்படம் எடுக்கும் போட்டியை அறிவித்து இருக்கிறோம். 
இந்த 5 கருப்பொருள்களை மையமாக வைத்து மாணவர்கள் குழுவாக இணைந்து குறும்படம் எடுக்க வேண்டும். ஒரு குழுவில் 2 மாணவர்கள், ஒரு வழிகாட்டும் ஆசிரியர் இருக்க வேண்டும். ஒரு பள்ளியில் எத்தனை குழுக்கள் வேண்டுமானாலும் போட்டியில் பங்கேற்கலாம்.  ஐந்து கருப்பொருள்களை மையமாக வைத்து குறும்படம் எடுக்கும் மாணவர்களில் ஒவ்வொரு கருப்பொருளிலும் முதலிடம் பெறும் 5 குழுவினரை ஆஸ்திரேலியாவுக்கு படிப்பு தொடர்பான சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறோம். 
இந்த ஐந்து குழுக்கள் நீங்கலாக, தேர்ந்தெடுக்கப்படும் பிற குழு மாணவர்களுக்கு விருது, சான்றிதழ்  வழங்குகிறோம்.
இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவர்கள் எந்தக் கருப்பொருளை எடுத்து குறும்படம் எடுக்கிறார்களோ, அந்த கருப்பொருள் குறித்து ஆழமான அறிவு வேண்டும். அந்தக் கருப்பொருள் குறித்து ஆராயும் மனப்பான்மை, திறமை வேண்டும். மூன்றாவதாக, வீடியோ எடுத்து எடிட் செய்து தயாரிக்கும் திறன் வேண்டும்.
உதாரணமாக நானோ டெக்னாலஜியை கருப்பொருளாக எடுத்து குறும்படம் தயாரிக்கும் மாணவர்கள் நானோ டெக்னாலஜி பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நம்நாட்டின் உடனடித் தேவைக்கேற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று ஆராய வேண்டும். பிறகு அதைக் குறும்படமாக எடுக்க வேண்டும். 
மூன்று நிமிடக் குறும்படம் எடுப்பதற்கு குறைந்தது நான்கு நாட்களாவது குறிப்பிட்ட கருப்பொருள் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆராய வேண்டும். பின்பு அதை குறைந்தது நான்கு மணி நேரம் வீடியோ படமாக எடுக்க வேண்டும். அதற்குப் பிறகு அதை வெறும் 3 நிமிட அளவுக்கு எடிட் செய்ய வேண்டும். மாணவர்கள் கடும் முயற்சி செய்யாமல் அவ்வளவு எளிதில் இந்தக் குறும்படங்களை எடுத்துவிட முடியாது. 
இதன் மூலம் மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த கருப்பொருள் தொடர்பாக ஆழமான அறிவு பெறுவார்கள். எதையும் நடைமுறையோடு பொருத்திப் பார்க்கும் திறனைப் பெறுவார்கள். நமது தேவைக்கேற்ப நடைமுறைக்கு உகந்தவற்றைச் செய்யும் வல்லமை பெறுவார்கள். வீடியோ தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொள்வார்கள்.
தேர்ந்தெடுக்கும் கருப்பொருளுக்கு உகந்த இன்றையத் தேவையை நிறைவு செய்யும் வழி வகைகளை குறும்படத்தில் எடுத்துக் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டேன். சென்ற ஆண்டு நடந்த குறும்பட போட்டியில் சென்ற ஆண்டின் வெள்ளப் பெருக்கை ஒரு கருப்பொருளாக வைத்திருந்தோம்.  வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதத்தை அல்ல, நன்மைகளைப் பற்றி மாணவர்கள் எடுத்த குறும்படத்தைத்தான் அதில் நாங்கள் தேர்வு செய்தோம். நீர் செல்லும் பாதைகளில் உள்ள கழிவுகளை, அடைப்புகளை, குப்பைகளை வெள்ளப் பெருக்கு அடித்துச் சென்றதை அவர்கள் குறும்படமாக எடுத்திருந்தார்கள்.
வென்ற மாணவர்களை ஆஸ்திரேலியாவுக்கு படிப்பு தொடர்பான சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று அவர்கள் எந்தக் கருப்பொருளைத் தேர்ந்தெடுத்தார்களோ, அந்தக் கருப்பொருள் தொடர்பான கூடுதல் விவரங்களை மாணவர்களுக்குச் சொல்லித்தர ஏற்பாடு செய்திருக்கிறோம்.
அது தொடர்பான என்னென்ன மேல் படிப்புகள் ஆஸ்திரேலியாவில் கற்றுத் தரப்படுகின்றன? என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, வெளிநாட்டில் படிக்கப் போனாலும், வேலைக்குப் போனாலும் ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். எனவே போட்டியில் கலந்து கொண்ட பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த ஆங்கிலத்தை அவர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பயிற்சியை நாங்கள் தருகிறோம். 
 மேலும் வெளிநாட்டில் படிக்கச் செல்லும் மாணவர்கள் கேம்ப்ரிட்ஜ் இங்கிலீஷ் அட்வான்ஸ்டு தேர்வு எழுத வேண்டும். திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம்.
 இந்தக் குறும்படப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 2017 பிப்ரவரி 15 - 25 ஆம் தேதிக்குள் தங்களுடைய வீடியோக்களை  www.a2oz.org என்ற இணையதளத்தில் அப்லோடு செய்ய வேண்டும். மார்ச் முதல் வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.