அப்துல் கலாம் தான் என் ஹீரோ: ஐ.ஏ.எஸ் டாப்பர் கோவிந்த் ஜெய்ஸ்வால்!
தந்தையின் உழைப்பை வீணாக்க விரும்பாத கோவிந்த் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படித்தார். வாரத்தின் சில நாட்கள் உணவு சாப்பிடாமல் கையில் இருந்த தொகையை மிச்சம் பிடித்தார்.


அந்தச் சிறுவனுக்கு 11 வயது. அவன் தந்தையுடன் வாரணாசியில் வசித்து வந்தான். அவன் பெயர் "கோவிந்த் ஜெய்ஸ்வால்'. அவன் தந்தை நாராயண் ஜெய்ஸ்வால் ஒரு ரிக்ஷா ஓட்டுநர். கோவிந்த் வசிக்கும் இடத்திற்கு அருகே ஒரு மிகப்பெரிய விளையாட்டு மைதானம் இருந்தது. அங்கே செல்வந்தர் வீட்டுக் குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அப்படி அவர்கள் கிரிக்கெட் விளையாடும்பொழுது கோவிந்த் வேடிக்கை பார்த்தபடி நின்றிருப்பான். பல நேரங்களில் பந்தை எடுத்துத் தருவதுதான் இவன் வேலை. அப்படி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுள் ஒருவன் எப்படியோ கோவிந்துக்கு நண்பனானான். கோவிந்தைத் தன் வீட்டிற்கும் அழைத்துச் சென்றான். அவன் வீடு ஒரு பெரிய மாளிகைபோல் இருந்தது. வீட்டின் முன்புறம் மிகப்பெரிய அழகிய தோட்டம் ஒன்றும் இருந்தது.
எல்லாவற்றையும் பிரமிப்புடன் பார்த்தபடியே தன் புது நண்பனுடன் விளையாடினான் கோவிந்த். சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே வந்த அந்தச் சிறுவனின் தந்தை கோவிந்தின் தோற்றத்தைப் பார்த்தார்.
"உன் அப்பா என்ன வேலை செய்கிறார்?' என்று கேட்டார். கோவிந்த் கூறினான். வெகுண்டெழுந்த அவர் வெளியே போகுமாறு கட்டளையிட்டார். "உங்க மகன் அழைத்ததால்தான் நான் வந்தேன்!' என்றான் கோவிந்த். அவன் கூறியது எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாத அவர் அவனை விரட்டி அடித்தார்.
இச்சம்பவம் கோவிந்தின் மனதில் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியது. தன் தந்தையின் நண்பரிடம் சென்றான். "என்னை எல்லோரும் மதிக்க வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான்.
"அதுக்குக் கலெக்டர் ஆகணும்!' என்றார் அவர். "கலெக்டர் ஆகணும்னா என்ன படிக்கணும்?' என்று கேட்டான்.
"I.A.S. படிக்கணும்! அதெல்லாம் நம்மால முடியாது! வசதி படைச்சவங்க வீட்டுப் பிள்ளைகள்தான் படிக்க முடியும்! அப்படியே படிச்சாலும் தேர்ச்சி பெற முடியாது! அந்தப் பரீட்சை அவ்வளவு கஷ்டம்!' என்றார் அவர்.
"நான் நிச்சயம் I.A.S. அதிகாரி ஆவேன்!'
11 வயது கோவிந்த் தனக்குள் சூளுரைத்துக் கொண்டான். தந்தை தன்னால் முடிந்த அளவு உழைத்து இவன் தேவைகளை நிறைவேற்றினார். அரசுப் பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த கோவிந்த் அங்கிருந்த நூலகங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
அவர் வசித்த பகுதிக்கு அருகே நிறைய சிறு தொழிற்கூடங்கள் அமைந்திருந்தன. இதனால் எந்நேரமும் இயந்திரங்களின் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும். பட்டப்படிப்பு முடித்த கோவிந்த் ஒரு அமைதியான இடத்தில் தங்கி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குப் பயிற்சி பெற விரும்பினார். வட இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குப் பயிற்சி பெற புதுதில்லிதான் சிறந்த இடம். காரணம் நூல்கள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவை எளிதில் கிடைக்கும்.
அவர்கள் குடும்பத்தின் ஒரே சொத்தாக இருந்த மிகச் சிறிய நிலத்தை விற்று 40,000 ரூபாய் கொடுத்தனுப்பினார் தந்தை. தந்தையின் உழைப்பை வீணாக்க விரும்பாத கோவிந்த் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படித்தார். வாரத்தின் சில நாட்கள் உணவு சாப்பிடாமல் கையில் இருந்த தொகையை மிச்சம் பிடித்தார். பிற மாணவர்களுக்கு டியூஷன் எடுத்ததன் மூலம் 1,500 ரூபாய் வருவாய் கிட்டியது.
கோவிந்த் தனது 23-ஆவது வயதில் முதன்முறையாக சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். அது 2006-ஆம் ஆண்டு. 474 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் கோவிந்த் 48-ஆவது ராங்க் பெற்றுத் தேர்ச்சி அடைந்தார். பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களும் அவரைப் பேட்டி எடுக்க ஓடி வந்தன. அன்று முழுவதும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கோவிந்த் கண்ணீர் சிந்தியபடியே இருந்தார். அவர் தந்தையோ பேசவும் முடியாமல் ஆனந்தத்தில் திகைத்து இருந்தார்.
"உங்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ யார்?' தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கையில் மைக்கைப் பிடித்தபடியே கேட்டார்.
"எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். அவரே எனக்கு ரோல் மாடல். நான் எந்த நிலையிலும் மனம் உடைந்து போகாமல் இருந்ததற்கும், எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்து எறிந்து, இந்த அளவு நான் சாதித்ததற்கும் அவரே காரணம். ஒருவேளை நான் இந்தத் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் இதே அளவு மகிழ்ந்திருப்பேன்!
காரணம் அவர்தான்! முயற்சி செய்து தோற்பது என்பது சும்மா இருப்பதைவிட சிறந்தது என்ற அவரது கூற்றே என்னை என்றென்றும் வழிநடத்துகிறது!' என்றார் கோவிந்த்.
சில விநாடிகள் மௌனத்திற்குப் பிறகு தன் கையில் இருந்த பையில் எதையோ தேடினார். கூடியிருந்தோர் அனைவருக்கும் பரபரப்பு! கோவிந்த் தன் முன் மாதிரியாகக் கருதும் நபர் யாரென்று தெரிந்துகொள்ள! யார் அந்தத் தென் இந்தியர்? அவர் ஒரு திரைப்பட நடிகரா? இல்லை ஒரு அரசியல்வாதியா? யாரென்று ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சிந்தித்துக் கொண்டிருந்தனர். கோவிந்த் தன் பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துத் தன் தலைக்கு மேலே உயர்த்திக் காண்பித்தார். அது நமது முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணையின் தந்தை டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்கள் எழுதிய "அக்னிச் சிறகுகள்' புத்தகத்தின் இந்திப் பதிப்பு! மெய் சிலிர்க்கிறது அல்லவா?
"மன உறுதியும், விடாமுயற்சியும் இருந்தால் எப்படிப்பட்ட வறுமையையும் ஜெயிக்கலாம்' என்பதற்கு இவரைவிட வேறு சாட்சியும் வேண்டுமா?'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...