எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

டாக்டராக ஆசைப்பட்டு எஞ்சினியராகிப்  பின் சிறந்த வக்கீலும் ஆனேன்: சாதனை இளைஞர் கிருபா புஷ்பராஜ்!

"அமெரிக்காவின் சிறந்த வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ள எங்களுடைய மகன் கிருபா புஷ்பராஜ் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்தவர் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அதுதான் உண்மை.

News image
Updated On :18 அக்டோபர் 2016, 8:49 am

ந. ஜீவா

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ளது தேசிய ஆசியன் பசிபிக் அமெரிக்கன் வழக்கறிஞர்கள் சங்கம். இது அமெரிக்காவின் 50 மாகாணங்களில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அடங்கிய ஓர் அமைப்பு.

இந்த அமைப்பு இம்மாதம் 5 ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அமெரிக்காவில் உள்ள 40 வயதுக்குட்பட்ட வழக்கறிஞர்களில் 18 பேரை "சிறந்த வழக்கறிஞர்' விருதுக்கு தேர்வு செய்த அறிவிப்பே அது.

அந்த பதினெட்டுப் பேரில் ஒருவர் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருபா புஷ்பராஜ். தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் பேரன் கிருபா புஷ்பராஜ்.

இந்த விருது அவருக்கு எப்படிக் கிடைத்தது ? என்ற கேள்வியோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள கிருபா புஷ்பராஜ் வீட்டுக்குப் போனோம். அங்கே அவருடைய தந்தை புஷ்பராஜ் தனது மகனைப் பற்றி நம்மிடம் மிக மிகப் பெருமையுடன் பகிர்ந்து கொண்டவற்றில் இருந்து...

"அமெரிக்காவின் சிறந்த வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ள எங்களுடைய மகன் கிருபா புஷ்பராஜ் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்தவர் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அதுதான் உண்மை.

பள்ளியிறுதி வகுப்புப் படிக்கும்போது மருத்துவராக வேண்டும் என்பதே கிருபாவின் விருப்பம். மருத்துவப் படிப்பில் சேர அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே எலக்ட்ரிகல், கம்ப்யூட்டர் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்தார். அதுவே பின்னர் அவர் வழக்கறிஞராக உதவும் என்று அப்போது யாருக்கும் தெரியாது. அதன் பிறகு, சான்டா பார்பராவில் உள்ள "யுனிவர்சிடி ஆஃப் கலிபோர்னியா'வில் முதுநிலை பொறியியல் படித்தார்.

அதன் பிறகு இன்டெல் நிறுவனத்தில் சீனியர் டிசைனர் வேலை. அப்போது வேலை தொடர்பாக கிருபா எழுதிய ஒரு ரிப்போர்ட்டை இன்டெல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் படித்துப் பார்த்தனர். ஒரு தேர்ந்த வழக்கறிஞர் எழுதியதைப் போல அது இருந்ததைப் பார்த்த அவர்கள், கிருபாவை வழக்கறிஞருக்குப் படிக்கச் சொன்னார்கள். அவர்களே படிக்கவும் வைத்தார்கள்.

2007 ஆம் ஆண்டு கிருபா அமெரிக்காவின் ஜுடிசியல் டாக்டரேட் பட்டம் பெற்று வழக்கறிஞர் ஆனார்.

இன்டெல் நிறுவனத்தில் வேலை செய்த கிருபா, இப்போது சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள "ஸ்கொயர் இன்க்' என்ற நிறுவனத்தில் 2013 முதல் சட்டத்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் பகுதி நேர சட்டப் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.

இப்போது கணினித்துறையில் நிறைய மென்பொருள்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய மென்பொருள்களை உருவாக்கி, வெளியிடுகின்றன. ஒரு புதிய மென்பொருளில் ஏற்கெனவே உள்ள பழைய மென்பொருளின் தொழில்நுட்பங்கள் இருக்கலாம். இங்கேதான் காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை பிரச்னை வருகிறது.

கிருபா வழக்கறிஞர் ஆனதும் நிறைய காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை வழக்குகளில் வாதிட்டார். அவர் வாதிடும் முறையை சக வழக்கறிஞர்களும், பல நீதிபதிகளும் கவனித்து வந்தனர். அவர் எடுத்துக் கொண்ட பல வழக்குகள்வெற்றி பெற்றன. இந்த அடிப்படையில்தான் கிருபா தற்போது சிறந்த வழக்கறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கணினி தொடர்பான, மென்பொருள் தொடர்பான காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை வழக்குகளை எடுத்துக் கொண்டு வாதாட, கணினி மென்பொருள் அறிவு மிக மிகத் தேவை. கிருபா கணினி தொடர்பான பொறியியல் படிப்பு படித்துள்ளதால், இந்த வழக்குகளை எடுத்துக் கொண்டு சிறப்பாக வாதாட முடிகிறது.

வரும் நவம்பர் 3 ஆம் தேதி சான்டியாகோவில் நடைபெறவுள்ள "சிறந்த வழக்கறிஞர் விருது' தரும் விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ளவிருக்கிறார்.

கிருபா சட்டம் படித்துவிட்டு சிறிது காலம் வாஷிங்டனில் உள்ள டங்ழ்ந்ண்ய்ள் இர்ண்ங் ககட என்ற சட்ட நிறுவனத்தில் வேலை செய்தார். அதே நிறுவனத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் வேலை செய்திருக்கிறார் என்பதை இந்த இடத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது.

கிருபாவுக்கு தமிழில் ஆர்வம் அதிகம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது மேடைப் பேச்சில் அதிர வைத்திருக்கிறார். அந்த ஆர்வம் இன்னும் விட்டுப் போகவில்லை. அதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் அமெரிக்காவில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்.

கடந்த ஆண்டு சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் இருந்து நிதி திரட்டி அனுப்பி உதவினார்.

கிருபா படிக்க நினைத்தது ஒன்று, அது மருத்துவம். ஆனால் படித்ததோ வேறொன்று... அது பொறியியல். ஆனால் சாதித்ததோ வேறொன்றில் அது சட்டத்துறையில்.  எனவே சாதிப்பதற்குத் தடை எதுவுமில்லை. முயற்சியின்மையைத் தவிர'' என்கிறார் கிருபாவின் தந்தை புஷ்பராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.