யாஷ் குப்தாவின் புதிய விழிப்புணர்வு: மூக்கு கண்ணாடி தானம்!

இவர் இந்தியாவிற்கும், மெக்சிகோவிற்கும் அடிக்கடி விஜயம் செய்து கண்ணாடிகளை அளிக்கிறார்
யாஷ் குப்தாவின் புதிய விழிப்புணர்வு: மூக்கு கண்ணாடி தானம்!

யாஷ் குப்தா வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர். இவர் ஒருநாள் "டேக்வான்டோ' (TAEK WON DO) என்னும் தற்காப்புக் கலையில் ஈடுபட்டிருக்கும்பொழுது அவரது கண்ணாடி உடைந்து விட்டது.

அவரது கண்ணாடியில் பவர் அதிகம் என்பதால் அவற்றைத் தயாரிக்க ஒரு வாரம் ஆனது. அந்த ஒருவாரம் முழுவதும் அவரால் கண்ணாடி அணிய முடியவில்லை. இதனால் பார்வை தெளிவாக இல்லை. மேலும் வகுப்பில் தனது பாடங்களை அவரால் கவனிக்க இயலவில்லை. கண்கள் மற்றும் நெற்றியில் வலி வேறு துன்புறுத்தியது.

அவர் குடும்பத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கண்ணாடி அணியும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். அவர் வீட்டிலேயே 15 மூக்குக் கண்ணாடிகள் பல்வேறு இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. ஆனால் எந்தக் கண்ணாடியும் அவருக்குப் பொருத்தமாக இல்லை. இந்த நிகழ்வு அவருக்கு வேறொரு சிந்தனையைத் தோற்றுவித்தது.

"ஒரு வாரம் மட்டும் கண்ணாடி அணியாமல் என்னால் இருக்க முடியவில்லை. இதுபோல் உலகம் முழுவதும் பார்வைக் குறைபாடுள்ள எத்தனை குழந்தைகள் கண்ணாடி வாங்க முடியாமல் வறுமையில் உழலுகின்றனரோ?' என நினைத்தார்.
 

எனவே தகவல் வலையத்தில் செய்திகள் திரட்டினார். அதன்படி மிகவும் வறுமை நிறைந்த ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில் ஏறத்தாழ 20,00,000 குழந்தைகள் வறுமையால் கண்ணாடி வாங்க முடியாமல் பார்வைக் குறைபாட்டுடன் துன்பப்பட்டு வருவதாகக் கண்டறிந்தார். உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தன் வீட்டில் கூடுதலாக இருக்கும் 15 கண்ணாடிகளை இலவசமாக வழங்கினால் 15 ஏழைக் குழந்தைகள் பயன்பெறலாமே என்று எண்ணினார்.


 எனவே தன் தந்தையின் உதவியோடு தனது திட்டத்தைச் செயல் வடிவமாக்க விழைந்தார். அவர் முதலில் மூக்குக் கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனங்களை அணுகினார். பெரும்பாலான நிறுவனங்கள் தம்மிடம் விற்கப்படாமல் குவிந்திருக்கும் மூக்குக் கண்ணாடிகளை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தன. யாஷ் தனது திட்டத்தைக் கூறியவுடன் அவை மனமகிழ்வோடு தம்மிடம் இருந்த கண்ணாடிகளை அளித்தன.


முதல் நாளிலேயே 80 கண்ணாடிகள் அவருக்குக் கிடைத்தன. அவர் தன் தந்தையின் உதவியோடு "சைட் லேர்னிங்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந் நிறுவனத்திற்கு யார் வேண்டுமானாலும் உதவலாம் என்று தகவல் வலையத்தில் விளம்பரம் செய்தார்.
 

"உங்களிடம் உள்ள பழைய மூக்குக் கண்ணாடிகளை எங்களுக்கு இலவசமாக அளிப்பதன் மூலம் பார்வைக் குறைபாடு உடைய ஏழைக் குழந்தை ஒன்றுக்கு நீங்கள் உதவ முடியும். உங்கள் ஊரில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கண் மருத்துவமனைகளில் எங்கள் நிறுவனத்தின் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்குத் தேவையற்ற மூக்குக் கண்ணாடியை வைத்து விடுங்கள்' என்று தெரிவித்தார்.
 

இத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏராளமான கண்ணாடிகள் மிக மிகப் பழமையானது முதல் மிக நவீனமானது வரை பல்வேறு மாடல்களில் கிடைத்தன. அவ்வாறு பெறப்படும் கண்ணாடிகள் தன்னார்வத் தொண்டர்களால் முதலில் வேதியியல் திரவம் கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. பின்னர் அவற்றின் உரையின் மேல் அவற்றின் "பவர் எண்'' குறிக்கப்படுகிறது.

தன்னிடம் இலவசக் கண்ணாடிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பிற நாடுகளுக்குத் தகவல் வலையத்தில் இவர் விளம்பரம் செய்கிறார். இதன் மூலம் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் இவரிடம் கண்ணாடிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைத் தேவைப்படுவோருக்கு அளிக்கின்றன. இப்படி பிற நாடுகளுக்கு அனுப்பத் தேவையான செலவினங்களையும் யாஷ் குப்தாவின் குடும்பத்தினரே ஏற்றுக் கொள்கின்றனர்.


2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் மூலம் இதுவரை 9,500 கண்ணாடிகள் (ரூ.3,50,000/- மதிப்புடையவை) பல்வேறு நாடுகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை உகாண்டா, சோமாலியா, கென்யா, புருண்டி போன்ற ஆப்பிரிக்க நாடுகளாகும். இவர் இந்தியாவிற்கும், மெக்சிகோவிற்கும் அடிக்கடி விஜயம் செய்து கண்ணாடிகளை அளிக்கிறார்.
 

இந்தத் திட்டத்தைக் குழந்தைகளை மனதில் கொண்டே துவக்கினேன். ஆனால் அது பெரியவர்களுக்கும் இத்தனை பயன்படும் என்று எண்ணவேயில்லை! என்கிறார் இவர். இவருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான "இ-மெயில்கள்' நன்றி தெரிவித்தவண்ணம் குவிந்துகொண்டே இருக்கின்றன.


இக்கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அடுத்த முறை மூக்குக் கண்ணாடி அணிந்தவரைப் பார்க்க நேரிட்டால் நிச்சயம் "யாஷ் குப்தா'வின் முகம் நினைவுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.
 

நாமும் இதுபோன்ற சிறு பொருட்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். ஏனெனில் சிறுதுளிதானே பெரு வெள்ளமாகிறது?
 
 என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
 கடுவெளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com