

நவீன உலகின் அற்புதக் கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது, ஆறாம் புலன் எனப்படும் கணினித் தொழில்நுட்பம். இதை வடிவமைத்தவர், இந்தியாவின் பிரணவ் மிஸ்திரி.
கண், நாசி, நாக்கு, செவி, தோல் என்னும் ஐம்புலன்களால் மனிதன் உலகை உணர்கிறான். அவனால் கண்டுபிடிக்கப்பட்ட கணினியோ, அவனது சைகையைப் புரிந்துகொண்டு ஆறாம் புலனாக அவனை வழிநடத்துகிறது. இதுதான் பிரணவ் மிஸ்திரியின் சிக்ஸ்த் சென்ஸ் தொழில்நுட்பத்தின் (Sixthsense) அடிப்படை. இதற்கான கருவிகளை இணைத்துக் காட்டியதில்தான் அவரது வெற்றி அடங்கி இருக்கிறது.
கழுத்தில் தொங்கும் ஒரு சிறிய கேமரா, கையடக்கமான புரொஜக்டர், நடமாடும் கணினி ஆகியவற்றின் தொகுப்புடன், அதை இயக்குபவரின் சைகைகள் பொருள்களின் மீது ஏற்படுத்தும் நிழலைத் தரவாகக் கொண்டு கணினியை இயக்குவதுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படை.
அணியக் கூடிய கணினி (Wearable Computing) சாதனங்களின் அடிப்படை இதுவே. 1994-இல் ஸ்டீல் மான் என்ற எம்.ஐ.டி. விஞ்ஞானியால் உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, மிஸ்திரி அதை நடைமுறைப்படுத்திக் காட்டியபோது (2009), அவருக்கு வயது 28 மட்டுமே
குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பலன்பூரில் 1981, மே 14-இல் பிறந்தார் பிரணவ் மிஸ்திரி. தந்தை கீர்த்தி மிஸ்திரி. தாய் நய்னா. இரு சகோதரிகள். சிறு வயதிலேயே அதிபுத்திசாலியாக இருந்த பிரணவ், படிப்பிலும் ஜெட் வேகம்.
குஜராத் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட நிர்மா தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து கணினி அறிவியலில் பி.இ. பட்டம் பெற்றார் (2003). அடுத்து, மும்பை ஐஐடியின் தொழிலக வடிவமைப்பு மையத்தில் எம்.டிசைன் பட்டம் பெற்றார் (2005).
பிறகு அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (MIT) சேர்ந்து ஊடகக்கலை மற்றும் அறிவியலில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றார் (2008).
அதைத் தொடர்ந்து, அதே கல்வி நிறுவனத்தின் ஆய்வகத்தில் (எம்ஐடி லேப்) ஆய்வுகளில் ஈடுபட்டு, பிஎச்.டி. பட்டம் பெற்றார் (2012).
தான் படித்த எந்தப் படிப்பிலும் மிக உயர்ந்த மதிப்பெண் பெறுவது அவரது வாடிக்கை. படிக்கும்போது உள்ளிருப்புப் பயிற்சியாக அவர் பணியாற்றிய நிறுவனங்களே அவரது திறமைக்கு உரைகல்.
மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் திட்ட மேலாளராகவும் (2004), யு.எக்ஸ். ஆய்வாளராகவும் (2005-06), ஆராய்ச்சியாளராகவும் (2009) அவர் கோடை விடுமுறைகளில் பணிபுரிந்திருக்கிறார்.
நாஸா, கார்னெகி மெலான் பல்கலைக்கழகம், கூகுள், யுனெஸ்கோ நிறுவனங்களின் கூட்டுறவில் உருவான உலக இணைப்புத் திட்டப் பணியிலும் 2007-இல் பிரணவ் பணிபுரிந்தார்.
ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவுடன், சாம்ஸங் நிறுவனத்தில் அவர் இணைந்தார்.
அவரது கண்டுபிடிப்பு வேகங்களுக்கு ஈடு கொடுப்பதாக சாம்ஸங் அமைந்தது. அதன் சிந்தனையாளர் அமைப்புக்கு தலைவராகவும், சாம்ஸங் ரிசர்ச் அமெரிக்கா நிறுவனத்தின் இயக்குநராகவும் விரைவில் உயர்ந்தார் பிரணவ் மிஸ்திரி.
பிரணவின் கண்டுபிடிப்புகள் கணினி அறிவியலில் புரட்சிகரமானவையாக மதிக்கப்படுகின்றன. அணியக்கூடிய கணினி(Wearable Computing), இணைப்பு நிஜமாக்கம் (Augmented reality), சைகை உணர்தல் (Gestural interaction), செயற்கை அறிவுத்திறன் (A.I.), தானியங்கிப் பார்வை (Machine vision), கூட்டு மதிநுட்பம் (Collective intelligence), தானியங்கியல் (Robotics) ஆகிய நவீன கணினித் துறைகளில் அவரது ஆராய்ச்சிகள் பல புதிய கண்டுபிடிப்புகளை அளித்துள்ளன.
சுட்டி(Mouse) இயக்கம் சுலபமானது. தற்போது, சுட்டியும் இல்லாத கணினி இயக்கத்துக்கான, அகச்சிவப்பு லேசர் ஒளிக்கற்றைகளால் செயல்படும் மவுஸ்லெஸ் (Mouseless)தொழில்நுட்பத்தை மிஸ்திரி உருவாக்கியுள்ளார்.
அதேபோல, தொடுகை மூலமாகவே கணினிகளிடையே தரவுமாற்றத்தை மிக எளிதாக மேற்கொள்ளும் ஸ்பார்ஷ் (Sparsh) தொழில்நுட்பமும், முப்பரிமாணத்தில் படம் வரையும் பேனா, தானியங்கிகளை (ரோபோட்) கட்டுப்படுத்தும் Blinkbot தொழில்நுட்பம் ஆகியவையும் பிரணவ் மிஸ்திரியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்டுபிடிப்புகளின் மூலமாக, 35 வயதுக்கு உள்பட்ட கண்டுபிடிப்பாளர்களில் முதன்மை வகிப்பவராக மிஸ்திரி உருவாகியுள்ளார். அவரது மிக அண்மையக் கண்டுபிடிப்பு, சாம்ஸங் கேலக்ஸி கியர் நவீனக் கடிகாரம் (Samsung Galaxy Gear) ஆகும்.
தற்போது அமெரிக்காவில் இயங்கும் கொரிய நிறுவனமான சாம்ஸங்கின் துணைத் தலைவராக உயர்ந்துள்ள மிஸ்திரியை உலக விஞ்ஞானிகள் கொண்டாடுகிறார்கள். அவரது சிக்ஸ்த் சென்ஸ் (2009) அந்த ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்று பாப்புலர் சயின்ஸ் பத்திரிகை பாராட்டியது.
உலகின் தற்போதைய பத்து சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர் என்று கிறிஸ் ஆண்டர்ஸன் நிறுவனமும், ஆசியாவின் சிறந்த 15 விஞ்ஞானிகளில் ஒருவர் என்று ஆசியன் சயின்டிஸ்ட் பத்திரிகையும், 2013-ஆம் ஆண்டின் இளம் உலகத் தலைவராக உலகப் பொருளாதார மன்றமும் (WEF) பிரணவ் மிஸ்திரியைத் தேர்வு செய்தன. Wearable Guesture Interface - 2010 உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளுக்கான 10 காப்புரிமைகளைப் பெற்றுள்ள அவர், 28 ஆராய்ச்சி நூல்களையும் எழுதியிருக்கிறார்.
" நான் எதைச் செய்கிறேனோ, அதை மிகவும் விரும்புறேன். நான் எதை விரும்புகிறேனோ, அதையே செய்கிறேன்' என்று தனது இணையதளத்தில் (http:www.pranavmistry.com) தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பிரணவ் மிஸ்திரி, இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.