‘பென்சில்மேனியா’ ... இந்தக் கால அம்மாக்களுக்கு குழந்தைகளிடம் பல்பு வாங்குவதே வேலையாகப் போய்விட்டது!

ரொம்ப நேரம் இப்படி எல்லாம் சும்மா சும்மா துருவினா பென்சில் கடவுள் கிட்ட போய் அழும், என் கூரான முனைகளை எல்லாம் துருவித் துருவி, மறுபடியும் புல்ஸ்டாப் வைக்கிறேன் புல்ஸ்டாப் வைக்கிறேன்னு நோட் புக்ல
‘பென்சில்மேனியா’ ... இந்தக் கால அம்மாக்களுக்கு குழந்தைகளிடம் பல்பு வாங்குவதே வேலையாகப் போய்விட்டது!

சும்மா சும்மா பென்சில் துருவிக்கிட்டே இருந்தா அதுக்குப் பேர் பென்சில்மேனியாவாம், எம்பொண்ணு சொல்றா. அவளுக்குக் கூட பென்சில்மேனியா இருக்காம். இதுல இருந்து அவளை நான் காப்பாத்திட்டேன்னா நான் சொல்றதெல்லாம் அவ கேட்பாளாம். 
 
ரொம்ப ஈசின்னு நினைச்சு தான் சரின்னு சொன்னேன்.
 
நேத்து  காலைல சின்ன ஸ்கேல் நீளத்துக்கு அழகா துருவி நீளமா கொடுத்து விட்ட  பென்சில் ஸ்கூல் விட்டு வந்த உடனே,  அவ பேக்ல செக் பண்ணும் போது, அவ கை சுண்டு விரலுக்கும் பாதி நீளம் தான் இருந்தது. நான் அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்!

இன்னைக்கும் அதே தான்... ஆமாங்க.. இன்னைக்கும் கூட நான் அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்!
 
இது தப்பான வழக்கமாச்சேன்னு...
 
‘ரொம்ப நேரம் இப்படி எல்லாம் சும்மா சும்மா துருவினா பென்சில் கடவுள் கிட்ட போய் அழும், என் கூரான முனைகளை எல்லாம் துருவித் துருவி, மறுபடியும் புல்ஸ்டாப் வைக்கிறேன் புல்ஸ்டாப் வைக்கிறேன்னு நோட் புக்ல அழுத்தி அழுத்தி அந்த குட்டிப்பாப்பா உடைச்சு உடைச்சு விடறா! அப்புறம் திருப்பி பென்சில் கூராவே இல்லை, கூராவே இல்லைன்னு சொல்லிட்டு எனக்கு வலிக்க வலிக்க என் தலையை பிடிச்சு ஷார்பனர்க்குள்ள விட்டு  துருவிகிட்டே இருக்கா... எனக்கு வலிக்குதே! ஐயோ கடவுளே! எனக்கு  வலிக்குதே! ... இப்ப நான் என்ன செய்வேன்னு உன்னைப் பத்தி கோள் சொல்லும்னு சொல்லி வச்சேன்.
 
‘ம்ம்... நிஜமாவா சொல்றீங்கம்மா’ என்று கொஞ்ச நேரம் என் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவள்...
 
‘கடவுள் நல்லவர், அப்படி எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டார், அம்மா நீங்க பொய் தானே சொல்றீங்க?!’ - என்றாள்.
 
இல்ல நிஜம்மா தான், நீ மட்டும் பென்சில் சும்மா சும்மா துருவினேன்னு வை நடுராத்திரியில் பென்சில் பூதங்களெல்லாம் கூட்டு சேர்ந்துட்டு உன்னை பயமுறுத்தப் போகுது பாரு’ - என்றேன்.
 
பதிலுக்கு அவள்;

‘நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்களேன்!’ - என்றாள்.
 
எதை ட்ரை பண்ண? - நான் யோசனையாய் அவளைப் பார்த்தேன்.
 
‘நான் எதுக்கு பென்சில் துருவினேன்? முனை கூரா இல்லைன்னு தான? பென்சில் ஏன் கூரா இல்லை? முனை உடைஞ்சதால தான?’
 
‘ம்ம்...’
 
‘முனை ஏன் உடைஞ்சது?’
 
‘ஏன்?’
 
‘நான் அடிக்கடி ஃபுல்ஸ்டாப் வச்சதால தான?’
 
‘ம்ம்... ஆமாம்’
 
‘நீங்களும் ஃபுல்ஸ்டாப் வச்சுப் பாருங்கம்மா!’
 
‘எதுக்கு?’
 
‘நீங்க வைங்க... அப்புறம் நான் சொல்றேன்.’
 
சரி என்று அவளுடைய ஹோம் வொர்க் நோட் எடுத்து ஃபில் அப்ஸ் மட்டும் எழுதிக் கொடுத்தேன், பத்து ஃபுல்ஸ்டாப் வைக்க வேண்டியிருந்தது.
 
அவளைப் போலவே நோட் புக்கில் அழுத்தி ஃபுல்ஸ்டாப் வைத்ததில், பத்து முறை பென்சில் முனை உடைந்தது. பென்சிலை பத்து முறை துருவ வேண்டியதானது.

‘சரி..சரி போதும்மா’ என்று நோட் புக்கை வாங்கிக் கொண்டாள்.
 
நோட் புக்கை மூடி வைத்தேன். 

‘இப்ப புரிஞ்சதா? இனிமே இப்படி சும்மா சும்மா பென்சில் துருவி துருவிப் போட்டு, ஒருநாளைக்கு மூணு பென்சில் காலி செய்ய மாட்டே தானே?’ என்றேன்.

அவளோ கூலாக;
 
ம்ம்... ம்மா இப்ப பென்சில் பூதங்களை வரச் சொல்லுங்க, பார்க்கலாம்?’ - என்றாள்.
 
‘என்னது?’
 
‘ஆமாம், இப்போ நீங்களும் தான பென்சில் துருவி துருவி உடைச்சீங்க, அப்போ பூதம் உங்களையும் சேர்த்து தானே பயமுறுத்தும், அப்படின்னா பரவாயில்லை. பூதங்களை ஒன் பை ஒன் வரச் சொல்லுங்க, சீக்கிரம்... சீக்கிரம் ஆகட்டும்.’ -  என்றாள்.

விளக்கைத் தேய்த்து பூதங்களை வரச்சொல்ல நான் என்ன அலாவுத்தீன் காலத்திலா இருக்கிறேன்?! என்ன கொடுமை குட்டிம்மா இது என்று அங்கலாய்க்கக் கூட முடியாமல் ‘ங்ஙே’ என்று விழிக்க வேண்டியதாயிற்று.
 
இந்தக் கால அம்மாக்களுக்கு குழந்தைகளிடம் பல்பு வாங்குவதே வேலையாகப் போய் விட்டது என்று தெருவோடு யாரோ சொல்லிக் கொண்டு போவது காற்று வாக்கில் காதில் விழுந்தாலும் அது நிச்சயமாக நானில்லை என்று சொல்லத்தான் ஆசை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com