நடிகர் தனுஷைப் பார்த்து வேஷ்டி கட்டக் கற்றுக் கொண்டேன்! இப்படிக் கூறியவர் யார்?

இந்தியத் திருமணங்கள் பொதுவாக ஆடம்பரமானவை. இரண்டு அல்லது மூன்று நாட்கள்
நடிகர் தனுஷைப் பார்த்து வேஷ்டி கட்டக் கற்றுக் கொண்டேன்! இப்படிக் கூறியவர் யார்?
Published on
Updated on
2 min read

இந்தியத் திருமணங்கள் பொதுவாக ஆடம்பரமானவை. இரண்டு அல்லது மூன்று நாட்கள் பலவிதமான நிகழ்ச்சிகள், சடங்குகள் நடைபெற்று அச்சூழலே மகிழ்ச்சியும் குதூகலமும் கலந்திருக்கும். ஆணும் பெண்ணும் திருமண வாழ்க்கைக்குள் நுழைவதற்கு சுற்றமும், நட்பும் புடைசூழ வாழ்த்தி மகிழ்வார்கள். இந்திய திருமணங்களில் தமிழர்கள் திருமணம் மேலும் கவனத்துக்குரியது. காரணம் திருமணத்தையொட்டி நிகழும் பல்வேறு சாங்கியங்கள் அந்த பந்தத்தை உறுதியாக்கும் விதத்தில் நடைபெறும். மாப்பிள்ளை, மணப்பெண் இருவரும் தங்களின் வாழ்நாளில் கதாநாயக நாயகியாக கருதப்படும் தினம் நிச்சயம் திருமண நாள்தான். மறக்க முடியாத பல நினைவுகளை சுமக்க வைக்கவும், புது வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கவும் திருமணம் என்ற சுப நிகழ்வு ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவமானது.

இதையெல்லாம் முதலில் படித்துத் தெரிந்தும், அதன் பின் நேரில் பார்த்தும் தமிழ் கலாசாரத்தின் மீது பற்று கொண்ட ஜப்பானிய ஜோடி ஒன்று தங்களது சொந்த ஊரான டோக்யோவிலிருந்து 6400 கிலோமீட்டர் தூரம் பயணித்து, மதுரையில் தமது திருமணத்தை தமிழ் முறைப்படி விமரிசையாக நடத்திக் கொண்டார்கள். 

ஷிஹாரு ஒபாடா மற்றும் யுடொ நைனாகா இருவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களது சொந்த நாட்டில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. 27 வயதான மொழியியல் ஆய்வாளரான ஒபாடா தமிழ் நாட்டைப் பற்றியும், தமிழ் கலாச்சாரத்தைப் பற்றியும் 2014-ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி செய்து வருகிறார். அவருக்கு தமிழ் மொழியின் மீது தீவிர ஈடுபாடு அப்படித்தான் தொடங்கியது.

ஆராய்ச்சியின் போது ஒபாடாவுக்கு மதுரையைப் பூர்விகமாகக் கொண்டு தற்போது டோக்கியோவில் வசித்துவரும் வி.வினோதினி மற்றும் வெங்கடேஷ் தம்பதியர் பரிச்சயமானார்கள். அவர்களின் உதவியுடன்தான் தனது கனவை நிறைவேற்றிக் கொண்டார் இந்த இளம் ஆராய்ச்சியாளர். தமிழ் முறைப்படி மேளம் கொட்டி, தாலி கட்டி, அக்னியைச் சுற்றி ஏழு முறை வலம் வந்தனர் மணமகள் ஒபாடாவும் மணமகன் நைனாகாவும். 

தங்களது திருமணம் குறித்து ஒபாடா கூறுகையில், 'ஜப்பானில் கூட சமீப காலமாக எங்களது பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்வது குறைந்து வருகிறது. சர்ச்சுகளில்தான் பெரும்பாலான திருமணங்கள் இப்போதெல்லாம் நடைபெறுகிறது. தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொள்வது என்னுடைய நீண்ட நாள் கனவு. எங்கள் வீட்டுப் பெரியவர்களை சம்மதிக்க வைப்பது கடினமாக இருக்கவில்லை. எங்கள் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து திருமணத்தில் கலந்து கொண்டார்கள்’ என்றார்

ஒபாடா அழகாகவும் சரளமாகவும் தமிழில் பேசுகிறார். தனது ஆராய்ச்சிக்காக தமிழைத் தெளிவாகக் கற்றுள்ளார். மேலும் தமிழ் கலாசாரத்துக்கும் ஜப்பானிய கலாச்சாரத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்றும் தெரிவித்தார். ஒபாடாவின் காதல் கணவர் நைனாகாவுக்கு தமிழ் சினிமா மிகவும் பிடிக்குமாம். நடிகர்கள் தனுஷ், விஜய் ஆகியோரைப் பார்த்துத்தான் வேஷ்டி கட்டிக் கொள்ள கற்றுக் கொண்டாராம் இந்த 31 வயது ஜப்பானியர். நைனாகாவுக்கும் தமிழ் கலாச்சாரம் பிடித்துப் போய்விட, மனைவி சொல்ல மந்திரம் என்று தமிழ் கற்று வருகிறாராம்.

இந்தத் திருமணத்தின் ஹைலைட் ஒபாடா நைனாகாவின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருமே வேஷ்டி சட்டை, புடவைகளில் ஜொலித்தனர் என்பதுதான்.

தகவல் மற்றும் புகைப்படங்கள் நன்றி - நியூஸ் மினிட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com