பாம்பு ஒயின் தயாரிக்க முயற்சித்த சீனப்பெண் பாம்புக் கடியால் மரணம்!

பாம்பு கடித்து மரணமடைந்த பெண்ணின் தாயார், மகளின் இறப்பு குறித்து பேசுகையில், தன் மகள் கொடிய விஷப் பாம்பை விலைக்கு வாங்கியது அதிலிருந்து மருத்துவப் பயன் மிக்க ஒயின் தயாரிப்பதற்காகத் தான் என்று 
பாம்பு ஒயின் தயாரிக்க முயற்சித்த சீனப்பெண் பாம்புக் கடியால் மரணம்!

நம்மூரில் இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறதா எனத்தெரியவில்லை. ஆனால், சீனாவில் கொடிய விஷம் கொண்ட பாம்பில் இருந்து மருத்துவ குணம் மிகுந்த ஒயின் தயாரிப்பது வழக்கமான நடைமுறை. ஆனாலும் சீன அரசு, இந்த நடைமுறைக்கு தடை விதித்துள்ளது. அப்படியான நிலையில் 21 வயது சீனப்பெண் ஒருவர், இ - காமர்ஸ் மூலமாக குவாங்டாக்கில் இருந்து செயல்படும் ஸுவான்ஸுயான் எனும் ஆன்லைன் போர்ட்டல் மூலமாக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கினார். குவாங்டாக்கில் இந்த வகைப் பாம்புகள் அதிக அளவில் இருப்பதால் அங்கே அதன் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். ஆன்லைன் மூலமாக விலைக்கு வாங்கப்பட்ட விஷப்பாம்பு உள்ளூர் கூரியர் மூலமாக அந்தப் பெண்ணுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. தாங்கள் டெலிவரி செய்தது விஷப்பாம்பு என்று தெரியாமலே அவர்கள் அதை பெண்ணின் முகவரிக்கு டெலிவரி செய்திருக்கிறார்கள். அப்படித்தான் சீனாவின் Xinhua news Agency கூறுகிறது.

பாம்பு கடித்து மரணமடைந்த பெண்ணின் தாயார், மகளின் இறப்பு குறித்து பேசுகையில், தன் மகள் கொடிய விஷப் பாம்பை விலைக்கு வாங்கியது அதிலிருந்து மருத்துவப் பயன் மிக்க ஒயின் தயாரிப்பதற்காகத் தான் என்று கூறியிருக்கிறார்.

பாம்பு விஷத்திலிருந்து ஒயின் தயாரிப்பதென்றால், முழுப்பாம்பையும் ஆல்கஹாலில் ஊற வைத்து அதன் மூலம் கிடைக்கக் கூடிய சாறிலிருந்து தயாரிக்கப் படுவது என்கிறார்கள். அப்படிக் கிடைக்கக் கூடிய சாற்றின் எஃபெக்ட் ஏடாகூடமாக இருக்கும் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். பாம்பு ஒயின் என்ற பெயரில் பெரிய பெரிய கண்ணாடி பாட்டில்களில் உயிருடன் பாம்பைப் பிடித்து ஆல்கஹாலில் ஊற வைத்திருக்கும் காட்சி சீனாவில் சகஜமான காட்சியாக இருக்கிறது. பார்க்கும் நமக்குத்தான் பகீரென்று இருக்கிறது.

பாம்பு கடித்து இறந்த பெண்... பாம்பு ஒயின் தயாரிப்பதற்காக அந்தக் கொடிய விஷம் கொண்ட பாம்பை பாட்டிலில் இருக்கும் ஆல்கஹாலில் அடைக்க முயன்றிருக்கிறார். அப்போது சந்தடி சாக்கில் தப்பிய பாம்பு இளம்பெண்ணை கடித்து விட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறது. இளம்பெண் மரணத்திற்குப் பின் அவரது வீட்டைச் சுற்றியிருந்த காட்டில் இருந்து விஷப்பாம்பை மீட்டனர் சீனக் காட்டிலாகாவினர் 

ஆன்லைன் போர்ட்டல்களில் இத்தகைய முறையில் வனவிலங்குகளை விற்பனை செய்வதற்கு தடை அறிவிக்கப்பட்டிருந்த போதும் சில இணையதளங்கள் மிகச்சிறிய அளவில் பொதுமக்களைத் தூண்டக்கூடிய விதத்தில் அறிவிப்பு விளம்பரங்களை வெளியிட்டு முறைகேடான வகையில் கொடிய விஷப்பாம்புகளை விற்பனை செய்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வருகின்றன.

இ - காமர்ஸ் என்று சொல்லத்தக்க மின்னணு வர்த்தக முறையில் அதிகம் ஈடுபாடு கொண்ட சீனர்கள் அதன் மூலமாக வர்த்தகம் செய்து இ காமர்ஸ் வளர்ச்சியை அசுரத்தனமாக வளர்த்து விட்டிருக்கிறார்கள். இதன் மூலமாக பல பில்லியன் டாலர்கள் இதில் புழங்குகிறது.

ஆனால், அது ஒரு இளம்பெண்ணின் உயிரைப் பலி கொள்ளும் அளவிற்குச் சென்றது கண்டிக்கத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com