பிளாஸ்டிக் கேரி பேக்குகளைத் தவிர்க்கச் சொல்லும் கியூட்டான விடியோக்கள், பாருங்கள் மனம் மாறுவீர்கள்!
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 28th June 2018 12:46 PM | Last Updated : 28th June 2018 01:00 PM | அ+அ அ- |

கடந்த மாதத்தில் ஒருநாள் அலுவலகம் முடிந்து மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். செல்லும் வழியில் எங்கள் குடியிருப்பில் இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றில் மறுநாளைக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் செல்வது வழக்கம். அன்றும் அப்படிப் பொருட்களை வாங்கிக் கொண்டு பில் போடும் போது பில் கவுண்ட்டரில் இருந்த பையன் சொன்னான்... மேடம், நேத்து அசோஸியேசன் மீட்டிங் நடந்ததாம்... அப்போ நம்ம குடியிருப்பில் இனி யாரும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாதுன்னு தீர்மானம் போட்டிருக்காங்களாம். அதனால அடுத்த மாசத்துல இருந்து நம்ம கடையில பிளாஸ்டிக் பைகள் கிடையாது மேடம். ப்ளீஸ் இனிமே கோச்சுக்காம நீங்களே பை கொண்டு வந்துடுங்களேன்’ என்றான். எனக்கு முதலில் அவனது இந்தக் கோரிக்கை எரிச்சலூட்டினாலும், அடுத்த மாசத்துல இருந்து தானே... இப்போ இல்லையே... இப்போ பிளாஸ்டிக் பை இருக்கா, இல்லை நான் வாங்கின பொருட்களை எல்லாம் துப்பட்டால மூட்டை கட்டித்தான் தூக்கிட்டுப் போயாகனுமா? என்று ஒரு நொடி யோசித்துக் கொண்டு நின்றேன். அதற்குள் எனக்கடுத்து நின்றிருந்த பெண்மணி ஒருவர், ‘ஆமா, இவங்க மீட்டிங் போடும் போதெல்லாம் இப்படித்தான் எதையாவது கிளறி விட்டுப் போவாங்க, ஆனா, ஜனங்க அதுக்கு ஒத்துக்கனுமே? பாருங்க ஒருத்தர் கையிலயாவது துணிப்பையோ, சணல் பையோ இருக்கான்னு? நீங்க பிளாஸ்டிக் கேரி பேக் தரலைன்னு வைங்க, இவங்கல்லாம் உடனே கடையை மாத்துவாங்களே தவிர, துணிப்பைக்கோ, சணல் பைக்கோ மாத்துவாங்கன்னு எல்லாம் எனக்குத் தோணலை’ என்றார். இதைக் கேட்டதும் கடைப்பையனுக்கு சட்டென முகம் வாடியது. அவன் பேச்சின்றி ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் பைகளில் ஒன்றை உருவி எனக்கான பொருட்களை அதில் கொட்டி என்னிடம் நீட்டினான்.
அவன் அத்தனை சொல்லியும், பிளாஸ்டிக் பைகளை நிராகரிக்கச் சொல்லி நானே எத்தனையோ முறை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதியும் கூட ஒவ்வொரு முறையும் மளிகைச் சாமான்கள் வாங்கக் கடைக்குச் செல்லும் போதும் சரி, புத்தாடைகள் வாங்க ஜவுளிக்கடைகளுக்குச் செல்லும் போதும், இனிப்பகங்களுக்குச் செல்லும் போதும், மீன் வாங்கச் செல்லும் போதும், பூ வாங்கச் செல்லும் போதும், அத்தனை ஏன்? வெளியில் தெருவில் இறங்கி காசு கொடுத்து எதை வாங்குவதாக இருந்த போதும் என் கண்களும், இதயமும் முதலில் தேடியது இந்த பிளாஸ்டிக் பைகளைத் தானே! இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளாமல் பிளாஸ்டிக் அரக்கனை ஒழிப்போம் என்று கோஷமிடுவதும், கட்டுரைகள் எழுதிக் குவிப்பதும் எந்த விதத்தில் நியாயம் என்று தோன்றியது.
இப்போது இந்த ‘Say No To Plastic' விடியோக்களைக் காணும் போது, கடைப்பையன் சொல்லும் போதே, ‘சரி நீ சொல்வது நியாயமானது’ என்று கூறி எனது துப்பட்டாவை விரித்து மூட்டையாக்கி நான் வாங்கிய காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துச் சென்றிருக்கலாம். கொஞ்சம் சினிமாட்டிக்காக இருந்தாலும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றவர்களில் சிலருக்கேனும் அது மிகச்சிறந்த நல்லுதாரணமாக ஆகி இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
இதோ அந்த வீடியோக்களை நீங்களும் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.
தெருவோரக் கடையில் பழம் வாங்கினால் எப்படிச் சொல்வது ‘Say No To Plastic carry bag?'
மீன் வாங்கச் செல்லும் போதும் சொல்லலாம் ‘Say No To Plastic'!
விசா இமிக்ரேஷன் அலுவலகம் போல கட்டுப்பாடுகள் நிறைந்திருந்தால் மட்டுமே தவிர்க்கக் கூடிய பழக்கமா இது?!
தள்ளுவண்டியில் காய்கறிகள் வாங்கும் போதும் ‘Say no to carry bag (No to plastic)’
பேக்கரியில் வடாபாவ் வாங்கினாலும் கூட உங்களால் சொல்ல முடியும், ‘Say no to carry bag (No to plastic)’...
மேற்கண்ட விடியோக்களின் அடிப்படை...
‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ எனும் ஒற்றை வாக்கியமே!
அதை இறுகப் பற்றிக் கொண்டோமெனில் நம்மால் பிளாஸ்டிக்கை மட்டுமல்ல சூழலுக்கும், மனித உயிருக்கும் கேடு விளைவிக்கக் கூடிய விதத்திலான அச்சுறுத்தல்களுக்குமே முற்றும் போடலாம்.
ஆனால், நம் மக்கள் மனசு வைக்க வேண்டுமே!
அதிலிருக்கிறது சூட்சுமம்!
Video Courtesy: CARRY ON BAN PLASTIC YOU TUBE VIDEOS.