Enable Javscript for better performance
|BAN PLASTIC TRY TO USE USED CLOTH BAGS FOREVதுணிப்பை பயன்படுத்துங்க பிளாஸ்டிக் அரக்கனை தவிருங்கள்!- Dinamani

சுடச்சுட

  

  பழைய துணிகள் சேரச் சேர எடைக்குப் போடாதீங்க, துணிப்பையா மாத்துங்க உங்களுக்கும் லாபம், பிளாஸ்டிக் அரக்கனையும் ஒழிக்கலாம்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 29th June 2018 04:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  eco_mithra

   

  இன்றைய ஆங்கில நாளிதழில் ஒன்றில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளைத் தவிர்க்க... பயன்படுத்திச் சலித்த பழைய துணிகளில் தைத்த துணிப்பைகளைப் பயன்படுத்துமாறு தாங்கள் பொதுமக்களை ஊக்குவித்து வருவதாக ‘எக்கோ மித்ரா’ என்ற தன்னார்வ சேவை அமைப்பினர் கூறியிருந்தனர். அட! என்று ஆச்சர்யமாக இருந்தது. பழைய காலத்தைப் போல அல்ல, இப்போது ஒவ்வொரு தனி நபரிடமுமே அதிக அளவில் அடிக்கடி புத்தாடைகள் வாங்கும் மனப்பான்மை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறையக் காணோம். எனவே எல்லோருடைய வீடுகளிலும் பழைய துணிகளுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. 

  முன்பெல்லாம் இல்லத்தரசிகள் பொங்கலுக்கும், திபாவளிக்கும், புது வருஷத்துக்கும் மொத்தமாக வீட்டை ஒழிக்கும் போது இந்தப் பழைய துணிகளை எடுத்து தனியாகப் பிரித்து மூட்டை கட்டி பாத்திரக்காரனுக்கோ, பேரீச்சம் பழக்காரனுக்கோ எடைக்கு எடை போட்டு அதற்கு ஈடாக இட்லிப்பானையோ, டிஃபன் பாக்ஸோ, ஈயப்பாத்திரமோ, பெரிய பிளாஸ்டிக் பேசினோ, அல்லது பேரீச்சம் பழங்களோ வாங்கிக் கொள்வார்கள். நகரங்களில் தற்போது பாத்திரக்காரர்களையோ, பேரீச்சம் பழக்காரர்களையோ காண முடிவதில்லை. குப்பை சேகரிப்பவர்களிடம் பலர் பழைய துணிகளைக் கொடுத்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

  அது தவிர, கைவிடப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்காக பயன்படுத்தி பழசான நல்ல துணிமணிகள் இருந்தால் தானமாகத் தாருங்கள் என்று கேட்டு ஆதரவற்றோர் இல்லப் பிரதிநிதிகள் பலர் வருகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு வாகனம் இருக்கிறது. அதில் தாங்கள் சேகரிக்கும் பழைய துணிகளை மூட்டைகளாகக் கட்டி எடுத்துச் செல்கிறார்கள். இது அந்தக் குழந்தைகளுக்குப் பயன்பட்டால் அது நிச்சயம் நல்ல விஷயம். ஏனெனில் சிலர் தானமாகத்தானே தருகிறோம் என்கிற அலட்சியத்தில் சுத்தமாகப் பயன்படுத்தக் கூடிய கண்டீஷனில் இல்லாத கிழிசல்களைக் கூட தானம் தந்து வள்ளல்களாகப் பார்ப்பார்கள். அதனால் அந்தக் குழந்தைகளுக்கும் பலன் இல்லை, தானம் அளிப்பவர்களுக்கும் பலனில்லை. முடிவில் நானும் கூட ஆதரவற்றோருக்கு உதவுகிறேனே! என்ற வெற்று சவடால் ஜம்பம் மட்டுமே மிஞ்சும்.

  மேற்கண்ட உபாயங்கள் தவிர்த்து கிராமங்களில் பழைய துணிகளைக் கொண்டு மற்றுமொரு உபயோகமும் செய்வார்கள். அதென்னவென்றால், அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக மடித்துப் போட்டு தைத்து தலையணைகள், தலையணை உறைகள், மெத்தைகள், நிலத்திரைகள், கால் மிதியடிகள் செய்வது. சணல் கயிறுகளைத் திரிப்பது போல கிழிந்த துணிகளை கயிறாகத் திரிப்பது என்று பழைய துணிகளை மீள்பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றுவார்கள். கிராமப் புறங்களில் நீங்களும் கூட கண்டிருக்கக் கூடும் வண்ண, வண்ணத் துணிகளை கயிறாகத் திரித்து எருமை மாட்டிற்கு மூக்கணாங்கயிறு இட்டிருக்கும் விதத்தை.

  மேலே சொன்ன அத்தனை வழிமுறைகளையும் காட்டிலும் சிறந்தது இந்த துணிப்பை தயார் செய்யும் முறை.

  ஏனெனில் இது தன் கையே தனக்குதவி என்பது போல நமக்கு நாமே உதவி செய்து கொள்ளப் போகும் உத்தி என்பதால்.

  இதைக் கொண்டு நம்மால் பிளாஸ்டிக்கைத் தடை செய்ய முடியுமெனில் இது சிறந்த வழிமுறையின்றி வேறென்ன?! சொல்லப்போனால் எனது பள்ளிக் காலங்களில் பிளாஸ்டிக் பைகள் என்றால் அவை ஜவுளிக்கடைப் பைகள் மட்டுமே. மற்றபடி மளிகைக்கடை, மருந்துக்கடை, ஹோட்டல்களில் எல்லாம் இன்று நாம் சரளமாகப் புழங்குகிறோமே அத்தகைய பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வெகு குறைவு. குறைவென்பதைக் காட்டிலும் இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். எங்கும் நீக்கமற மஞ்சள் பைகள் நிறைந்திருந்தன. அதே சமயம் சாப்பாட்டுக் கடைகளில் வாழை இலையில் மடித்து நியூஸ் பேப்பர் சுற்றித் தருவார்கள். அவையெல்லாமும் சீக்கிரம் மட்கி விடக்கூடியவை என்பதால் அவற்றால் எதிர்கால சந்ததியினருக்கு ஆபத்துகள் இல்லை. ஆனால், பிளாஸ்டிக் பைகள் அப்படிப்பட்டவை அல்லவே! பல யுகங்களுக்கும் மேலாக அவை மட்கவே மட்காது எனில் அவற்றைப் பயன்படுத்தும் நாம் நிச்சயம் அதைத் தவிர்க்கத்தான் வேண்டுமில்லையா? அதனால் தான் பிளாஸ்டிக்கைத் தவிர்க்க நினைக்கும் பலருக்கு இந்த உத்தி சிறந்ததெனக் கருதப்படுகிறது.

  உங்களது வீட்டுத் தேவைகளுக்காக துணிப்பைகள் தயாரிக்க வேண்டுமெனில், முதலில் நீங்கள் தற்போது பயன்படுத்தாத, அளவில் சின்னதாகிப் போன துணிகளாகப் பார்த்து தேர்ந்தெடுங்கள். அவற்றை முதல்முறை தைப்பது என்றால் டெய்லரிடம் சென்று அளவு குறித்து வாங்கி அவரிடமே முதல் பையை தைத்துச் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு பிறகு அந்த அளவை முன் மாதிரியாக வைத்து அடுத்தடுத்து துணிப்பைகளை நாமே கூட கை தையலாகத் தைத்துக் கொள்ளலாம். இதில் நாம் மறக்கக்கூடாத விஷயம், வீட்டில் தைத்து தயாராக வைத்திருக்கும் துணிப்பைகளை வெளியில் கடை கண்ணிகளுக்கோ அல்லது கோயில், குளங்களுக்கோ அட... எங்கு செல்வதாக இருந்தாலுமே தான் இவற்றை உடன் எடுத்துச் செல்ல மறக்கக் கூடாது. நண்பர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்டுகளாகக் கூட இவற்றை அனுப்பித் தரலாம். அதனாலொன்றும் நஷ்டமாகி விடாது.

  இதில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சின்னஞ்சிற்உ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றால்;

  மூட்டையாகப் பை கொள்ளாமல் காய்கறி பழங்கள் வாங்கி விட்டு அவற்றை மெலிதான கைப்பிடி கொண்ட துணிப்பைகளில் திணித்து எடுத்துச் செல்ல முயன்று பை அறுந்ததும், ஐயே இந்த துணிப்பை லட்சணமே இதான்’ என்று அலுத்துக் கொள்ளக்கூடாது.

  கணவர் அல்லது மகன், மகள்களின் பயன்படுத்த முடியாத ஜீன்ஸ் காற்சட்டைகளைக் கொண்டு கனமான பைகளைத் தைத்து வைத்து விட்டால் அவை சிறப்பாக எடை தாங்கும்.

  துணிப்பைகளில் இன்னொரு முக்கியமான செளகர்யம், இவற்றை ஒருமுறை பயன்படுத்தி விட்டு அப்படியே பிளாஸ்டிக் கேரி பேக்குகளைப் போல தூக்கி எறிந்து விடத் தேவை இல்லை. மீண்டும், மீண்டும் துவைத்துப் பயன்படுத்தலாம். கைகளால் துவைக்க முடியாதவர்கள் தரமான மெஷின் வாஷிங் கூட செய்யலாம்.

  இதொன்றும் புதிய முறை இல்லை, ஏற்கனவே நம் அம்மாக்களும், பாட்டிகளும் முன்பு செய்து கொண்டிருந்த வழிமுறை தான். நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

   

  THANKS TO ECOMITHRA :)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai