கிரீன் டீ குடிப்பவரா நீங்கள்? பக்க விளைவுகளையும் தெரிந்துகொள்ளுங்கள்!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று கூறப்படும் கிரீன் டீ குடிப்பதால் பல உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 
கிரீன் டீ குடிப்பவரா நீங்கள்? பக்க விளைவுகளையும் தெரிந்துகொள்ளுங்கள்!

உலகம் முழுவதுமுள்ள மக்களிடம் பிரபலமான பானங்களில் ஒன்று கிரீன் டீ. பால் டீ, பிளாக் டீயை விட இன்று கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

பெரும்பாலானோர் உடலில் கலோரி அதிகம் சேராமல் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற முனைப்பில் கிரீன் டீயை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், இதில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். 

ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று கூறப்படும் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளாக, 

► மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

►பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது

►இதய நோய்கள் வருவதற்கான அபாயங்களைத் தடுக்க உதவுகிறது.

►வளர்சிதை மாற்த்தை  மேம்படுத்தி உடலில் கொழுப்பைக் குறைப்பதால் உடல் எடை குறைகிறது. 

►சுவாசப் பிரச்னைகள் நீங்குகின்றன. வாய் துர்நாற்றம் நீங்கும். 

► சர்க்கரை நோயின் அபாயம் குறைகிறது. ரத்த அழுத்தத்தையும் குறைகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால், கிரீன் டீ குடிப்பதால் பல உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்று நிபுணர்கள் தெரிவிகின்றனர். 

வயிற்றுக்கோளாறுகள்

வெறும் வயிற்றில் அதிகமாக கிரீன் டீ குடிப்பது வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும். சிலர் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. 

வெறும் வயிற்றில் குடிப்பதால் நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலச் சுரப்பு, செரிமானப் பிரச்னை, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அல்சர் இருப்பவர்கள் கிரீன் டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும். 

எந்த டீ குடித்தாலும் முன்னதாக ஒரு தம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு டீ அருந்துவது நல்லது. 

தலைவலி 

டீ குடிப்பதால் தலைவலி மறையும் என்று சொல்லக் கேட்டிருப்போம், ஏன் தலைவலிக்கு எளிய தீர்வாக பெரும்பாலானோருக்கு டீ உள்ளது. ஆனால், அதிக கிரீன் டீ குடிப்பது தலைவலியை ஏற்படுத்தும் சில நேரங்களில் தலைச்சுற்றலும் ஏற்படலாம். 

தூக்கமின்மை

கிரீன் டீயில் தூக்கத்திற்கு எதிரான ஒரு கலவை உள்ளது. கிரீன் டீயில் உள்ள ரசாயனக் கலவைகள் தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் போன்ற ஹார்மோன் சுரப்புகளை கட்டுப்படுத்துவதால் தூக்கக் கோளாறுகளை ஏற்படுகிறது. 

கிரீன் டீயில் எல்-தியானைன் என்ற ரசாயனம் விழிப்புணர்வையும் கவனத்தையும் அதிகரிக்கிறது. இது சில நபர்களின் தூக்கத்தை சீர்குலைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

எனவே, உறங்குவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்னதாக மட்டுமே டீயை அருந்த வேண்டும். 

இரும்புச்சத்து குறைபாடு 

கிரீன் டீயின் மற்றொரு பக்க விளைவு என்னவென்றால், இதை அதிக அளவில் குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். அதாவது உடல் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனை இழக்கிறது. 

வாந்தி, குமட்டல்

கிரீன் டீ அதிகமாக குடித்தால் குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். ஏனென்றால், கிரீன் டீயில் டானின்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. 

தலைச்சுற்று மற்றும் வலிப்பு

கிரீன் டீ அதிக அளவில் உட்கொள்ளும்போது இதிலுள்ள காஃபின் தலைசுற்றல் அல்லது வலிப்பை ஏற்படுத்தும். மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது.

சில நேரங்களில் கிரீன் டீ குடிப்பதால் காது வலி கூட ஏற்படலாம். 

ரத்தப்போக்கு 

சில நேரங்களில் கிரீன் டீ ரத்தப்போக்கு ஏற்படுத்துவதைத் தூண்டலாம். கிரீன் டீயில் உள்ள கலவைகள் ரத்தத்தை உறைய வைக்கும் ஃபைப்ரினோஜென் என்ற புரதத்தின் அளவைக் குறைக்கின்றன. கொழுப்பு அமிலங்களின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது. ரத்த உறைதல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்கவும்.

கல்லீரல் நோய்

கிரீன் டீயின் அதிக நுகர்வு கல்லீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும். கல்லீரலுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய காஃபினே இதற்குக் காரணம். 

ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம்

கிரீன் டீ ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தக்கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பக்கவிளைவு அரிதானதுதான் என்றாலும் இதயப் பிரச்னை உள்ளவர்கள் இதனை தவிர்த்துவிடுவது நல்லது. 

கிரீன் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று பல ஆராய்ச்சிகள் எடுத்துரைத்தாலும் சில ஆய்வுகள் கிரீன் டீ சில நபர்களுக்கு ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் என்று கூறுகிறது. 

கிரீன் டீ ரத்த அழுத்தத்தை உயர்த்தியதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ள அதேநிலையில் மற்றொரு ஆய்வில், கிரீன் டீ குடிப்பது, ரத்த அழுத்த மருந்துகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், கிரீன் டீ சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

எலும்பு வலுவிழப்பு

கிரீன் டீ அதிகமாக குடிப்பவர்களுக்கு எலும்புப் புரை போன்ற எலும்பு நோய் வரும் அபாயம் அதிகரிக்கிறது. கிரீன் டீயில் உள்ள ரசாயனம் கால்சியத்தை உறிஞ்சுவதைத் தடுப்பதால் எலும்புகள் வலுவிழக்க நேரிடலாம். 

கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகள் 

கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்கள் கிரீன் டீயைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படலாம் அல்லது குழந்தை பிறப்பில் குறைபாடுகள் ஏற்படலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 

அதேபோன்று குழந்தைகளும் கிரீன் டீ குடிக்கும் பட்சத்தில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படலாம். 

கிரீன் டீ குடிக்கலாமா? எவ்வளவு குடிக்க வேண்டும்?

கிரீன் டீ குடிக்கலாம். எதையுமே அளவோடு சாப்பிட்டால் விளைவுகள் அதிகமிருக்காது. 

கிரீன் டீயை அதிக அளவு குடிப்பதால் மட்டும் பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது நாள் ஒன்றுக்கு 2 கப்-க்கும் மேல் டீ அருந்தினால் மேற்குறிப்பிட்ட விளைவுகள் ஏதேனும் ஏற்படலாம். 

அளவாக நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் வெறும் வயிற்றில் பசிக்கும்போது அருந்தக்கூடாது. 

சாப்பிடுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவும், தூங்குவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்னதாகவும் அருந்த வேண்டும். 

கிரீன் டீயை அப்படியே அருந்தாமல் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, கிரீன் டீயின் பக்க விளைவுகளை குறைக்கிறது. 

குறிப்பிட்ட அளவில் மட்டுமே கிரீன் டீயை அருந்தினால் அதன் நன்மைகளை மட்டும் பெறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com