அலுவலகத்திற்குச் சென்று பணிபுரிவது நல்லது, ஏன்?

தற்போது வீட்டுச் சூழ்நிலையில் இருந்து அலுவலகத்திற்கு திரும்பியுள்ள பலரும் முன்பைவிட உற்சாகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அலுவலகத்திற்குச் சென்று பணிபுரிவது நல்லது, ஏன்?

2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகையே புரட்டிப்போடும் அளவுக்கு இப்படி ஒரு நோய்த் தொற்றுப் பேரலை வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படி வந்தபோதும், தொடர் அலைகளின் மூலமாக ஆண்டுகள் கணக்கில் பாதிப்பு இருக்கும் என்றும் யாரும் சிந்திக்கவில்லை. இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்கு தொடரும் என்றும் கணிக்க முடியவில்லை. ஆம், இந்த கரோனா தொற்று இப்போது உலக மக்களோடு ஐக்கியமாகிவிட்டது. 

முதல் அலை முடிந்து கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் இயல்புக்குத் திரும்பிய நிலையில், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இரண்டாம் அலையின் தாக்கத்தின் விளைவுகளை ஓரிரு வார்த்தைகளில் கூறிவிட முடியாது. 

கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகளும் தடுப்பூசி பயன்பாடும் இப்போது இருப்பதால், மூன்றாம் அலை வந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர். 

இதனால், இரண்டாம் அலையின் ஆயுள்காலம் முடிந்ததாகக் கருதிக்கொண்டு நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். கரோனா பரவும் விகிதம் 5%க்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இதனால், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஐடி நிறுவனங்கள் சிலவற்றைத் தவிர, கரோனா கட்டுப்பாடுகளுடன் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன. 

கரோனா பொதுமுடக்கத்தினால் வீட்டினுள் முடங்கியிருந்த பலரும், உடல்நலத்துடன் மனநலமும் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று படிப்படியாக அலுவலகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 

இவ்வாறு வீட்டுச் சூழ்நிலையில் இருந்து அலுவலகத்திற்கு திரும்பியுள்ள பலரும் முன்பைவிட உற்சாகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வீட்டிலேயே வேலை பார்த்த நிலை மாறி இன்று அலுவலகச் சூழலில் வேலை செய்வது உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளைத் தருவதாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 

அலுவலகத்திற்குச் செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன... 

உடற்பயிற்சியாகும் பயணம்

ஓராண்டுக்கும் மேலாக நீங்கள் அலுவலகத்திற்குச் செல்லவில்லை. உங்கள் வீடு, கணினி, மேசை, குடும்பத்தினர் என்றே உங்கள் வாழ்க்கை இருந்திருக்கும். உங்கள் வீடு மற்றும் அருகிலுள்ளவற்றைத் தாண்டி உங்கள் கண்கள் எதையும் ரசித்திருக்காது. 

ஆனால், அலுவலகத்திற்குச் செல்லும்போது நீங்கள் குறிப்பிட்ட தூரம் உங்களுடைய சொந்த வாகனங்களிலோ, பேருந்து அல்லது ரயில் ஒன்றை பொதுப்போக்குவரத்திலோ பயணம் செய்யவேண்டியிருக்கும். 

பேருந்து, ரயிலில் செல்பவர்கள், சிறிது தூரமாவது நடக்க வேண்டியிருக்கும். ஏன், காரில் செல்பவர்கள்கூட பார்க்கிங் பகுதியில் இருந்து அலுவலகத் தளத்திற்கு நடந்து செல்வீர்கள். இதனால் உங்களுக்குத் தெரியாமலே ஓர் எளிமையான நடைப்பயிற்சியை நீங்கள் மேற்கொள்கிறீர்கள். இதனால் உடல் உறுப்புகள் புத்துணர்ச்சி அடைகின்றன. 

அடுத்ததாக, வெளியில் செல்லும்போது உங்கள் உடலுக்குத் தேவையான சூரிய ஒளி (வைட்டமின் டி) அதிகமாகக் கிடைக்கிறது. இது எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளின் வலிமையை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்றின் பாதிப்பைக் குறைக்கிறது. 

புதிய காற்றினை சுவாசிக்கிறீர்கள் (மாசு அதிகமுள்ள பகுதிகளைத் தவிர்த்து). புதிய சுற்றுச்சூழலை உணர்கிறீர்கள். உடலும் மனமும் ஒரு சூழ்நிலையில் இருந்து மற்றொரு சூழ்நிலைக்கு மாறும்போது ஒட்டுமொத்த புத்துணர்ச்சியும் உங்களுக்கு கிடைக்கிறது. 

மேலும், தொற்றுநோய் காரணமாக பலரும் நடத்தல், ஓடுதல் உள்ளிட்ட உடற்பயிற்சிக்காக வெளியில் செல்லாத காரணத்தால், மனிதனின் உடல் செயல்பாடு பெருமளவில் குறைந்துள்ளதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் தனது ஆய்வில் உறுதி செய்துள்ளது. 

ஆனால், அலுவலகம் செல்லும்போது தினசரி பயணம் என்பது தவிர்க்க முடியாதது என்பதால் கால்கள் செயல்பாட்டில் இருப்பதாக சர்ரே பல்கலைக்கழகத்தின் சுகாதார உளவியல் பேராசிரியர் ஜேன் ஓக்டன் கூறுகிறார்.

மேலும் அவர், 'வீட்டை விட்டு எங்கு சென்றாலும், எந்த வாகனத்தில் சென்றாலும் நீங்கள் நடமாட்டத்தில் இருக்கிறீர்கள் அல்லது உங்கள் உடல் அசைவில் இருக்கிறது என்று அர்த்தம். இதனால் குறைவான நேரமே அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால், வீட்டில் முழு நேரம் உட்கார்ந்தே இருத்தல் உடல்நலனுக்கு நல்லதல்ல என்பது அனைவருக்குமே தெரியும்' என்கிறார். 

வழக்கமான செயல்கள் 

அலுவலகத்திற்குச் செல்லும்போது சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் காலையில் சரியான நேரத்திற்கு எழுந்திருப்பது, சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, குறிப்பாக தினசரி ஒரேநேரத்தில் சாப்பிடுவது, காலை அல்லது மாலை உடற்பயிற்சி செய்வது என கட்டமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கைமுறை கிடைக்கும். 

மினசோட்டா பல்கலைக்கழக ஆய்வில், ஆரோக்கியமான பழக்கங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வழக்கமான வாழ்க்கைமுறையே சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேராசிரியர் ஓக்டன் இதுகுறித்து கூறுகையில், 'வீட்டில் இருந்து வேலை செய்யும்போது இந்த நடைமுறைகள் எளிதில் உடைந்துவிடும். உதாரணமாக விடுமுறை நாள்களில் நாம் சரியான நேரத்தில் சாப்பிடுவதோ, தூங்குவதோ கிடையாது. அனைத்து வேலைகளும் ஒழுங்கற்றதாக மாறிவிடும். வீட்டிலிருந்து வேலை செய்தால், வேலைக்கும் ஓய்வுக்கும் இடையிலான உளவியல் மாறுபடுகிறது. 

மாறாக, கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைமுறை உங்களை ஒழுங்குபடுத்துகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றல் சீராகக் கிடைக்க குறிப்பிட்ட நேர இடைவெளியில் மூன்று வேளை சாப்பிடுவது அவசியமாக இருக்கிறது. ஆனால், வீட்டில் இருக்கும்போது அதிகமாக சாப்பிடுவது, சாப்பிடாமல் இருப்பது என ஒழுங்கற்ற உணவுமுறைகள் உருவாகின்றன. மேலும், வழக்கமான செயல்கள், உங்கள் நேரத்தை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது. 

தேநீர் இடைவேளையின் சக்தி

வீட்டில் இருந்து வேலை செய்வதைவிட அலுவலகத்திற்கு வந்து, கணினியில் வேலை செய்பவர்கள்கூட அதிக உடல் இயக்கத்தைக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

வீட்டில் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருக்க நேரிடும். காணொலி அழைப்புகள், தொடர்ச்சியான இ-மெயில்கள் என்று வந்தவண்ணம் இருக்கும். ஆனால், அலுவலகத்தில் நேரடி தகவல்தொடர்பு இருப்பதால் ஒரு மேசையில் இருந்து மற்றொரு மேசைக்கு நேரடியாகச் செல்வது, கலந்துரையாடுவது போன்ற எளிமையான செயல்பாடுகளால் உடல் இயக்கம் அதிகரிக்கிறது. 

மேலும், தேநீர் இடைவேளையில் நீங்கள் சில நிமிடங்கள் எழுந்து வெளியே செல்வது எளிமையான நடைப்பயிற்சி என்பதைத் தாண்டி முதுகு மற்றும் கழுத்து வலியைக் குறைகிறது. வீட்டில் காபி, டீ உங்கள் மேசைக்கே வந்துவிடுவதால் முதுகு வலி வருவது சகஜம்தான். அதுமட்டுமின்றி அலுவலகத்தில் தேநீர் இடைவேளையில் நீங்கள் சில நிமிடங்கள் உங்கள் சக ஊழியருடன் பேசுவதால் ரிலாக்ஸ் அடைவீர்கள். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உறவுகள்

வாழ்க்கையோடு ஒன்றிய உறவுகளாக பெற்றோர், மனைவி, குழந்தைகள், உடன் பிறந்தோரை நினைக்கிறோம். ஆனால், மன ஆரோக்கியத்திற்கு மிகச் சிறிய உறவுகளும் தேவை என்று உளவியலாளர்கள் சில ஆய்வுகளின் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளனர். இந்த சாதாரண உறவுகளின் சக்தி அதிகம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

அலுவலகத்தில் நீங்கள் வேலைப் பளுவின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்தாலும் சக ஊழியர் அந்த நிலையை மாற்ற உங்களுக்கு ஆறுதல் கூறுவார். இதனால் அந்த மனநிலையில் இருந்து நீங்கள் எளிதில் வெளிவர முடியும். ஆனால், வீட்டில் அத்தகைய ஒன்றை எதிர்பார்க்க முடியாது. குடும்பத்தினர் உங்களிடம் பேசினாலும் அலுவலகச் சூழல், அலுவலகப் பிரச்னையை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. 

மேலும், வீடு, அலுவலகம் என இரண்டு சூழல் இருப்பதால் ஒரு இடத்தில் பிரச்னை இருந்தாலும் மற்றொரு இடத்தில் தானாக சரியாகும் சூழல் ஏற்படலாம். 

வீட்டில் இருந்து வேலை செய்த பலரும் தனிமையை உணர்ந்திருப்பதாகக் கூறுவது இதற்கு எடுத்துக்காட்டு. அலுவலகத்திற்குத் திரும்புவது உண்மையில் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் மன அழுத்தம் குறையும்போது சாதரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சீரான தூக்கம்

வீட்டில் இருக்கும்போது வேலை நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக படுக்கையில் இருந்து எழுந்து, ஒரு டீ குடித்துவிட்டு, கணினியைத் திறப்பவர் பலர். நேரம் இன்னும் இருக்கிறது என்று காலையில் அதிக நேரம் தூங்குவதும், இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும் உடல்நலனைக் கெடுக்கும். 

கரோனா காலத்தில் பெரும்பாலான நடுத்தர வயதினர் 43% தங்களுடைய தூக்கம் மோசமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். வெறும் 8% பேர் மட்டுமே தூக்கம் மேம்பட்டது என்று கூறியுள்ளனர். இதில் 49% பேர் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. லண்டனில் உள்ள தனியார் கிளினிக் இந்த ஆய்வினை மேற்கொண்டது. இதனால், அலுவலகத்திற்கு மீண்டும் திரும்புவது தூக்கத்தை சரிசெய்யும். ஓரளவுக்கேனும் சரியான நேரத்திற்கு தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருக்க முடியும். 

எனவே, வீட்டுச் சூழ்நிலையில் இருந்து நீங்கள் அலுவலகம் செல்ல விரும்பினால் தாராளமாக இந்த நேரத்தில் முடிவெடுக்கலாம். சூழ்நிலை கருதி அவசியமெனில் மட்டும் வீட்டில் இருந்து பணிபுரியலாம். தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் ஒவ்வொருவரும் உங்களுடைய உடல் மற்றும் மன நலன் கருதி அலுவலகத்திற்கு சென்று பணியை மேற்கொள்ளலாம். எனினும் பாதிப்பு அதிகம் இருப்பதால் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் தொற்றின் அபாயத்தில் இருந்து உங்களைக் காக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com