கண் மை/ காஜல் பயன்படுத்துவது நல்லதா?

கண்களை அழகுபடுத்த கண் மை அல்லது காஜலைப் பயன்படுத்துவது இன்று பெண்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கண்கள், பேசும் ஒரு மொழி என்பதால் அதனை அலங்கரிக்க வேண்டியதும் அவசியமாகிறது. 
கண் மை/ காஜல் பயன்படுத்துவது நல்லதா?
Published on
Updated on
2 min read

'கண்ணுக்கு மை அழகு' 

கண்களை அழகுபடுத்த கண் மை அல்லது காஜலைப் பயன்படுத்துவது இன்று பெண்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கண்கள், பேசும் ஒரு மொழி என்பதால் அதனை அலங்கரிக்க வேண்டியதும் அவசியமாகிறது. 

கண்களை அழகுபடுத்தினாலே ஒட்டுமொத்தமாக முகத்திற்கு ஒரு அழகு கிடைக்கிறது என்பது எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை. 

அந்தவகையில், ஆதி காலத்தில் இருந்து கண்களை அழகுபடுத்த பெண்கள் பயன்படுத்தும் ஒரு பொருள் கண் மை. இன்று, காஜல், ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ கிரீம்/பவுடர் என்று கண் அழகுப் பொருள்கள் பெருகிவிட்டன. 

கண் மை போடுவது வெளிப்புறத்தில் கண்களை புத்துணர்ச்சியாகவும் அழகாகவும் காட்டுகிறது. கண்களுக்கு ஈர்ப்பதத்தை அளித்து புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. கண்ணின் தசைகளை பலப்படுத்தவும் கண்களில் தூசி ஏற்படுவதைத் தடுக்கவும் பயன்படுகிறது. ஆனால், இவையனைத்தும் இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட கண் அழகுப் பொருள்களுக்கான பலன்கள்.

தற்போது அழகுப் பொருள்களில் பல்வேறு வகையான ரசாயனப் பொருள்கள் கலப்பதால் அவை தீங்கு விளைவிக்கக்கூடியவை. கண் பார்வைக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். 

முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண் மை முழுக்க முழுக்க இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்டது. கற்பூரம், காய்கறி எண்ணெய், விளக்கெண்ணய், கரிசலாங்கண்ணி உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போதும் ஆர்கானிக் அழகுப் பொருள்களும் அதிகம் இருக்கின்றன. அவை சரியாக இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொண்டு பயன்படுத்தலாம். 

ஆமணக்கு எண்ணெய், வைட்டமின் இ ஆயில் உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படும் கண் அழகுப் பொருள்களை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் எண்ணெய் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும். முழுவதும் இயற்கைப் பொருளாக இல்லாவிட்டாலும் முடிந்தவரை ரசாயனம் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

கண் மைகளை தினசரி பயன்படுத்தலாம். கண் அழகுப் பொருள்களை வெளியில் செல்லும்போது பயன்படுத்திவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கண்டிப்பாக அதற்குரிய ரிமூவர் கொண்டு எடுத்துவிட வேண்டும். உதாரணமாக தேங்காய் எண்ணெய், பாதாம் அல்லது ஆலிவ் ஆயில் கொண்டு கண் மையை முற்றிலும் எடுத்துவிட வேண்டும். மேக்-அப் ரிமூவர் திரவங்களையும் பயன்படுத்தலாம். குறைந்தது தூங்குவதற்கு முன் கண் மையை அகற்றிவிட்டுத் தான் தூங்கச் செல்ல வேண்டும். 

கண்கள் மிகவும் சென்சிடிவ் பகுதி என்பதால் தரமில்லாத விலை குறைந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம். 

சமீபத்தில் தயாரிக்கப்பட்ட பொருளாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அதுபோல ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயன்படுத்த வேண்டாம். 

ஒரு நாள் முழுவதும் அழியாமல் இருக்கக்கூடிய கண் மைகளை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவற்றில் ரசாயனம் அதிகம் கலந்திருக்க வாய்ப்புள்ளது. 

தேவைப்படும்போது மட்டும் கண் அழகுப் பொருள்களை பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும்போது முற்றிலும் தவிர்த்துவிடலாம். 

கண்களுக்கு அதிக எரிச்சல் தரக்கூடிய பொருள்களை தவிர்த்துவிடுங்கள். அதுபோல கண்களுக்கு வெளியே மட்டும் பொருள்களை சரியாக பயன்படுத்துங்கள். 

காஜல் அல்லது கண் மையை அகற்றாமல் இருந்தாலும் கருவளையம் வரலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

கருவளையம் இருக்கும்போது கண் மை போட்டாலும் நன்றாக இருக்காது. எனவே, கருவளையங்களை அகற்ற வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு போன்ற கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தி சரிசெய்வது அவசியம். கணினி, மொபைல் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். 

மேலும், கண்கள் செழிப்பான தோற்றத்துடன் ஆரோக்கியத்துடன் இருக்க விட்டமின் ஏ உள்ள பொருள்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com