சாப்பிட்டவுடன் டீ / காபி குடிக்கலாமா? - ஐசிஎம்ஆர் கூறுவது என்ன?

சாப்பிட்டவுடன் டீ / காபி குடிக்கலாமா? அப்படி குடித்தால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா?
tea cofee
Published on
Updated on
2 min read

காலையில் எழுந்தவுடனும், வெளியில் செல்லும்போதும் சில குறிப்பிட்ட உணவுகளுக்குப் பின்னரும் டீ / காபி அருந்துவது பெரும்பாலானோருக்கு வழக்கமான ஒன்று. இதனால் நாளுக்கு நாள் டீக்கடைகளும் டீ பிரியர்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். காபிக்கும் அப்படியே...

இதில் சாப்பிட்டவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக ஹோட்டல்களுக்குச் சென்றால், காலை அல்லது இரவு உணவுக்குப் பின்னர் டீ/காஃபி அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அதன் பிரியர்கள். ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவும், புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும் என்றெல்லாம் நம்பப்படுகிறது.

ஆனால், சாப்பிட்டவுடன் டீ / காபி குடிக்கலாமா? அப்படி குடித்தால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா?

Coffee,
Coffee,

ஐசிஎம்ஆர் கூறுவது...

உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் அல்லது காபி சாப்பிடுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆர்). அவ்வாறு அருந்துவது பல்வேறு சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

ஒரு கப் (150 மி.லி.) காபியில் பொதுவாக 80-120 மில்லி கிராம். காஃபின் உள்ளது. அதேநேரத்தில் இன்ஸ்டன்ட் காஃபியில் இது 50-65 மி.கி. இருக்கும்.

ஒரு கப் தேநீரில் சுமார் 30-65 மி.கி. காஃபின் உள்ளது. காஃபின் அளவைப் பொருத்தே பாதிப்புகள் உள்ளன.

மேலும் முக்கியத் தகவலாக, இரும்பு உறிஞ்சப்படுதலைத் தடுக்கும் டானின்கள் டீ மற்றும் காபியில் உள்ளன.

சாப்பிட்டவுடன் டீ / காபி குடிக்கும்போது இந்த டானின்கள், உடலானது மற்ற உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுதலில் தடையை ஏற்படுத்துகிறது. இரும்புச்சத்து ரத்த உற்பத்திக்கு இன்றியமையாதது என்பதால் ரத்த சோகை ஏற்படலாம்.

எனவே, உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னும் சாப்பிட்ட ஒரு மணி நேரம் பின்னும் டீ / காபியைத் தவிர்க்க வேண்டும்.

மற்ற உணவுகளில் உள்ள சத்துகளை உடல் பெற வேண்டும் என்றால் இவ்வாறு செய்வது அவசியமானது.

பால் அல்லாத தேநீர்

மேலும் டீ குடிக்கும்போது பால் அல்லாத டீ குடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பிளாக் டீ/ க்ரீன் டீ ஆகியவற்றை பருகலாம்.

இந்த வகை டீயில் தியோப்ரோமைன், தியோபிலின் போன்ற சேர்மங்கள் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. கரோனரி இதய நோய், வயிற்று புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

அதேபோன்று காபியும் காஃபின் அளவு மிதமாக இருக்குமாறு எடுத்துக்கொள்ளலாம். இது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. நாள் ஒன்றுக்கு எடுத்துக்கொள்ளும் டீ / காபி அளவு 300 மி.லி.யைத் தாண்டக்கூடாது. அதிக அளவு காபி உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com