
பணக்காரராக வேண்டும் என எல்லாருக்குமே விருப்பம்தான். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. ஒரே நாளில் நடந்துவிடும் விஷயமுமல்ல. அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். படிப்படியாக உழைப்பை அதிகரித்து சேமிப்பைக் கூட்டி இறுதியாக அடைவதே ஆகும். இதற்கு நீண்ட நெடும் காலம் ஆகலாம். வெகு சிலருக்கு மட்டுமே இது எளிதாக கிடைக்கிறது.
இதற்காக சில பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். பணக்காரர் ஆகாவிட்டாலும் சேமிப்பைக் கூட்ட அதற்கான வாய்ப்புகளைப் பெற இந்த பழக்கங்கள் உதவும்.
சேமிப்பு
பண சேமிப்பு என்பது ஒரே நேரத்தில் நடப்பதல்ல. நாள்தோறும் நம்முடைய பழக்கவழக்கங்களினால் கட்டமைக்கப்படுகிறது. இதற்கு முதலில் சேமிப்பை கடைப்பிடிக்க வேண்டும். நாள்தோறும் ஒரு தொகை அல்லது சம்பளம் வந்தவுடன் ஒரு தொகையை சேமிப்புக்கு என்று ஒதுக்கிவைத்துவிட வேண்டும். முதலில் இது கடினமாக இருந்தாலும் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
படிக்க வேண்டும்
பணம், சேமிப்பு, வணிகம் ஆகியவை குறித்து தினமும் எதையாவது படிப்பது உங்களின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். சேமிப்பு பற்றி தினமும் படிக்கும்போது அதனைச் செய்யத் தூண்டும். அதேபோல வணிகத்தில் வெற்றி பெற்றவர்கள் பற்றி படிக்கலாம். இது உங்கள் மனநிலையை கூர்மைப்படுத்துவதுடன் உங்கள் சிந்தனைத் திறனை அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும்.
செலவுகளைக் கண்காணிக்க வேண்டும்
வரவுக்கேற்ற செலவு வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் வரவைவிட செலவு குறைவாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் செலவழிப்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மாதம் பட்ஜெட் போட்டு அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும். எதற்காக எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என நீங்கள் இதன் மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.
முதலீடு தேவை
செல்வந்தர் ஆவதற்கு சேமிப்பு மட்டும் போதாது, முதலீடு தேவை. இப்போது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்க பாத்திரங்கள், பி.எஃப் என பல சேமிப்பு வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்க வேண்டும்.
பொறுமை வேண்டும்
பணத்தை பெருக்க முயற்சிப்பவர்கள் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து நிதி சார்ந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு எல்லாம் தெரியும் என்று இருக்கக் கூடாது. பணத்தை படிப்படியாக பெருக்கி ஒருகட்டத்தில் வெற்றி வரும்போது அதையும் புத்திசாலித்தனமாகக் கையாண்டு மேலும் வளம் பெற வேண்டும்.
இவையெல்லாம் மிகவும் எளிமையான பழக்கங்கள்போல தோன்றினாலும் இதனை அமைதியாகக் கடைப்பிடிக்கும்பட்சத்தில் பணக்காரர் ஆகவில்லை என்றாலும் பொருளாதாரம் சார்ந்து உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.