குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கலாமா? சரிசெய்யும் 10 இயற்கை வழிமுறைகள்!

குழந்தைகளுக்கு இருமலை சரிசெய்ய உதவும் இயற்கையான வழிமுறைகள் பற்றி...
Can we give cough medicine to children
கோப்புப்படம்IANS
Published on
Updated on
2 min read

குழந்தைகளுக்கு இருமல் மருந்து தேவைதானா? எத்தனை வயது முதல் கொடுக்கலாம்? வீட்டிலேயே இயற்கையான முறையில் குழந்தைகளின் இருமலை சரிசெய்யும் வழிமுறைகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' எனும் இருமல் மருந்தால் மத்தியப் பிரதேசத்தில் 24 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம் மூடல், உரிமையாளர் கைது, இதர மருந்துகள் குறித்த ஆய்வு, தமிழ்நாட்டில், மத்திய பிரதேசத்தில் சில அதிகாரிகள் இடைநீக்கம் என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்ட உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த மருந்துகள் வெளிநாடுகளுக்கு எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று இந்திய அரசு கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்ரீசன் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த 'கோல்ட்ரிஃப்'(Coldrif), குஜராத்தில் ரெட்னெக்ஸ் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த 'ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்'(Respifresh TR) மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான ஷேப் பார்மா பிரைவேட் லிமிடெட் தயாரித்த 'ரீ லைஃப்'(ReLife) ஆகிய 3 இருமல் மருந்துகளில் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய டைஎத்திலீன் கிளைகால் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குழந்தைகளுக்கு இருமல் அதுவாகவே சரியாகிவிடும், மருந்துகள் தேவையில்லை என்று அனைத்திந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ரோஹன் கிருஷ்ணன் கூறுகிறார்.

"குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை முடிந்தவரை தடுக்க வேண்டும், போதிய சத்துள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் பரிந்துரையில் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ கூடாது. பொதுவாக 5 வயதுக்குள்பட்டவர்களுக்கு இருமல் மருந்துகள் தேவையில்லை" என்றும் தெரிவித்தார்.

மேலும் மருந்துகளை தர ஆய்வு செய்ய கடுமையான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு மருந்துகள் இல்லாமல் இயற்கையான முறையில் சளி, இருமலை சரிசெய்யும் வழிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நீரேற்றம்

குழந்தைகளுக்கு தண்ணீர் தருவது தொண்டைக்கு இதமளிக்கும். மிகவும் பயனுள்ள மருந்துகளில் ஒன்றாகும். இந்த திரவங்கள் சளியை மெல்லியதாக்கி தொண்டையை ஆற்றி நீரிழப்பைத் தடுக்கின்றன. காஃபின் இல்லாத தேநீர், குழம்பு அல்லது எலுமிச்சை நீர் போன்ற சூடான திரவங்கள் எரிச்சலைக் குறைக்கின்றன.

நீராவி பிடித்தல்

குழந்தைகளுக்கு நீராவி பிடித்தல் சிகிச்சையை செய்யலாம். சாதாரண வறண்ட காற்று தொண்டையை எரிச்சலூட்டுவதன் மூலம் இருமலை மோசமாக்கும். நீராவி பிடிப்பது காற்றில் ஈரப்பதத்தைச் சேர்ப்பதன் மூலம் இந்த எரிச்சலைப் போக்க உதவுகிறது. 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நீராவி சிகிச்சை நன்றாக வேலை செய்கிறது.

தேன்

ஒரு ஸ்பூன் தேன் தொண்டை எரிச்சலைக் குறைக்கிறது. மேலும் தேன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கூட கொண்டிருக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இருமலைக் குறைக்க படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு டீஸ்பூன் தேன் கொடுங்கள். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது.

உப்பு நீர் வாய் கொப்பளித்தல்

உப்பு நீர் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. சளியை நீக்குகிறது, தொண்டை எரிச்சலை நீக்குகிறது. 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உப்பு நீர் வாய் கொப்பளித்தல் செய்யலாம். தொண்டை வலி நிவாரணத்திற்கான இது ஒரு சிறந்த வழியாகும். இதற்கு அரை டீஸ்பூன் கல் உப்பை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2-3 முறை செய்தால் பலன் கிடைக்கும்.

தூங்கும் போது தலையணை

தூங்கும்போது குழந்தையின் தலை லேசாக உயர்த்தி இருக்க வேண்டும். குறைந்த உயரத்தில் உள்ள தலையணையை வைக்கலாம். இதனால் சளி தொண்டையில் தேங்குவதற்குப் பதிலாக வெளியேற அனுமதிக்கிறது, இதனால் இரவு நேர இருமல் குறைகிறது.

உப்பு நீர் நாசி சொட்டுகள்

குழந்தைகளுக்கு மூக்கில் உள்ள சளியை எடுக்க முடியாத நேரத்தில் இந்த நாசில் டிராப்ஸ் நன்றாக உதவுகிறது. உப்பு நீர் சொட்டுகள் மூக்கில் விடப்படும்போது சளி வெளியே வருகிறது. குழந்தையின் தலையை பின்னால் சாய்த்து, ஒவ்வொரு நாசியிலும் 2-3 சொட்டுகளை விடவும். ஒரு நிமிடம் கழித்து ஒவ்வொரு நாசியையும் மெதுவாக உறிஞ்ச பல்ப் சிரிஞ்ச் அல்லது டியூப் ஆஸ்பிரேட்டரைப் பயன்படுத்தவும்.

தேவையான ஓய்வு

குழந்தைகளுக்கு, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. இது அவர்களை சோர்வடையச் செய்யலாம். குணமடைய ஓய்வு அவசியம். அதனால் நீண்ட நேரம் குழந்தை தூங்குவது நல்லது.

சிறப்பு உணவுகள் மற்றும் பானங்கள்

குழந்தைகள் வெந்நீர் கொடுப்பதுடன் பழ ஸ்மூத்திகள் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள் பயன்படுத்தலாம். சிக்கன் குழம்பு, சூப் போன்ற சூடான திரவங்கள் கொடுக்கலாம்.

நாசி ஸ்ட்ரிப்ஸ்

பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதைப் போலவே

குழந்தைகளுக்கான நாசி ஸ்ட்ரிப்ஸ் இருக்கின்றன. 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

மெந்தால்

மெந்தால் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்கள் உள்ளிட்ட களிம்புகள் மூக்கு, நெஞ்சுப்பகுதி ஆகியவற்றில் தேய்க்கலாம். 2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

இவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது.

Summary

Can we give cough medicine to children? Natural remedies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com