
குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
முன்பெல்லாம் குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி இயல்பான எடையைவிட குறைவான எடையுடன் இருப்பார்கள். உலகம் முழுவதுமே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இல்லாதது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது.
ஆனால், இப்போது பெரும்பாலான குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை இருக்கிறது. எடை குறைவாக உள்ளவர்களைவிட எடை அதிகமாக உள்ள குழந்தைகள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர். இது வரலாற்றில் சுகாதாரத்தில் மிகப்பெரிய உருமாற்றம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
யுனிசெஃப் அறிக்கையின்படி, 5 முதல் 19 வயதுக்குள்பட்ட சுமார் 18.8 கோடி குழந்தைகளில் தோராயமாக 10ல் ஒருவருக்கு தற்போது உடல் பருமன் இருக்கிறது. 2000 ஆம் ஆண்டில் இது வெறும் 3% ஆக இருந்த நிலையில் தற்போது 9.4% ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முழு முதற்காரணம் உணவுதான் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். முன்பெல்லாம் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள், நமது வாழ்க்கை முறையில் அதிகம் இருந்தன. இவை குறைந்த கலோரியுடன் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை வழங்கின. ஆனால் இப்போதெல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை குழந்தைகள் அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர்.
இதனால் குழந்தைகளுக்கு உடல் பருமன், டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய், புற்றுநோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி குழந்தைகளின் வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் மன நல்வாழ்வைப் பாதிக்கிறது.
இதனைத் தவிர்க்க வேண்டுமென்றால் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள பழக்க வேண்டும். அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பொருந்தா உணவு எனும் ஜங்க் ஃ புட் காரணமாக குழந்தைகளின் உடல் பருமன் அதிகரித்திருப்பதாக 190-க்கும் மேற்பட்ட நாடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது.
துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் குறைவான எடை கொண்ட குழந்தைகளைவிட அதிக எடை கொண்ட குழந்தைகள்தான் அதிகம் இருக்கின்றனர்.
உலகளவில் 5 குழந்தைகளில் ஒருவருக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. பசிபிக் தீவுகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிகமாக உடல் பருமன் காணப்படுகிறது.
நியுவே 38%, குக் தீவுகள் 37%, நவ்ரு 33%. சிலி, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் உடல் பருமன் பிரச்னை அதீத கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குளிர் பானங்கள், சமைக்கப்பட்ட உணவுகள், பிஸ்கட் போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இதற்கு காரணமாக இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் சர்க்கரை, கொழுப்பு, உப்பு, செயற்கை இனிப்புகள் அதிகமாக உள்ளன. இந்த பொருள்கள் அதிகளவில் விளம்பரம் செய்யப்படுவதால் குழந்தைகளிடம் நேரடி தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன.
பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த பாரம்பரிய உணவுகளுக்கு மாற்றினால் மட்டுமே இதனை சரிசெய்ய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எதிர்கால விளைவுகள் என்னென்ன?
குழந்தை பருவத்தில் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது வாழ்நாள் முழுவதும் விளைவுகளை ஏற்படுத்தும். உடல் பருமன், டைப்-2 நீரிழிவு, இதய நோய்கள் மட்டுமின்றி சில புற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இது அறிவாற்றல் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். பல நாடுகளில், குழந்தைகள் உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரண்டையும் எதிர்கொள்கின்றனர். அதாவது உடல் பருமனுடன் இருப்பார்கள், அதேநேரத்தில் ஊட்டச்சத்து குறைவாகவும் இருப்பார்கள். அவர்கள் சாப்பிடும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்து இருக்காது. இது குழந்தைகளின் உடல்நலனை இன்னும் சிக்கலாக்குகிறது.
குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னைக்கு யுனிசெஃப் சில வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
பள்ளிகள், வீடுகளில் குழந்தைகள், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு கூடுதல் வரிகள் மற்றும் லேபிளிங் இருக்க வேண்டும். இதன் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
உணவுப் பொருள்களின் சீரமைப்பு முக்கியம். உணவுப் பாதுகாப்புக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும்.
மெக்ஸிகோ போன்ற நாடுகள், பள்ளிகளில் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை தடை செய்துள்ளன. பிற நாடுகளும் இவற்றை கருத்தில் கொள்ளலாம்.
பொருளாதார பிரச்னைகள்
குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னையைத் தடுக்கத் தவறினால் மிகப்பெரிய பொருளாதார தாக்கங்கள் ஏற்படும் என்று யுனிசெஃப் அறிக்கை எச்சரிக்கிறது. ஏனெனில் 2035 ஆம் ஆண்டுக்குள் உடல் பருமனுக்கான செலவு ஆண்டுதோறும் 4 டிரில்லியன் டாலரைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, ஆரம்பத்திலேயே இதில் தலையிட்டு சரிசெய்து ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.