இந்தியாவில் காஸ்ட்லி A/C  ஹெல்மெட்டுகள் வொர்க் அவுட் ஆகுமா?!

A/C பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிற ஹெல்மெட்டுக்களுடன் ஒப்பிடுகையில் ஃபெஹெரின் எடை குறைவாகக் கருதப்படுகிறது. இதன் எடை 1,450 கிராம் மட்டுமே
இந்தியாவில் காஸ்ட்லி A/C  ஹெல்மெட்டுகள் வொர்க் அவுட் ஆகுமா?!

ஃபெஹெர் ACH-1 வகை ஹெல்மெட்டுகள் உலகின் எடை குறைந்த முதல் A/C ஹெல்மெட்டுகளாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வகை ஹெல்மெட்டுகளில் தலையின் பின்புறப் பகுதியில் மிகச்சிறிய A/C பொருத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட்டுகளின் தரத்தை நிர்ணயிக்க அரசு வரையறுத்துள்ள நிபந்தனைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்டுகள் சந்தையில் தற்போது கிடைக்கக் கூடிய பிற தரமான ஹெல்மெட்டுகளைப் போன்றே குறைந்த எடை கொண்டவை.

இந்த வகை ஹெல்மெட்டுகளில் தலைப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள A/C மெஷினை மோட்டார் சைக்கிளில் உள்ள பேட்டரி மூலமாகவே சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட்டின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள ஃபெஹெர் டியூப்ளர் ஸ்பேசர் ஃபேப்ரிக்கானது ஹெல்மெட்டின் உட்புறத்தில் குளிர்காற்று இதமாகப் பரவி ஹெல்மெட்டின் உள்ளே மூச்சடைக்கும் விதமாக இல்லாமல் வாகன ஓட்டிகளை ரிலாக்ஸாக உணரச் செய்யத்தக்க அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடும் வேனல் காலங்களில் வாகனத்தை இயக்கும் போது ஹெல்மெட் அணிந்து கொண்டு வண்டி ஓட்டுவது மிகக்கொடுமையான அனுபவமாக இருக்கும். பல வாகன ஓட்டிகளின் இத்தகைய அனுபவங்களை மனதில் கொண்டே ஃபெஹெர் இப்படி ஒரு ஹெல்மெட் வடிவமைப்பில் கவனம் செலுத்தி உருவாக்கியுள்ளது. என்ற போதிலும், இவ்வகை ஹெல்மெட்டுக்களின் பிரதான நோக்கம் முகத்தில் A.C காற்றை தவழச் செய்வது மட்டும் அல்ல. ஹெல்மெட்டின் உட்பகுதியில் காற்றோட்டத்தை சமமாக்கி, வெப்பநிலையை குறைத்து வாகன ஓட்டிகளுக்கு சுவாசத்தை சீராக்கித் தருவதே என்பதால் அதற்கேற்றவாறு ஹெல்மெட்டுகளின் வடிவமைப்பில் பிரத்யேகக்கவனம் செலுத்தி இவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஹெல்மெட்டுகளின் உட்புற வெப்பநிலை 15 டிகிரிக்கும் குறைவாக இருக்குமாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
 
A/C பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிற ஹெல்மெட்டுக்களுடன் ஒப்பிடுகையில் ஃபெஹெரின் எடை குறைவாகக் கருதப்படுகிறது. இதன் எடை 1,450 கிராம் மட்டுமே. ஹெல்மெட்டின் ஓட்டுப்பகுதி ஃபைபர் மேட்டால் உருவாக்கப்பட்டிருப்பதால் இதன் எடை குறைவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்வகை ஹெல்மெட்டுக்களுக்கு ECE மற்றும் DOT தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஃபெஹெர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே இத்தகைய ஹெல்மெட்டுகளை முன்பதிவு செய்து பெற முடியும். இந்தியப் பணமதிப்பில் இவற்றின் அடக்க விலை 38,600 ரூபாய். தற்போது கிளாஸ் மற்றும் மேட் ஃபினிஷ் எனும் இரு வகை வடிவமைப்பில் ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. ஹெல்மெட்டுகளை வைத்துக் கொள்ள ஒரு பேக் பேக், பனி மற்றும் ஸ்கிராட்ச்களை தவிர்க்கும் விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ள முன்புற ஃபைபர் கிளாஸ்களுடன் இந்த ஹெல்மெட்டுகள் ஃபெஹெர் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைப்பதாகத் தகவல்.

இத்தனை நன்மைகள் இருந்த போதும் இந்திய அரசாங்கம் ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐ தர நிர்ணயத்துக்கு உட்படாத பிற சர்வ தேச பிராண்ட் ஹெல்மெட்டுகளைத் தடை செய்து விட்டது. அவ்வகை ஹெல்மெட்டுகளைப் பயன்படுத்ததாதோருக்கு அதைக் குறித்து எவ்வித அதிருப்தியும் இருக்காது. ஆனால், முன்னரே சர்வ தேசத் தரம் வாய்ந்த ஹெல்மெட்டுகளைப் பயன்படுத்திப் பழக்கப்பட்டவர்களுக்கு அந்தத் தடை நிச்சயம் அதிருப்தி அளித்திருக்கும். இந்தியத் தர நிர்ணயத்துடன் ஒப்பிடுகையில் எவ்விதக் குறையும் காண முடியாத இந்த A/C ஹெல்மெட்டுகளின் அறிமுக விஷயத்தில் இந்திய அரசு எவ்வித நிலைப்பாடு எடுக்கவிருக்கிறது என்று இதுவரை அறியப்படவில்லை.

விலை விஷயத்தை ஒப்பிடுகையில் இந்திய இரு சக்கர வாகன ஓட்டிகள் என்ன தான் கொடும் வெயிலைக் கண்டு அஞ்சுகிறவர்களாக இருந்தாலும் 38,000 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கி அணிந்து கொண்டு வண்டி ஓட்டுவார்களா என்பது கேள்விக்குறி. ஏனென்றால் இங்கே வாகனங்களின் விலையே கிட்டத்தட்ட ஹெல்மெட் விலையை ஒட்டித்தான் எனும் போது இவ்வகை ஹெல்மெட்டுகளின் நோக்கம் பணக்காரர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தோற்றமளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com