ஹோம்மேட் டூத் பெளடர் தயாரிக்கலாமா? குறைந்த பட்சம் குழந்தைகள் நலனுக்காக!

பற்களைத் தூய்மை செய்து கொள்ள நாம் கண்மூடித்தனமாக இந்த பேஸ்டுகளை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறோம். அப்படியும் பற்சொத்தை, பற்குழிகள், வாய் துர்நாற்றமெல்லாம் வராமல் இருக்கிறதா?
ஹோம்மேட் டூத் பெளடர் தயாரிக்கலாமா? குறைந்த பட்சம் குழந்தைகள் நலனுக்காக!


ஒவ்வொருநாளும், தினமும் காலையில் எழுந்ததும் நாம் செய்யக்கூடிய முதல் வேலை பல் துலக்குவதாகத் தான் இருக்கும். பல் துலக்க இப்போது எல்லோருடைய வீடுகளிலும் டூத் பேஸ்டுகளைத் தான் பயன்படுத்துகிறோம். இந்தத் தலைமுறையினருக்கு பல் துலக்குதல் என்றாலே பேஸ்ட் தான் கண் முன் வரும். பேஸ்ட்... இந்தியாவில் சகஜமாகப் புழக்கத்திற்கு வந்து கிட்டத்தட்ட 30 அல்லது 40 வருடங்கள் இருக்கலாம். அதற்கு முன்பு... இந்தியர்களான நாம் விதம். விதமான பொருட்களைக் கொண்டு பற்களைச் சுத்தப் படுத்தி வந்திருக்கிறோம்.

ஆலும், வேலும் பல்லுக்குறிதி என நாலடியாரில் கண்டிருந்தபடி அந்தக் காலப் பெரியவர்கள் ஆலங்குச்சியையும், வேலங்குச்சியையும் பயன்படுத்தி பல்துலக்கினார்கள். அவர்களது பற்கள் திடமாகவும், ஆரோக்யமாகவும் இருந்தன. ஆனால், கிராமப் புறங்களில் பெண்கள் நாலாடியாரின் சொல்லைப் புறக்கணித்து செங்கல், அடுப்புக் கரிச்சாம்பல், தெள்ளு மணல் பொடி, உள்ளிட்ட பொருட்களை எல்லாம் பல் துலக்கப் பயன்படுத்திய காலகட்டத்தில் அறிமுகமானது கோபால் பல்பொடி. பயோரியா பல்பொடி, கோல்கேட் பல்பொடி உள்ளிட்டவை. இப்போது இந்தப் பற்பொடி வகைகள் எல்லாம் காலாவதியாகி எல்லோருமே ஏதோ ஒரு பேஸ்டில் வந்து நிற்கிறோம். அந்த டூத் பேஸ்ட்...

கோல்கேட், பெப்ஸோடெண்ட், க்ளோஸ் அப், விக்கோ வஜ்ரதந்தி, சென்ஸோடைன், சென்ஸோடெண்ட், பிராமிஸ், எனும் பிராண்டுகளில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

பற்களைத் தூய்மை செய்து கொள்ள நாம் கண்மூடித்தனமாக இந்த பேஸ்டுகளை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறோம். அப்படியும் பற்சொத்தை, பற்குழிகள், வாய் துர்நாற்றமெல்லாம் வராமல் இருக்கிறதா? என்றால் அதுவுமில்லை. நமது முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் இந்தத் தலைமுறையில் தான் பல் மருத்துவர்கள் பல்கிப் பெருகி நகரின் எல்லா மூலைகளிலும் பல் மருத்துவமனைகள் கிளைத்து முளைத்திருக்கின்றன. இப்படியான சூழலில் ஒரு மாற்றத்திற்காகவேனும் நாமே சொந்தமாக டூத் பெளடர் தயாரித்து அதைப் பயன்படுத்தி பார்த்தால் என்ன? என்று யாருக்கேனும் தோன்றினால் அந்த எண்ணத்தை தயவு செய்து சிரமம் கருதி நிராகரித்து விடாதீர்கள். டூத் பெளடர் தயாரிப்பது அப்படி ஒன்றும் பிரமாதமான வேலையெல்லாம் இல்லை. ஈஸி தான்.

தேவையான பொருட்கள்...

ஹோம்மேட் டூத் பெளடர் தயாரிக்க டிப்ஸ்...
நெல்லிக்காய் பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்
வேப்பிலைப் பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்
கிராம்பு பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்
லவங்கப்பட்டை - 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா/சமையல் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பிங்க் இமாலயன் சால்ட் - 1 டேபிள் ஸ்பூன்
டீ ட்ரி ஆயில் - சில துளிகள்
புதினா இலை பெளடர் - 1 டீஸ்பூன்

செய்முறை...

மேலே கூறப்பட்டுள்ள பெளடர்கள் அனைத்துமே சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஒருவேளை கிடைக்காவிட்டாலும் கவலையில்லை. இவை அனைத்துமே சமையற்கட்டில் பயன்பாட்டில் உள்ள பொருட்கள் தான், எனவே அவற்றை எடுத்துக் காய வைத்து அரைத்துப் பொடி செய்து கொள்ளலாம். அப்படிப் பொடி செய்தவற்றை மேலே சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு ஒரு பெளலில் இட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். இப்போது நீங்கள் விரும்பும் உங்களது டூத் பெளடர் தயார். இந்தப் பெளடரைப் பயன்படுத்தி தினமும் இருவேளை நீங்கள் பல் துலக்கி வந்தீர்களானால் புன்னகை அரசி கே ஆர் விஜயா போல உங்களது பல் பளீரிடும் என்பதோடு டூத் பேஸ்டுகளால் விளையும் பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம்.

ஏனெனில் இப்போது மார்கெட்டுகளில் கிடைக்கும் டூத்பேஸ்டுகளில் அதிக அளவில் கலந்துள்ள ஃப்ளோரைடு எனும் வேதிப்பொருள் உடல் நலனுக்கு உகந்ததல்ல.

கமர்சியல் டூத் பேஸ்டுகளில் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய சோடியல் லாரைல் சல்ஃபேட், ப்ரொப்பிலீன் கிளைக்கால், ஃபுளோரைடு மற்றும் செயற்கை இனிப்பூட்டி ரசாயனங்கள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. அவற்றினால் விளையும் பக்க விளையும் மிக மோசமானவை. அந்த ஆபத்தில் இருந்து நமது பற்களை காத்துக் கொள்ள வேண்டுமெனில் நாம் இனிவரும் காலங்களில் நமக்குத் தேவையான பற்பொடிகளை மேற்கூறிய விதத்தில் நாமே தயாரித்துக் கொண்டால் நல்லது.

மேற்கண்ட பொருட்களின் சிறப்புகள்...

நெல்லிக்காயில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது பல் மற்றும் வாயின் உட்புறக்காயங்களை எளிதில் ஆற்றக்கூடியது. அதுமட்டுமல்ல இதன் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி மைக்ரோபியல் குணங்களால் பற்குழிகள் வராமல் காக்கும்.

வேப்பிலைப் பெளடரில் இருக்கும் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி வைரல் தன்மையானது வாய்க்குள் இருக்கும் பாக்ட்டீரியாக்களை அழிக்கக் கூடிய திறன் கொண்டது.

அடுத்ததாக கிராம்பு மற்றும் லவங்கப் பட்ட இரண்டையும் நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தத் தேவையில்லை. பற்பொடி தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம். இரண்டுமே பற்களுக்கு மிகவும் நன்மை செய்யக்கூடியவை. கிராம்பு பல்வலி மற்றும் ஈறுகளில் வலி ஏற்பட்டால் அதைத் தீர்க்கும் திறன் கொண்டது.அதோடு அதன் ஆண்ட்டி செப்டிக் திறன் காரணமாக வாய்க்குள் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை களையும் சக்தியும் இதற்கு உண்டு.

லவங்கப் பட்டைக்கு பற்சொத்தை மற்றும் வாய்துர்நாற்றத்தை அகற்றும் திறன் உண்டு. அது மட்டுமல்ல இதன் இனிப்புச் சுவை குழந்தைகளுக்கு இந்தப் பற்பொடியை விரும்பத் தக்கதாக மாற்றும்.
பேக்கிங் சோடா வாயினுள் உமிழ்நீரில் இருக்கும் அமிலத்தன்மையைக் குறைத்து வாய்துர்நாற்றத்தை அகற்றும் என்பதோடு பற்களில் படிந்துள்ள கறையை நீக்கி வெண்மையாக்கவும் உதவும்.

உப்பு, வாயினுள் காயங்கள் இருப்பின் அதை ஆற்றும் திறன் கொண்டது. சிலர்... உப்பு தேவையில்லை என்று நினைத்தால் அதைத் தவிர்த்து விடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com