சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அடியேன் ஓட்டுக்கு காசு கொடுத்ததில்லை!: கடம்பூர் ஜனார்த்தனன்

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் 1929-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கடம்பூர் ஜனார்த்தனன். சென்னை

News image
Updated On :15 மார்ச் 2019, 7:59 pm

ஏ.வி. பெருமாள்

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் 1929-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கடம்பூர் ஜனார்த்தனன். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தபோது, அண்ணாவின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என மூன்று மாபெரும் தலைவர்களின் காலத்தில் கோலோச்சியவர்.
திருநெல்வேலி தொகுதியில் இருந்து 4 முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியையே சந்திக்காத பெருமைக்குரியவர். வாஜ்பாயின் அரசில் மத்திய இணை அமைச்சராகப் பணியாற்றியவர். 89 வயதை எட்டிவிட்டபோதிலும், அவ்வப்போது அதிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஜனார்த்தனன், தனது தேர்தல் அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டது: 
உங்களுடைய முதல் தேர்தல் அனுபவம் பற்றி... 
1952-இல் நடைபெற்ற முதல் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் என் பெயர் இடம்பெறாததால் என்னால் வாக்களிக்க முடியாமல் போனது. ஆனாலும் அந்தத் தேர்தலில் கட்சிப் பணியாற்றினேன். 1957 தேர்தலின்போதுதான் முதல்முறையாக வாக்களித்தேன்.  
அந்தக்கால தேர்தல் எப்படி? 
அப்போதெல்லாம் பெரிய கூட்டம் கூட்டும் வழக்கமில்லை. பிரமாண்ட பிரசாரங்கள் கிடையாது. வாக்குப் பதிவின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் அவரவர்  சின்னம் பொறித்த தனித் தனி பெட்டி வைக்கப்பட்டிருக்கும். நாம் வாக்களித்த சீட்டை அந்தப் பெட்டியில் போட வேண்டும். 1962-க்குப் பிறகுதான் அனைத்து சீட்டுகளையும் ஒரே பெட்டியில் போடும் வழக்கம் வந்தது.
தலைவர்களும், வேட்பாளர்களும் மக்களோடு மக்களாக வாழக்கூடியவர்களாகவும், மக்களுக்கு நெருக்கமானவர்களாகவும், எளிமையானவர்களாகவும் இருந்தார்கள். தொண்டர்களுக்கு மதிப்பளித்தார்கள். அதற்கு நல்ல உதாரணம்,  திருச்சி மாநாட்டில் இரு பெட்டிகளை வைத்து தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என தொண்டர்களின் எண்ணத்தை  அண்ணா அறிந்ததுதான். 
அப்போது கருத்து கணிப்பெல்லாம் கிடையாது. தேர்தல் நேரத்தில் பேருந்தில், ரயிலில், பொது இடங்களில் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என அண்ணா எங்களிடம் கேட்பார். அதை வைத்துத்தான் வெற்றி, தோல்வியை கணித்தார் அண்ணா.
4 முறை மக்களவை உறுப்பினரான உங்களின் தேர்தல் பிரசார உத்தி பற்றி... 
என்னுடைய பிரசார உத்தியே எனது எளிமைதான். வாக்கு சேகரிக்கச் செல்லும்போது, வாக்காளப் பெருமக்களே என கூறுவது கிடையாது. வாக்காள எஜமானர்களே என்றுதான் கூறுவேன். நான், எனக்கு என்ற வார்த்தைகளை உபயோகிக்கமாட்டேன். அடியேனுக்கு வாக்களியுங்கள் என்றுதான் கேட்பேன். மக்களோடு நெருக்கமாக இருக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதே ஜனநாயகத்தின் சாராம்சம். அதைத்தான் அடியேன் செய்தேன். மக்களவை உறுப்பினரான பிறகும்கூட நகரப் பேருந்தில், ரயிலில், ஆட்டோவில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்படி செல்கிறபோது தெரிந்தவர்களைப் பார்த்தால் நலம் விசாரித்துச் செல்வேன். அதுபோன்ற விஷயங்கள் அடியேனின் வெற்றிக்கு உதவின.
தேர்தல் பிரசாரத்தின்போது மறக்க முடியாத தருணம்?
1998 மக்களவைத் தேர்தலில் எனக்கு எதிராக திமுக சார்பில் நட்சத்திர வேட்பாளரான சரத்குமார் நிறுத்தப்பட்டார். விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் நான் பங்கேற்றபோது, தொண்டர்களிடம் கை குலுக்கிக் கொண்டிருந்தேன்.  அப்போது மேல் சட்டை அணியாத, தலையில் துண்டை கட்டிக்கொண்டு வந்த ஒருவர் என்னுடன் கை குலுக்கிவிட்டு, என் கையில் ஐம்பது ரூபாயைத் திணித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அப்போதே எனது வெற்றி உறுதியாகிவிட்டதாக நம்பினேன்.
ஓட்டுக்காக பணம் கொடுப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஓட்டுக்கு காசு கொடுக்கும் வழக்கம் காங்கிரஸ் காலத்திலேயே இருந்தது. அன்றைக்கு 25 காசு கொடுப்பார்கள். வாக்கைப் பெறுவதற்காக உணவு கொடுப்பது, டீ, காபி வாங்கிக் கொடுப்பது போன்ற பழக்கம் இருந்தது. அந்தப் பழக்கம் தொன்று தொட்டு வந்து,  நாளடைவில் பெரிய  பெரிய தொகையாக மாறிவிட்டது.
அடியேன் 4 முறை திருநெல்வேலி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனால் ஒரு முறைகூட ஓட்டுக்கு காசு கொடுத்ததில்லை. உணவு, தேநீர் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அடியேன் தேர்தலில் போட்டியிட்டபோது மக்கள்தான் ரூ.300, ரூ.400 என வீட்டிற்கே வந்து கொடுத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.