பாலாறு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்

விதிமுறைகளை மீறி ஆந்திர அரசு எழுப்பி வரும் தடுப்பணைகள், தொடரும் மணல் சுரண்டல் உள்ளிட்ட காரணங்களால் வறண்டு பாழான பாலாறு,
பாலாறு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்


விதிமுறைகளை மீறி ஆந்திர அரசு எழுப்பி வரும் தடுப்பணைகள், தொடரும் மணல் சுரண்டல் உள்ளிட்ட காரணங்களால் வறண்டு பாழான பாலாறு, நீராதாரம் பெறப்போவது எப்போது என்பதே வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் பல ஆண்டு கால கனவாகும்.
தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் மட்டும் நீடிக்கும் இந்தப் பிரச்னை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் இந்த மாவட்ட தொகுதிகளில் பெரும் கேள்வியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகி கர்நாடகம், ஆந்திரம் வழியாக வாணியம்பாடி அருகே தமிழகத்தில் நுழையும் பாலாறு, இங்குதான் அதிகபட்சம் 222 கி.மீ.தூரம் பயணிக்கிறது. வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக சென்று வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கும் பாலாறுக்கு 7 துணை ஆறுகளும் உள்ளன.
விதிமுறைகளை மீறி பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு 3 தடுப்பணைகளும், ஆந்திர அரசு சிறிதும், பெரிதுமாக கட்டியுள்ள 21 தடுப்பணைகளால் தமிழகத்தில் ஒருகாலத்தில் வற்றாத ஜீவநதியாக பாய்ந்த பாலாறு தற்போது வறண்டு பாழ்பட்டுள்ளது. அத்துடன், தொடரும் மணல் சுரண்டலால் பாலாற்றின் பெரும்பகுதி 20 முதல் 50 அடி ஆழத்துக்கு பள்ளங்களாகி விட்டன. இதனால், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் பாசன பரப்புகள் சுருங்கியதுடன், குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக வேலூர் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்க ஒகேனக்கல்லிலிருந்து குழாய் மூலம் காவிரி குடிநீரை விநியோகிக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
தொடரும் இந்தப் பிரச்னைகளை தீர்க்க தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பல ஆண்டு கனவு. ஆனால், தேர்தல் வரும் சமயங்களில் இந்தத் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாவதும், பிறகு கிடப்பில் போடப்படுவதும் தொடர் கதை. 
எனவே, பாலாறு விவகாரம் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிகளில் பெரும் கேள்வியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com