தடம் மாறுகிறாரா கேஜரிவால்?
தேசியப் பார்வையை நோக்கமாகக் கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்,


தேசியப் பார்வையை நோக்கமாகக் கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், தற்போது மக்களவைத் தேர்தலில் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துவதன் மூலம் அவர் தடம் மாறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2011-இல் தலைநகர் தில்லியில் தொடங்கி தேசத்தின் கடைக்கோடி வரை அதிர்வலைகளை ஏற்படுத்திய ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேயுடன் கைகோத்து மேற்கொண்ட போராட்டம் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் அறிமுகமானார் கேஜரிவால்.
அதன் பிறகு பிரபலமான அவர், பின்னர் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி தில்லியில் வலுவாக வேரூன்றச் செய்தார். அத்துடன், காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு சவால் விடும் நபராகவும் உயர்ந்தார்.
தில்லியில் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்து வந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸை 2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்தார்.
முன்னதாக, 2014 மக்களவைத் தேர்தலில், தேசியப் பார்வையில் நாடு முழுவதும் 400 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்ட கேஜரிவால் தலைமையிலானஆம் ஆத்மி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.
அவருடைய அண்மைக்கால நடவடிக்கைகள், குறிப்பாக, மக்களவைத் தேர்தலையொட்டி, அவரது பேச்சுகள் தேசியப் பார்வையில் இருந்த அவரது மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது. இதனால், தற்போதைய தேர்தலில் அவர் தில்லி மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாபில் மட்டும் போட்டியிடுவதாக சுருக்கிக் கொண்டுவிட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.
அண்மையில் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட மக்களவைத் தேர்தல் அறிக்கையில் லண்டன், பெர்லின், மாஸ்கோ, வாஷிங்டன் டிசி, ஒட்டாவா என உலகில் பிரபல நாடுகளின் தலைநகரங்களில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, நிலம்- நகரத் திட்டமிடல், போக்குவரத்து திட்டமிடல், வீட்டு வசதி, நகர நிர்வாகம், நியமனம், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்டவை நகரின் கட்டுப்பாட்டில் உள்ளன. தேசியத் தலைநகரான தில்லியில் மட்டும் அந்த நிலை இல்லாததால் வளர்ச்சிப் பணிகளையும், திட்டப் பணிகளையும் தில்லி அரசால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ் தில்லியிலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்த போது தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க வாய்ப்புகள் இருந்தும் அதைச் செய்யவில்லை என்றும் கேஜரிவால் விமர்சித்து வருகிறார்.
முழு மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் தில்லியை உலகத் தரமிக்க நகராக உருவாக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கல்லூரிகளில் தில்லிவாசிகளின் குழந்தைகளுக்கு 85% இட ஒதுக்கீடு பெறவும், வேலைவாய்ப்பில் தில்லிவாசிகளுக்கு 65% வாய்ப்பை உறுதிப்படுத்தவும் முடியும் என அவரும், அவரது கட்சியினரும் சமீப காலமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
முதலில் நாம் இந்தியர்; அதன் பின்னர்தான் நமது மத அடையாளங்கள். ஒற்றுமைதான் நமது பலம்; பிரிவினைக்கு இடம் தரக்கூடாது என்று பேசி வந்தவர் கேஜரிவால். ஆனால், தற்போதைய மக்களவைத் தேர்தலில் முழு மாநில அந்தஸ்து கோரிக்கையை கையில் எடுத்துள்ளதன் மூலம், அவரது பார்வை தில்லிக்குள் சுருங்கிவிட்டதோ என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசுகையில், தில்லி தமிழக மாணவர்களால் தில்லிவாழ் மாணவர்களின் உரிமை பறிக்கப்படுவதாக கேஜரிவால் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது.
மேலும், 12-ஆம் வகுப்பில் 90 சதவீத மதிப்பெண் எடுத்தாலும் இங்குள்ள பிரபல கல்லூரிகளில் தில்லி மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளது. தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைத்தால் இந்நிலை மாறிவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற பிரசாரப் பேச்சுகள், தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் தமிழர்கள் உள்ளிட்ட தென் இந்தியர்கள் கணிசமான அளவு வசித்து வருவதே இதற்குக் காரணம்.
இதுபோன்ற கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கேஜரிவால் கூறியுள்ளார். மேலும், தனது கருத்துக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தலைநகர் தில்லி என்பது பிற மாநிலங்களைப் போன்று ஒரு மொழி பேசுவோர், ஓர் இனம், ஒரு மதத்தைச் சேர்ந்தோர் வாழும் பகுதி அல்ல. தில்லியில் ஹிந்தி மொழி பேசும் மக்கள் மட்டுமின்றி, தமிழர், கேரளத்தவர், தெலுங்கு மொழி பேசுவோர், கன்னடர்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களும், குஜராத்தி, கர்வாலி, குமாங் மொழி பேசும் உத்தரக்கண்ட் மாநிலத்தவர்கள், பஞ்சாபி மொழி பேசுவோர், வடகிழக்கு மாநில மக்கள் என பலதரப்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மாநில மாணவர்களை சுட்டிக்காட்டிப் பேசுவது தேசியப் பார்வையிலிருந்து கேஜரிவால் தடம் மாறுகிறாரோ என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். மேலும், தேசிய அளவில் குறிப்பிடத்தக்க தலைவராக எதிர்பார்க்கப்பட்ட அரவிந்த் கேஜரிவால், மக்களவைத் தேர்தலில் அரசியல் லாபத்துக்காக மாநில பிரச்னைகளை முன்னெடுத்து, தனது ஆளுமையைக் குறைத்துக் கொள்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இதுபோன்ற உத்திகளைப் பயன்படுத்தியதால்தான் தமிழகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களின் பிரபல அரசியல் தலைவர்கள், தேசிய அரசியலில் வளர்ச்சி பெறாமல், மாநில அளவிலேயே குறுகிவிட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...